Published : 20 Aug 2018 09:05 AM
Last Updated : 20 Aug 2018 09:05 AM

கலக்கினார் பாண்டியா; கலங்கியது இங்கிலாந்து; 5 ஓவர்களில் 5 விக்.: வெற்றிப்பாதையில் இந்தியா

நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான நேற்று முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அபார இந்திய ஸ்விங் பந்து வீச்சுக்கு 161 ரன்களுக்குச் சுருண்டது. பிறகு இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்து 292 ரன்கள் முன்னிலையுடன் வெற்றிப்பாதையில் பயணிக்கிறது.

பாண்டியா 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளைச் சாய்த்து இங்கிலாந்துக்கு சோதனை அளிக்க அறிமுக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அருமையான 5 கேட்ச்களை எடுத்தார்.

2ம் நாள் ஆட்ட முடிவில் புஜாரா 33 ரன்களுடனும் விராட் கோலி 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

நேற்று காலை 307/6 என்று தொடங்கிய இந்திய அணி 22 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது. 7.5 ஓவர்கள்தான் தாக்குப் பிடிக்க முடிந்தது. ஆண்டர்சன் 64 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் பிராட் 72 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற வோக்ஸ் 3 விக்கெட்டையும் கோலி விக்கெட்டை ஆதில் ரஷீத்தும் கைப்பற்றினர்.

அதன் பிறகு இங்கிலாந்து 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய போது இஷாந்த் சர்மா, பும்ரா அபாரமாக வீசி எட்ஜ்களைப் பிடித்தனர், குறிப்பாக பும்ரா இங்கிலாந்து மட்டையாளர்களிடம் சில கேள்விகளையும் ஐயங்களையும் எழுப்பினார். ஆனால் பந்து ஸ்லிப் பீல்டர்களுக்கு இடையே புகுந்து சென்றது, அல்லது முன்னால் விழுந்தது, இப்படி அதிர்ஷ்டவசமாக ஆடினாலும் அலிஸ்டர் குக் (29), ஜெனிங்ஸ் (20) ஆகியோர் இந்தத் தொடரில் முதல் விக்கெட்டுக்காக முதல் அரைசதக் கூட்டணி அமைத்தனர்.

இந்நிலையில் இஷாந்த் ஷர்மா இன்னிங்சின் 12வது ஓவரை அதியற்புதமாக வீசினார், ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே குக்கிற்கு வீசிக் கொண்டேயிருந்தார். ஒரு எட்ஜ் பவுண்டரியும் சென்றது. அடுத்த பந்து மீண்டும் அதே காரிடாரில் வீச குக் எட்ஜ் செய்தார் ஆனால் ஸ்லிப்பில் நேரடியாக கையில் விழுந்த கேட்சை புஜாரா கையினூடாக தரைக்குத் தாரை வார்த்தார். ஆனால் குக் புஜாராவிடம் ‘நீ கேட்ச் விட்டால் வேறு ஆளா எனக்கில்லை’ என்று கூறுவது போல் அபாரமான அடுத்த பந்தை ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்தார்.

அடுத்த ஓவரின் முதல் பந்தில் பும்ராவின் ஷார்ட் மற்றும் சற்றே வைடு பந்தை ஜெனிங்ஸ் பேட்டைக் கொண்டு செல்லலாமா பேட்டை விலக்கிக் கொள்ளலாமா என்ற இரண்டக மனநிலையில் தொட்டே விட்டார், ரிஷப் பந்த் தன் 2வது கேட்சை அடுத்தடுத்த பந்துகளில் எடுத்து உற்சாகம் காட்டினார். இடையே அஸ்வின் ஒரு ஓவர் வீசி விட்டு பெவிலியன் சென்றார், என்ன காரணம் என்று தெரியவில்லை, பிறகுதான் தெரிந்தது, இடுப்புப் பகுதியில் தசைப் பிடிப்புக் காரணமாக அவர் பெவிலியன் சென்றார் என்று. அங்கு சென்று தினேஷ் கார்த்திக்குடன் அரட்டையில் ஈடுபட்டார்.

போப் இறங்கி மிக அழகான ஒரு ஆஃப் டிரைவ் பவுண்டரி அடித்தார். ஜோ ரூட் இறங்கி இஷாந்த் ஷர்மாவின் ஒரு ஓவரில் தடவு தடவென்று தடவினார். ஒரு எட்ஜ், பிறகு இன்ஸ்விங்கரில் தொடையில் வாங்கினார். பிறகு இன்ஸ்விங்கரில் ஒரு மாபெரும் எல்.பி. முறையீடு. பிறகு பும்ராவை ஒரு எட்ஜ் பவுண்டரி என்று இவர் தடவத் தடவ எதிர்முனையில் போப்பிற்கு கொஞ்சம் அழுத்தம் ஏறியது, அதனால் அவர் இஷாந்த் சர்மா அரிதாக வீசிய ஒரு லெக் திசை பந்தை பைன் லெக் திசையில் திருப்பி விட முனைந்து மட்டையில் லேசாகப் பட்டு பந்த்திற்கு இடது புறம் செல்ல ஒரு டைவ் அடித்து கேட்ச் எடுத்தார், போப் 10 ரன்களில் வெளியேறினார்.

பிறகும் ரூட் பும்ரா பந்தில் 3வது ஸ்லிப்புக்கு முன் பந்து விழ ஒரு எட்ஜ் செய்தார். எழும்பிய அடுத்த பந்தையும் தடவினார். ரூட்டுக்கு ஒன்றும் புரியவில்லை. இப்படியே இவர் ஆட பேர்ஸ்டோ ஒரு பவுண்டரியுடன் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையி ரூட் தடவல் இன்னிங்ஸில் 16 ரன்கள் எடுத்திருந்தபோது....

பாண்டியா வந்தார் இங்கிலாந்தை சரித்தார்... ரூட் சர்ச்சைத்தீர்ப்பு

ஆட்டத்தின் 25வது ஓவரில் பாண்டியா பந்து வீச அழைக்கப்பட்டார். முதல் பந்தையே வைட் ஆஃப் த கிரீசிலிருந்து பாண்டியா வீசி ஷார்ட் ஆஃப் லெந்தில் பந்தை காற்றில் உள்ளே கொண்டு வந்து பிட்ச் ஆனவுடன் வெளியே எடுத்தார். ரூட் எட்ஜ் செய்தார் ராகுல் அதனை முன்னால் கையை நீட்டிப் பிடித்தார். பிடித்தவுடன் ராகுல் விக்கெட் விக்கெட் என்று கொண்டாட ஜோ ரூட் இல்லை இல்லை அது கேட்ச் இல்லை என்று தலையை ஆட்டினார். ஆனால் களநடுவர் அவுட் என்று அடையாளம் காட்டி 3வது நடுவரை உதவிக்கு அழைத்தார். அதில் தெளிவாக எதுவும் தெரியவில்லை, பந்து தரையில் பட்டது போலும் இருந்தது, படுவதற்கு முன்பாக ராகுல் விரல்களைக் கொண்டு வந்து கேட்ச் எடுத்தது போலவும் தெரிந்தது.

ஆனால் விதிமுறைப்படிதான் 3வது நடுவர் அவுட் என்றார், ஏனெனில் சாட்சியங்கள் தெளிவாக இல்லாத போது களநடுவர் தீர்ப்பே செல்லுபடியாகும் அதன் படி களநடுவர் அவுட் கொடுத்ததற்கிணங்க அவுட் என்றார் 3வது நடுவர், அதே போல் களநடுவர் நாட் அவுட் என்றிருந்தால் அது நாட் அவுட்தான் அப்போது கோலியும் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் ரூட் கடுகடுப்புடன் முனகியபடியே சென்றார், இது நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் செய்கை என்று ஐசிசி ஆட்ட நடுவர் கவனத்தில் எடுத்துக் கொண்டிருப்பார் என்று கருதப்படுகிறது.

பிறகும் ஹர்திக் பாண்டியா மிக அருமையான லைன் அண்ட் லெந்தில் வீசி தொடர்ந்து சோதித்தார். அதன் பலனாக அவர் தனது ஒரே ஒவரில் ஜானி பேர்ஸ்டோ, கிறிஸ் வோக்ஸை வீழ்த்தினார். பேர்ஸ்டோவுக்கும் பந்து ஆஃப் அண்ட் மிடிலில் உள்ளே வந்து லேட் ஸ்விங் ஆகி செல்லும் வழியில் மட்டை விளிம்பில் பட்டுச் சென்றது, ராகுல்தான் இதையும் பிடித்தார். கிறிஸ் வோக்ஸ் பவுன்சரை ஹூக் செய்ய முயன்றார் தோளுக்கு வந்த பவுன்சர் அது, ஹூக் சரியாகச் சிக்கவில்லை, ரிஷப் பந்த் அருமையாகப் பிடித்தார்.

இடையில் பென் ஸ்டோக்ஸ் (10) மொகமது ஷமியின் லேட் அவுட் ஸ்விங்கருக்கு பந்தைத் தொட்டார், ராகுலிடம் கேட்ச் ஆனது. ஆதில் ரஷீத்தை பாண்டியா ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுக்கச் செய்ய பிராட் பாண்டியாவிடம் எல்.பி.ஆக பாண்டியா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரஷீத் ஆட்டமிழக்கும் போது இங்கிலாந்து 201 ரன்கள் பின்னிலை கண்டிருந்தது. ஆனால் கடைசியில் பட்லர் ஒரு டி20 பாணி இன்னிங்ஸை ஆடினார். ஷமியை ஒரு ராட்சச ஸ்கொயர் லெக் சிக்சும் பிறகு இஷாந்த் சர்மாவை ஒரு சிக்சும் அடித்து 32 பந்துகளில் 39 ரன்களைக் குவித்து பும்ராவிடம் ஆட்டமிழக்க இங்கிலாந்து 161 ரன்களுக்குச் சுருண்டது. பாண்டியா 28 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள். பும்ரா, இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகள், ஷமி 1 விக்கெட். ஷமி 10 ஓவர்களில் 56 ரன்கள் விட்டுக்கொடுத்து சொதப்பினார். இங்கிலாந்து 54/0 107 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து சரிந்தது, சரிந்து இழந்தது.

ராகுல், தவண் அதிரடித் தொடக்கம்:

168 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் ராகுல், தவண் மூலம் தன்னம்பிக்கைத் தொடக்கம் கண்டது.

 

இங்கிலாந்து 161 ரன்களுக்குச் சுருண்டதில் அதிர்ச்சியடைந்திருப்பது அதன் பந்து வீச்சில் தெரிந்தது, ஊக்கமற்ற பந்து வீச்சாக அது இருந்தது,

மாறாக ஷிகர் தவண், ராகுல் தன்னம்பிக்கையுடன் ஆடினர், குறிப்பாக ராகுல் 7 அபார பவுண்டரிகளுடன் 33 பந்துகளில் 36 ரன்கள் எடுக்க ஷிகர் தவன் தன் ஸ்ட்ரோக்குகளைக் காட்டத் தொடங்கினார், அவர் 63 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுக்க இந்திய அணி மீண்டும் ஒரு நல்லத் தொடக்கம் கண்டதோடு அதிரடி தொடக்கமாகவும் அது இருந்தது, 11 ஒவர்களில் 60 ரன்கள் வந்தது. அப்போது ஸ்டோக்ஸ் பந்து ஒன்று உள்ளே வந்து ராகுலின் பேடில் பட்டு ஸ்டம்புக்குத் திரும்பி பவுல்டு ஆனது.

ஷிகர் தவண் 44 ரன்களில் அடில் ரஷீத்தின் கூக்ளியை சரியாகக் கணிக்காமல் மேலேறி வந்தார் அப்படியே நின்றார், ஸ்டம்ப்டு ஆனார். அவர் மேலேறி வருவதைப் பார்த்த ஆதில் ரஷீத் கடைசி நொடியில் பந்தை கூக்ளியாக்கினார்.

முதல் விக்கெட்டுகாக 60 ரன்களும் பிறகு தவன், புஜாரா (33 நாட் அவுட்) கூட்டணி 51 ரன்களையும் விரைவு கதியில் சேர்த்தனர். கோலி 8 ரன்களுடன் களத்தில் இருக்க இந்திய அணி 124/2 என்று 292 ரன்கள் வலுவான முன்னிலையுடன் வெற்றிப்பாதையில் பயணிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x