Published : 23 Jul 2018 06:20 PM
Last Updated : 23 Jul 2018 06:20 PM
நீதிபதி லோதா கமிட்டி சிலபல சீர்த்திருத்தங்களை பிசிசிஐயில் வலியுறுத்தி அதற்காக உச்ச நீதிமன்றம் நியமித்த நிர்வாகிகள் கமிட்டியும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் லோதா கமிட்டியின் முக்கிய வலியுறுத்தலான ‘வெளிப்படைத்தன்மை’ என்பது முன்பை விடவும் சற்று பின்னடைவு கண்டுள்ளதற்கு விருத்திமான் சஹா காய விவகாரம் ஓர் உதாரணம்.
பிசிசிஐ ஐபிஎல் டி20 லீகை அறிவித்த பிறகே பெரிய அளவில் பணப்புழக்கம் ஏற்பட்டு சுமார் 3, 4 மடங்கு அதன் வருவாய் அதிகரித்தது, இதனால் அதில் அதிகாரப்போட்டிகளும், இரட்டைப்பதவிகளும், துஷ்பிரயோகங்களும், நிதியளவில் முறையற்ற நடைமுறைகளும் அதிகரித்ததையடுத்து 2013-ம் ஆண்டு ஐபிஎல் சூதாட்டச் சர்ச்சையை ஒட்டி லோதா கமிட்டி பல சீர்த்திருத்தங்களை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றத்தை நாடி, உச்ச நீதிமன்றமும் இதற்காகவென்றே பிரத்யேகமாக் வினோத் ராய் உள்ளிட்டோர் அடங்கிய நிர்வாகிகள் கமிட்டி அதாவது கமிட்டி ஆஃப் அட்மினிஸ்ட்ரேட்டர்ஸ் (சிஓஏ) அமைப்பை உருவாக்கியது.
ஆனால் அதன் பிறகு பிசிசிஐ நிர்வாகத்துக்கும் சிஓஏவுக்கும் நிழல் மோதல் தொடங்கியதும் பல்வேறு விதமாக செய்திகளாக வெளிவந்தது.
இந்நிலையில் விருத்திமான் சஹா கடந்த 6 மாதங்களாக அவரது கிரிக்கெட் வாழ்வையே கேள்விக்குட்படுத்தும் தோள்பட்டைக் காயத்துடன் இருந்திருக்கிறார் என்ற செய்தி பிசிசிஐ தரப்பிலிருந்து அதிகாரப் பூர்வமாக வெளிவராமல் மறைக்கப்பட்டுள்ளது தற்போது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளதோடு பிசிசிஐ செயல்பாடுகள் குறித்த கடும் ஐயங்களையும் சந்தேகங்களையும் எழுப்புகிறது.
தோள்பட்டைக் காயத்துக்காக அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அவர் பலமுறை வந்து சென்றதும் 3 டாக்டர்களை அவர் சந்தித்ததும் தற்போது தெரியவந்துள்ளது. அவருக்கு 3 ஊசிமருந்துகள் கொடுக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இப்போது அவருக்கு அறுவை சிகிச்சைத் தேவைப்படுகிறது, இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அவர் 2 மாதங்கள் கிரிக்கெட் பக்கம் தலைவைத்துப் படுக்கக் கூடாது, ஓராண்டு அவரால் மீண்டும் உயர்மட்ட கிரிக்கெட் பக்கம் திரும்ப முடியாது.
ஆனால் இங்கிலாந்து தொடர் அணி அறிவிக்கப்பட்ட போது சஹா தேர்வு செய்யப்படாததற்கு இந்தத் தோள்பட்டைக் காயத்தை பிசிசிஐ தெரிவிக்கவில்லை. ஐபிஎல் கிரிக்கெட்டின் போது அவர் கட்டைவிரலில் காயமடைந்ததுதான் காரணம் என்றே பலரும் நினைக்க நேரிட்டது.
