Published : 02 Aug 2018 10:37 AM
Last Updated : 02 Aug 2018 10:37 AM

குவிண்டன் டி காக் அதிரடியில் துவண்ட இலங்கை: தென் ஆப்பிரிக்கா 2-0 முன்னிலை

தம்புல்லாவில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா இலங்கை அணியை வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.

முதலில் பேட் செய்த இலங்கை டிக்வெல்லா (69), மேத்யூஸ் (79) ஆகியோரது பேட்டிங்கினால் 56/3 என்ற நிலையிலிருந்து மீண்டு 244/8 என்று முடிந்தது, தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியின் குவிண்டன் டி காக் 78 பந்துகளில் 87 ரன்கள் வெளுத்துக் கட்ட தென் ஆப்பிரிக்கா 42.5 ஓவர்களில் 246/6 என்று வெற்றி பெற்று தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றது.

டி காக், ஹஷிம் ஆம்லா (43) இலக்கை விரட்டும் போது 91 ரன்கள் என்ற நல்ல தொடக்கம் கொடுக்க, 43 ரன்களில் ஆம்லாவை தனஞ்ஜயா வீழ்த்தினார். அய்டன் மார்க்ரம் (3) டுபிளெசிஸ் (49) ஆகியோரும் தனஞ்ஜயாவிடம் ஆட்டமிழக்க அவர் 60 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

டுபிளெசிஸ், டேவிட் மில்லரை அடுத்தடுத்து இழந்தது தென் ஆப்பிரிக்கா, ஆனால் தனஞ்ஜயாவின் பவுலிங் முடிந்த பிறகு இலங்கை பந்து வீச்சில் ஒன்றுமில்லை. டுமினி 32 ரன்களையும் முல்டர் 19 ரன்களையும் எடுக்க வெற்றி இலகுவானது.

முன்னதாக ஆஞ்சேலோ மேத்யூஸ் (79 நாட் அவுட்), டிக்வெல்லா (69) அரைசதங்கள் எடுக்க லுங்கி இங்கிடி, பெலுக்வயோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

லுங்கி இங்கிடி, 50 ரன்கள் கொடுத்து உபுல் தரங்கா, குஷல் மெண்டிஸ் ஆகியோரை தன் முதல் ஓவரில் அடுத்தடுத்து வீழ்த்தினார். டிக்வெல்லா 69 ரன்களில் பெலுக்வயோ பந்தில் பவுல்டு ஆனார். மேத்யூஸ் 79 ரன்கள் எடுத்து இறுதி வரை நாட் அவுட்டாகத் திகழ்ந்தாலும் அவருக்கு ஸ்டாண்ட் கொடுக்க ஆளில்லை. இலங்கையில் மற்ற வீரர்கள் 20 ரன்கள்கூட எடுக்கவில்லை.

இலங்கை அணி விட்ட கேட்சை நினைத்து வருந்தும், ஹஷிம் ஆம்லா 4 ரன்களில் குஷல் பெரேராவிடம் மிட்விக்கெட்டில் அடித்தபோது கேட்சை விட்டார் அவர். அதேபோல் இதற்கு 2 பந்துகள் சென்று ஆம்லா மட்டையில் பட்ட பந்து ஸ்டம்புக்கு உருண்டு சென்றது ஆனால் ஆம்லா கால்களில் தேங்கியது. டி காக்கிற்கு அகிலா தனஞ்ஜயா கேட்சை விட்டார்.  2 பந்துகள் சென்று டி காக் ராஜிதாவுக்கு ஒரு கடின கேட்ச் வாய்ப்பைக் கொடுத்தார் பிடிக்க முடியவில்லை.

ஆட்ட நாயகன் குவிண்டன் டி காக்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x