Published : 04 Jul 2018 10:47 AM
Last Updated : 04 Jul 2018 10:47 AM
உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியின் நேற்றைய இறுதி 16 சுற்றில் கொலம்பியாவுடன் இங்கிலாந்து ஆட்ட நேரத்தில் 1-1 என்று டிரா செய்ய பெனால்டி ஷூட் அவுட் முறைக்குச் சென்ற ஆட்டத்தில் இங்கிலாந்து 4-3 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று காலிறுதியில் ஸ்வீடனைச் சந்திக்கிறது. ஸ்வீடன் மற்றொரு ஆட்டத்தில் சுவிட்ஸர்லாந்தை 1-0 என்று வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
2006-க்குப் பிறகு உலகக்கோப்பைக் காலிறுதிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது. மேலும் உலகக்கோப்பையில் முதல் முதலாக பெனால்டி ஷூட் அவுட்டில் இங்கிலாந்து வெற்றி சாதித்துள்ளது.
இங்கிலாந்தின் ஹாரி கேன் 57வது நிமிடத்தில் பெனால்டி மூலம் கோல் அடித்து தனது 6வது கோலை இந்த உலகக்கோப்பையில் அடித்துள்ளார் ஹாரி கேன்.
கொலம்பியா அணிக்குப் பெரிய பின்னடைவு அதன் பிரதான வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் காயமடைந்ததே.
பெனால்டியில் நடந்தது என்ன?
இங்கிலாந்துக்கு பெனால்டி ஷூட் அவுட் என்பது பதற்றமான ஒரு விஷயம், அணி மேலாளர் சவுத் கேட் மிகவும் பதற்றமாக சில வார்த்தைகளை ஷூட் அவுட் முன் வீரர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
முதலில் கொலம்பியாவின் ஃபால்கோ முதல் பெனால்டியை இங்கிலாந்து கோல் கீப்பரைத் தாண்டி அடித்தார் கொலம்பியா 1-0.
இங்கிலாந்தின் ஹாரி கேன் அடுத்ததாக கோல்வலையைத் தாக்க 1-1,
அடுத்து கொலம்பியாவின் குவாட்ராடோ நேராக உள்ளே செலுத்த கொலம்பியா 2-1
அடுத்து ராஷ்போர்டும் தவறு செய்யவில்லை ஆட்டம் 2-2.
கொலம்பியாவின் மியூரியல் கோலுக்குள் செலுத்தினார் கொலம்பியா 3-2.
இங்கிலாந்து வீரர் ஜோர்டான் ஹெண்டர்சன் அடித்த பக்கவாட்டு பாத உதையை ஆஸ்பினோ இடது புறம் பாய்ந்து தட்டிவிட கொலம்பியா 3-2 முன்னிலை.
ஆனால் கொலம்பியாவின் யூரிபி மேலே கோல் போஸ்ட்டில் அடிக்க கொலம்பியா 3-2.
இங்கிலாந்தின் டிரிப்பியர் டாப் கார்னரில் கோலுக்குள் திணிக்க 3-3
கொலம்பியாவின் கார்லோஸ் பாக்காவின் ஷாட்டை இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்ஃபோர்டு தடுக்க 3-3.
இங்கிலாந்தின் எரிக் டயர் தாழ்வாக கோல் நோக்கி அடிக்க ஆஸ்பினோ வலது புறம் டைவ் அடித்தார் பந்து அவர் விரல்களில் பட்டது ஆனால் பந்து கொல் 4-3, இங்கிலாந்துக்கு வெற்றி, காலிறுதிக்குத் தகுதி பெற்றது.
விறுவிறுப்பான ஆட்டமாக இருந்தாலும் கடும் பவுல்கள், மோதல் நிரம்பிய ஆட்டம்:
ரக்பி அல்லது மல்யுத்தத்தை பெரும்பாலும் நினைவூட்டிய தகராறுகள் நிரம்பிய இந்த ஆட்டத்தில் மொத்தம் 36 ஃபவுல்கள், 8 மஞ்சள் அட்டைகள். நடுவர் மார்க் க்ரெய்கர் நேற்று ஒரு 8-9 பெக்குகளைப் போட்டால்தான் அவருக்கு இந்த ஆட்டத்தை மறக்க முடியும் என்ற அளவுக்கு கடும் மோதல் நிரம்பிய ஆட்டமாக அமைந்தது.
5வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ரஹீம் ஸ்டெர்லிங்கின் ஓட்டத்தைத் தாங்க முடியாத கொலம்பிய வீரர் யெரி மினா பந்தைக் ‘கை’யாண்டார், கார்னர் வாய்ப்பு கிடைத்த்து, கார்னர் ஷாட்டில் ஆஷ்லி யங்கின் முயற்சியை கொலம்பிய கோல் கீப்பர் ஆஸ்பினாவுக்கு எந்த வித குடைச்சலையும் கொடுக்கவில்லை.
இங்கிலாந்து, கொலம்பிய ரசிகர்களின் கடும் ஆரவாரங்களுடன் ஆட்டம் தொடங்கிய போது 16வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு உண்மையான வாய்ப்பு கிடைத்தது. கெய்ரன் ட்ரிப்பியர், ஜெஸி லிங்கர்டுடன் கூட்டணி போட்டு வலது புறம் வேகமாக எடுத்துச் சென்று ஹாரி கேனுக்கு கிராஸ் செய்ய அவரது தலை முட்டல் வெளியே சென்றது.
22வது நிமிடத்தில் கொலம்பியாவின் சாண்டியாகோ ஆரிஸ், யுவான் குவாட்ராடோ இணைந்து இடது புறம் நிறைய இடம் கிடைக்க பந்தை எடுத்துச் சென்று உள்ளே நுழைய அங்கு ஃபால்கோவின் முயற்சியை ஜான் ஸ்டோன் மறித்தார்.
பிறகு இடைவேளைக்கு 5 நிமிடங்கள் முன்பாக இங்கிலாந்து வீர்ர் ஜோர்டான் ஹெண்டர்சனை கொலம்பியாவின் வில்மர் பாரியோஸ் தலையால் இடிக்க இங்கிலாந்து ஃப்ரீகிக் கேட்டது, ஆனால் நடுவர் மார்க் கிரெய்கர் மஞ்சள் அட்டை மட்டுமே காண்பித்தார். பிறகு ஸ்டாப்பேஜ் நேரத்தில் லிங்கர்ட் அடித்த ஷாட் ஒன்று மேலே சென்றது. இவையெல்லாம் வாய்ப்புகள்.
ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு ஃப்ரீ கிக் கிடைத்தது, ட்ரிப்பியரின் ஷாட் வீரர்கள் சுவருக்கு மேல் சென்றதில் எந்த ஒரு பயனும் இல்லை.
இங்கிலாந்து பெனால்டியில் முதல் கோல்: ஹாரி கேனின் 2018 உ.கோப்பை 6வது கோல்
இடைவேளை வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இடைவேளைக்குப் பிறகு தொடக்க நிமிடங்களில் சாண்டியாகோ ஆரிஸ் ஃபவுல் செய்ய இங்கிலாந்துக்கு ஃப்ரீ கிக் கிடைத்தது. யங்கின் ஷாட் தலையால் முட்டப்பட்டு கோட்டுக்கு வெளியே அனுப்பப்பட கார்னர் வாய்ப்பு இங்கிலாந்துக்கு கிடைத்தது. இந்த நடைமுறையில் கார்லோஸ் சாஞ்சேஸ் இங்கிலாந்தின் ஹாரி கேனை ரக்பி முறையில் இடைமறிக்க நினைத்தார், நடுவருக்கு வேறு வழியில்லை பெனால்டி வாய்ப்பு இங்கிலாந்துக்கு. அதனை ஹாரி கேன் கோலாக மாற்றினார் இங்கிலாந்து 1-0. ஹாரி கேனின் 6வது கோலாகும் இது. இதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்தின் டெலி ஆலியின் தலையால் முட்டிய பந்து ஒன்று துரதிர்ஷ்டவசமாக கோலிலிருந்து தப்பியது.
காயமடைந்த ஸ்ட்ரைக்கர், கோல் ஸ்கோரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் பெஞ்சிலிருந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருக்க கொலம்பியர்களால் இங்கிலாந்தின் தடுப்பணையை உடைக்க முடியவில்லை. 90 நிமிட ஆட்டத்துக்கு 10 நிமிடங்கள் முன்னதாக குவாட்ராடோவின் நீண்ட தூர கோல் முயற்சியும் முற்றிலும் விரயமானது.
ஆட்டத்தின் 93வது நிமிடத்தில் 25 அடியிலிருந்து கொலம்பிய வீரர் யூரிபி அடித்த லாஃப்டட் ஷாட் வலது புறம் கோல் மேல் மூலையை நோக்கி உள்ளுக்குள் சென்று கொண்டிருந்த போது இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்ஃபோர்டு அருமையாக எம்பித் தட்டி விட்டார். இதன் விளைவாக கொலம்பியாவுக்குக் கார்னர் வாய்ப்புக் கிடைத்தது. வந்தப் பந்தை மெகுவய்ருக்கும் மேல் எம்பி கொலம்பிய வீரர் மினா வலுவாக பந்தை முட்ட பந்து தரையில் பட்டு ட்ரிப்பியருக்கும் மேல் எழும்பி கோலுக்குள் சென்றது, கொலம்பியா சற்றும் எதிர்பாராது 1-1 என்று சமன் செய்தது, இந்த உலகக்கோப்பையில் எப்போதும் கடைசி நிமிடங்களில் ஏதாவது திருப்பம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
கூடுதல் நேரத்தின் 6வது நிமிடத்தில் இடது புறம் கொலம்பிய வீரர் மொஜிகா வேகமாகச் சென்று ஒரு அபாரமான கிராஸ் செய்ய ஃபால்கோ அதனை தன் முன் காலால் ஒரு குத்து குத்த முயன்றார், பிக்போர்டு அருமையாகத் தடுத்தார். கொலம்பியா கூர்மையாக இல்லாவிட்டாலும் அபாயகரமாகத் திகழ்ந்தது. 13வது நிமிடத்திலும் மினா, சான்சேஸ் இருவரும் இங்கிலாந்து தடுப்பு வீரர்களைத் தாண்டி காற்றில் வந்த பந்துக்கு எம்பி தலையால் முட்ட பந்து கோல் போஸ்ட்டுக்கு மேலே சென்றது. கூடுதல்நேர 2ம் பாதியில் இங்கிலாந்தின் லிங்கர்ட் அடித்த பாஸை வார்டி ஓடிக்கொண்டே 15 அடியிலிருந்து கோல் நோக்கி அடித்தார், ஆனால் பாரியோஸ் மிக அபாரமாக அதைத் தடுத்தார். அதன் பிறகும் 23ம் நிமிடத்தில் இங்கிலாந்துக்கு கிடைத்த வாய்ப்பு வைடாகச் சென்றது கூடுதல் நேரத்திலும் 1-1 இக்கட்டு உடையவில்லை.
ஆட்டம் பெனால்ட்டிக்குச் சென்றது, இதில் எரிக் டயர் இங்கிலாந்துக்கு 4வது கோலை அடிக்க இங்கிலாந்து 4-3 என்று வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT