Published : 26 Aug 2014 09:27 PM
Last Updated : 26 Aug 2014 09:27 PM

2வது ஒருநாள் போட்டி: இந்திய அணியின் அணுகுமுறையில் மாற்றம் தேவை

முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக டாஸ் போடுவதற்கு முன்பே கைவிடப்பட்ட நிலையில் நாளை கார்டிஃப் மைதானத்தில் 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகிறது.

மதியம் 3 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. இரண்டாவது இன்னிங்சின் போது மழை வரலாம் என்று வானிலை கணிப்புக் கூறுகிறது. ஆனாலும் போட்டியின் முடிவு பாதிக்காத வகையிலேயே இயற்கைக் குறுக்கீடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் போட்டிகளில் பெற்ற தோல்விகளுக்குப் பதிலடி கொடுக்கும் நேரம் வந்து விட்டது என்று கூறினார் சுரேஷ் ரெய்னா. அதற்குத் தக்க அணுகுமுறை இந்திய அணியிடன் இருக்குமா என்பதை நாளைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாடாத ஷிகர் தவன் ஒருநாள் போட்டிகளில் நிச்சயம் நிரூபிக்க விரும்புவார். இங்கிலாந்து பவுலிங்கில் ஜேம்ஸ் ஆண்டர்சன் இருக்கிறார். கிட்டத்தட்ட மெக்ரா போல் வீசும் ஸ்டீவ் ஃபின் இருக்கிறார்.

ஆகவே ஸ்விங் நிறைய இருக்கும். இந்திய அணியில் தங்கள் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள அரைசதங்களை எடுத்துக் கொள்வோம் என்ற ரீதியில் மந்தமாக விளையாடினால் முடிவு எதிர்மறையாகவே இருக்கும்.

ஆகவே ஷிகர் தவன், ரோகித் சர்மாவில் யாராவது ஒருவர் தாக்குதல் ஆட்டத்தை ஆட முடிவு எடுப்பது அவசியம். 10 ஓவர்களில் விக்கெட்டுகளை இழக்காமல் 60 அல்லது 65 ரன்களை எடுத்துவிட்டால், விராட் கோலி வந்து இறுதி வரை ஆடி நல்ல ஸ்கோரை எட்ட அடித்தளம் அமைக்கப்படும். ரஹானே, தோனி, ரெய்னா, ஜடேஜா பவர் பிளேயிலிருந்து கடைசி 15 ஓவர்கள் தருணத்தில் இறங்கினால் ஸ்கோர் நிச்சயம் 280-290 ரன்கள் என்ற இலக்கை எட்டும் என்பது உறுதி.

ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டீவன் ஃபின் ஆகியோரை அடித்து நொறுக்கினால் இங்கிலாந்து நொறுங்கி விடும். ஆனால் இந்திய அணி மொயீன் அலியிடம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஆனால் அவர் இந்த வடிவத்தில் ரெய்னா, தோனி, கோலி ஆகியோருக்கு வீசுவது கடினமே. ஏனெனில் இருபுறமும் புதிய பந்தில் வீசப்படுவதால் அவரது ஸ்பின் எடுபடாமல் போக வாய்ப்பிருக்கிறது.

பந்துவீச்சைப் பொறுத்தவரை மொகமது ஷமி நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இங்கிலாந்து பிட்ச்களில் சோபிக்காத ஒரே வேகப்பந்து வீச்சாளர் என்ற அவப்பெயர் அவருக்கு ஏற்பட்டுள்ளதை நிச்சயம் அவர் மாற்றி அமைத்தாக வேண்டும்.

அஸ்வின், ஜடேஜா ஆகியோரில் ஜடேஜா நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. ஒருவேளை ஸ்டூவர்ட் பின்னியை களமிறக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இங்கிலாந்து துவக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஒரு அதிரடி வீரர். அவரை தொடக்கத்தில் அதிரடியாக ஆடவிட்டால் இயன் பெல், இயன் மோர்கன், ஜோ ரூட், ஜோஸ் பட்லர் அதிரடியைத் தொடர நிச்சயம் வாய்ப்பிருக்கிறது. இந்தியப் பந்து வீச்சில்தான் பலவீனம் உள்ளது.

தோனி தனது வழக்கமான பாணியில் ஹேல்ஸை நிறுத்த அஸ்வினை தொடக்கத்தில் பந்து வீச அழைக்கலாம். அதே போல் பேட்டிங்கிலும் டவுன் ஆர்டர்களை மாற்றி ரெய்னாவை முன்னதாக களமிறக்கிப் பார்க்கலாம்.

ஃபீல்டிங், கேட்சிங் மிக முக்கியம். ரவி சாஸ்திரியுடன் புதிதாக வந்துள்ள பயிற்சியாளர்களுக்கு இதில் சவால் காத்திருக்கிறது. கடந்த முறை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் இந்தியா படுதோல்வி அடைந்து அங்கிருந்து வந்தது. இந்த முறை அவ்வாறு ஆக வாய்ப்பில்லை என்றாலும், ஒருநாள் போட்டித் தொடரை தோனியும் அவரது சகாக்களும் எந்த மனநிலையில் அணுகப்போகின்றனர் என்பதைப் பொறுத்து வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்படும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x