கடைசியில் இது விவகாரமாக பிசிசிஐ தன் இணையதளத்தில் சஹா காயத்தின் நிலவரத்தை வெளியிட்டது, ஆனால் அது அதிகாரபூர்வமாக ஒருவராலும் கையெழுத்திடப்படவில்லை அதில் காயத்தின் தீவிரம் பற்றிய விவரங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் வீரர்கள் காயத்தை நேர்மையாக அணித்தேர்வுக்குழுவிடம் தெரிவிக்க வேண்டியவர் பிசிசிஐ பொதுமேலாளர் பதவி வகிக்கும் சபா கரீம்தான். தேர்வுக்குழு கூடும் முன்பே இவர்தான் வீரர்கள் உடற்தகுதி விவரங்களை அளிக்க வேண்டும். ஆனால் இவர் ஏன் மவுனமாக இருந்தார் என்பது இன்னொரு புதிர்.
இன்னொருவர் அணித்தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத், இவரும் கட்டை விரல் காயத்தையே பிரதானப்படுத்தினாரே தவிர ஓராண்டுக்கு கிரிக்கெட் பக்கம் சஹா தலைவைத்துப் படுக்க முடியாது போகும் தோள்பட்டைக் காயத்தைப் பற்றி தெரிவிக்கவில்லை.
ஊடகங்களின் தகவல்களின்படி கடந்த ஜனவரியிலேயே சஹாவுக்கு தோள்பட்டைக் காயம் சீரியசாக இருந்திருக்கிறது என்பதே. ஏன் சஹாவின் காயத்தை மறைக்க இத்தனைப் பிரயத்தனங்கள் என்பதே புரியாத புதிராக உள்ளது.
இதே போல்தான் ஒவ்வொரு வீரரின் காயத்துக்குப் பின்னணியிலும் புரியாத ஏதோ ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற சந்தேகங்கள் இப்போது எழத்தொடங்கியுள்ளன.
வீரர்கள் தேர்வுக்கு நியாயமான எந்த அடிப்படையும் வழங்காமல் அம்பாத்தி ராயுடுவை ஒழிக்க யோ-யோவை காரணமாக்கியதும் ரெய்னாவைத் தேர்வு செய்ய இதே யோ-யோவையே காரணமாக்கியதும், மொகமது ஷமி யோ-யோவினால் ஒழிக்கப்பட்டதன் பின்னணியிலும் மர்ம முடிச்சுகள் இருப்பதாகவே ஐயம் எழுகிறது.
யாரைக்காக்க, எந்த நலன்களைக் காக்க, எவரது நலன்களைக் காக்க யாரால் இந்த முடிவுகள் எடுக்கப்படுகின்றன? உண்மைகள் மறைக்கப்படுகின்றன? தோனி, கோலி போன்றோரது காயங்களை மறைக்க முயன்றாலாவது ‘வணிக நலன்கள்’ என்று நாம் ஒருவாறாக யூகிக்க முடியும். ஆனால் விருத்திமான் சஹாவின் காயத்தை மூடி மறைக்க இவ்வளவு பிரயத்தனம் ஏன் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி கடும் லாபி அணியாக மாறிக் கொண்டிருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது. தென் ஆப்பிரிக்காவில் 2வது டெஸ்டில் புவனேஷ்வர் குமார் உட்கார வைக்கப்பட்டது, தொடர் முழுதும் உமேஷ் யாதவ் அணியில் இடம்பெறாதது, இங்கிலாந்திலும் புவனேஷ்வர் குமாரின் காயம் பற்றிய உண்மையான நிலவரங்கள் மறைக்கப்பட்டு பிறகு உடல் தகுதி இல்லாத நிலையில் 3வது ஒருநாள் போட்டியில் ஆடவைக்கப்பட்டார். கடைசியில் இப்போது டெஸ்ட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைப்பற்றி பிசிசிஐ மூத்த அதிகாரியிடம் செய்தி நிறுவனம் கேள்வி எழுப்ப ”என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? ரவிசாஸ்திரியிடம் கேளுங்கள்” என்று காட்டமாக பதிலளித்ததும் செய்தியானதும் கவனிக்கத்தக்கது.
இங்கிலாந்தில் தற்போது தினேஷ் கார்த்திக்கு டி20 போட்டிகளில் வாய்ப்பு வழங்காதது, காலம்போன ரெய்னாவைப் பிடித்துத் தொங்குவது, தோனியைத் தூக்குவதற்குப் பதிலாக கே.எல்.ராகுலை உட்கார வைப்பது என்று இந்திய அணி கடும் சந்தேகங்களைக் கிளப்பும் ஓர் அணியாக மாறிக் கொண்டிருக்கிறது. யோ-யோ டெஸ்ட்டை மட்டும் பிரதானமாக வைத்து இன்று வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள், ஆனால் வீரர்களின் பேட்டிங், பவுலிங் திறனைக் கருத்தில் கொள்வதில்லை உதாரணமாக தோனி ஒருநாள் போட்டியில் சதமடித்து ஏறக்குறைய ஓராண்டு ஆகிறது அரைசதம் அடித்து 6 மாதங்களாகிறது.
இங்கிலாந்துக்கு 2வது 3வது ஒருநாள் போட்டிகளில் மோசமான பேட்டிங்கினால் அதிகமான பந்துகளை சாப்பிட்டு குறைவான ரன்களை எடுத்தார், இது மூத்த முன்னாள் வீரர் கவாஸ்கர் முதல் கங்குலி, சேவாக் வரை அனைவராலும் விமர்சிக்கப்பட்டது. ஆனால் யோ-யோ டெஸ்ட்டை வைத்து அவர் தேர்வு செய்யப்படுகிறார். கடந்தகால சாதனைகளை ஒப்பிடும்போது ஒருநாள் போட்டிகளில் தோனி எந்த விதமான குறிப்பிடத்தக்க வகையில் பேட்டிங் பங்களிப்புச் செய்யவில்லை. ஆனால் ஐபில் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட சஞ்சு சாம்சன், ராயுடு, தினேஷ் கார்த்திக் போன்றோருக்கு சீரான முறையில் வாய்ப்புகளை வழங்கவில்லை.
தோனியின் பேட்டிங் சொதப்பல்கள் பற்றியோ, கோலியின் அதிர்ச்சிகரமான அணித்தேர்வு முடிவுகளையோ, எதையுமே யாரும் கேள்வி கேட்க முடியாத ஒரு நிலைக்கு அணி சென்று கொண்டிருக்கிறது. பத்திரிகைகளுக்கு இவர்களின் கேளிக்கைகள், பொழுதுபோக்குகள் செய்திகளாக மாறி வருகின்றன. பிசிசிஐ-யின் பணபலம் அனைத்தையும் விழுங்கி வருகிறது, ஐசிசியின் எதிர்காலப் பயணத்திட்டம் முதல் அனைத்தும் பிசிசிஐ-யின் மறைமுகமான கட்டுப்பாட்டில் இயங்குவதான தோற்றமே ஏற்பட்டுள்ளது.
இது ஆபத்தான போக்காகும். இந்த ஆபத்தான போக்கு பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அனில் கும்ப்ளேவை அநியாயமாக விரட்டியடித்ததிலிருந்து தொடங்கியுள்ளது, மேலும் நடப்புப் பயிற்சியாளர் முந்தைய அணிகளின் வெற்றிகளை குறைத்துப் பேசுவதும் மட்டந்தட்டுவதுமாக மாறியுள்ளது.
ஆஸ்திரேலிய அணி சமீபமாகக் கண்ட பின்னடைவு வெறும் பால் டேம்பரிங் மட்டுமல்ல, அணியில் ஸ்மித், வார்னர் உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு வானளாவிய அதிகாரம் வழங்குவது பயிற்சியாளர் டேரன் லீ மேன் கண்களையே மறைத்து விட்டு இன்று அந்த அணி அழிவின் முதற்படியில் நின்று கொண்டிருக்கிறது என்பதைத்தான் கிரிக்கெட் உலகம் கண்டு வருகிறது.
எனவே பிசிசிஐ மேலும் நம்பகமான அமைப்பாகச் செயல்படுவதற்கான முன்னெடுப்பை யார் எடுப்பார்கள் என்பது உண்மையான கிரிக்கெட்டை எதிர்நோக்கும் நலம்விரும்பிகளிடையே ஒரு கவலையாகவே மாறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT