Published : 12 Jul 2018 11:10 AM
Last Updated : 12 Jul 2018 11:10 AM

மரியோ மன்ட்ஸூ‘கிக்’ வெற்றி கோல்: முதல் முறையாக உ.கோப்பை இறுதியில் குரேஷியா; இங்கிலாந்து கனவு  தகர்ந்தது

சுமார் அரைநூற்றாண்டுக்குப் பிறகு உலகக்கோப்பைக் கால்பந்து இறுதித் திருவிழாவில் களம் காணும் இங்கிலாந்தின்  கனவை குரேஷியா நேற்று தகர்த்தது. 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வெளியேற்றியது. இதன் மூலம்  உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு குரேஷியா முதன் முதலில் முன்னேறியுள்ளது.

ஆட்டம் தொடங்கி 5-வது நிமிடத்திலேயே இங்கிலாந்தின் கெய்ரன் ட்ரிப்பியர் முதல் கோலை அடித்து முன்னிலை  கொடுத்தார், அதன் பிறகு குரேஷியா ஆட்டத்திலேயே இல்லை, 67 நிமிடங்கள் வரை ஒன்று இங்கிலாந்து 1-0 வெற்றி  இல்லையெனில் இங்கிலாந்து இன்னொரு கோலை அடிக்கும் குரேஷியா கோல் அடிக்குமாறு ஆடவில்லை என்ற  பிம்பத்தையே இந்த ஆட்டம் அளித்தது.

ஆனால் திடீர் எழுச்சியாக 68வது நிமிடத்தில் குரேஷியாவின் இவான் பெரிசிச் ஒரு கோலை அடித்துச் சமன் செய்ய  ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது, அதில் 109வது நிமிடத்தில் குரேஷிய வீரர் மரியோ மண்ட்சூகிக் அடித்த அபார  இடது கால் கிக் கோலாக குரேஷியா 2-1 என்று முன்னிலை வகித்தது.

இங்கிலாந்து சாம்பியன்கள் போல் இதுவரை ஆடிவந்தனர், காலனியாதிக்க தேசமக்களின் இன்றைய தலைமுறை  கால்பந்துக் கனவுகளைச் சுமந்து இந்த உலகக்கோப்பையில் எளிதான குரூப் பிரிவுப் போட்டிகளைக் கடந்து இறுதி 16,  பிறகு காலிறுதியில் ஸ்வீடன் சவாலைச் சமாளித்து குரேஷியாவைச் சந்திக்க வந்தது, ஏறக்குறைய அந்த அணி  குரேஷியாவுக்கு எதிரான வெற்றியை உத்தரவாதமாக எடுத்துக் கொண்டது, இரு காலனியாதிக்க தேசத்தின் மக்களும்  தங்கள் அணிகள் இறுதிப் போட்டியில் களம் காணும் கனவில் திளைத்தனர், ஆனால் நடக்கவில்லை.

ட்ரிப்பியர் அடித்த ஸ்டன்னிங் முதல் கோல், இங்கிலாந்து 1-0

ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் பாக்சிற்கு சற்று வெளியே லுகா மோட்ரிச் தேவையில்லாமல் டெலி ஆலியை ஃப்வுல்  செய்ய விளைந்தது ஃப்ரீ கிக். கெய்ரன் ட்ரிப்பியர், டேவிட் பெக்காம் ஸ்டைலில் அதனை குரேஷிய வீரர்கள் சுவர்  வேடிக்கைப் பார்க்க, குரேஷியாவின் அபார கோல் கீப்பர் சுபாசிச்சும் ஒன்றும் செய்ய முடியாமல் கோலுக்குள்  செலுத்தினார், மிக அழகான ஒரு கோல். ஆகச்சிறந்த கோல்களில் ஒன்று, மிக அழகான கோல்களில் ஒன்று.

இந்த உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்த இங்கிலாந்தின் ஹாரி கேன் இருமுறை கோல் வாய்ப்பைத்  தவறவிட்டார். ஜெசி லிங்கர்டின் மிகச் சாதுரியமான பாஸுக்குப் பிறகு குரேஷிய கோல் கீப்பர் சுபாசிச்சுக்கு மிக  அருகிலான வாய்ப்பு இது, தவறவிட்டார். சுலபமாக உள்ளே செலுத்த வேண்டிய பந்தை சுபாசிச் கையில் அடித்து பந்து  ரீபவுண்ட் ஆகி திரும்பி இவரிடமே வந்த போதும், ஷாட்டை போஸ்ட்டில் அடித்தார்.

இப்படியாக திரும்பத் திரும்ப இங்கிலாந்தின் தாக்குதலில் குரேஷிய அணி நிலைகுலைந்தது, அவர்களில் சிறந்த  வீரர்களான மோட்ரிச், ராக்கிடிச் ஆகியோர் கூட இதனால் தாக்கம் செலுத்த முடியவில்லை, குரேஷியாவுக்கு ஊக்கம்  அளிக்க முடியவில்லை. ஆனாலும் ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் இருவரும் சேர்ந்து மிக நுட்பமான பாஸ்கள் மூலம்  இங்கிலாந்தின் கோல் பகுதிக்குள் பந்தைக் கொண்டு சென்றனர். பந்து ஆண்ட்டி ரெபிச்சிடம் வந்தது அவர் இடது காலால்  உதைத்த உதை இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்ஃபோர்டினால் எளிதில் தடுக்கப்பட்டது.

முதலில் அருகில் கிடைத்த இரண்டு வாய்ப்புகளைத் தவற விட்ட ஹாரி கேன், ட்ரிப்பியர் அனுப்பிய தாழ்வான க்ராஸை  டைவ் அடித்து தலையால் முட்ட முயன்றார் ஆனால் பந்து சிக்கவில்லை, இது ஒரு கோல் சந்தர்ப்பமே. இது  இரண்டாவது பாதியில் தொடக்கத்தில் நடந்தது.

குரேஷியாவின் அபாரமான முதல் கோல்

இந்த வாய்ப்புகளை இங்கிலாந்து தொடர்ந்து நழுவ விட்டதால் உறுதி பெற்ற குரேசியா தாக்குதல் தொடுத்தது இதனால்  இங்கிலாந்தின் நடுக்கள வீரர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். 65வது நிமிடத்தில் இவான் பெரிசிச் மீண்டும் வலதுகாலால்  கோலை நோக்கி ஒரு அரக்க உதை உதைக்க கைலி வாக்கர் அதனை இடைமறித்தார். மீண்டும் குரேசியாவின்  இன்னொரு கிராஸ், வாக்கர் எம்பி தலையால் முட்டி கிளியர் செய்தார். இது 65வது நிமிடத்தில் நடந்த நெருக்கடி.

ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் வலது புறம் டீப்பாக இருந்த குரேஷிய வீரர் வ்ரசால்கோ கோல் நோக்கி அடித்த மிக அபாரமான ஷாட்டை  கைலி வாக்கர் அதனை தலையால் முட்டி வெளியே தள்ள முயற்சி செய்த வேளையில் பின்னால் இருந்த குரேஷிய  ஸ்ட்ரைக்கர் பெரிசிச்  இடது காலை  நன்றாக உயரேத் தூக்கி காற்றில் இருந்த பந்தை வலைக்குள் தள்ளினார், குரேஷியா சமன் செய்தது  ஸ்டேடியம் வெடித்து எழுந்தது. 1-1.

இந்த கோல் குரேஷியாவின் உணர்வுகளைத் தட்டி எழுப்ப ஆட்டத்தில் வேகம் கூடியது, இங்கிலாந்தின் ஸ்டோன்ஸ்  பந்துக்கு தயக்கம் காட்ட, வாய்ப்பைப் பார்த்துக் கொண்டிருந்த பெரிசிச் இடது புறம் பாக்சிற்குள் நுழைந்தார். பிறகு  இங்கிலாந்து கோலை நோக்கி தாழ்வான ஒரு ஷாட்டை மேற்கொண்டார். கோலாகவில்லை, பந்து மீண்டும் ரெபிக்கிடம்  வர ஆனால் இவரோ நேராக இங்கிலாந்து கோல் கீப்பர் கையில் அடித்தார். 71வது நிமிடத்தில் இது நடக்க குரேஷியாவின்  ஆட்டத்தில் கில்லர் இன்ஸ்டிங்க்ட் தலை தூக்கியது, 75வது நிமிடத்தில் வ்ரசாலிகோ வலது புறம் பந்தை எடுத்து வந்து  கோல் எல்லைக்குள் பந்தை பாஸ் செய்ய பெனால்டி ஸ்பாட்டில் பெரிசிச் நின்று கொண்டிருந்தார். ஆனால் இங்கிலாந்து  இம்முறை பந்தை வெளியே அனுப்பித் தப்பியது, ஆனால் இங்கிலாந்து அபாயத்தை உணரத் தொடங்கியது.

77வது நிமிடத்தில் ராக்கிடிச் இடது புறம் மிக அருமையாக ஒரு வளைந்த பாஸை நடுவை நோக்கி அடித்தார். ஆனால்  இங்கிலாந்தின் கோல் கீப்பர் பிக்போர்ட் முன்னேறி வந்து பாக்ஸின் ஓரத்தில் பந்தைப் பிடித்தார். இது கோலாக  மாறியிருக்கும், காரணம் பெரிசிச் அங்கு அபாயகரமாக வந்து கொண்டிருந்தார். குரேஷிய கடும் தாக்குதலிலும்  இங்கிலாந்துக்கு ஒரு எதிர்த்தாக்குதல் இதே நிமிடத்தில் கிடைத்தது. லிங்கர்டின் முயற்சி வெளியே சென்றது.

83வது நிமிடத்தில் வலது உள்புறம் குரேஷிய வீரர் ப்ரோசோவிக் பந்தை மண்ட்சூகிக்கிடம் அடிக்க அவர் ஒரு சுற்று சுற்றி  நெருக்கமான கோணத்திலிருந்து ஷாட் ஒன்றை கோல் நோக்கி அடித்தார். ஆனால் இங்கி. கோல் கீப்பர் பிக்போர்ட்  அதனை சிறப்பாக வெளியே தள்ளி விட்டார். இதே தருணத்தில் இங்கிலாந்து எதிர்த்தாக்குதல் தொடுக்க கோல் நோக்கி  அடித்த ஷாட்டை கோல் கீப்பர் சுபாசிச் எழும்பித் தடுத்தார்.

84வது நிமிடத்தில் உயரே வந்த பந்தை இங்கிலாந்து சரியாக எடுக்கவில்லை, பிக்போர்ட் தன் இடத்தை விட்டு பெயர்ந்து  வந்து பந்தை தள்ள முயன்றார் ஆனால் பந்து எதிராளி பெரிசிச்சிடம் இடது புறம் வந்தது, வலையைக் காக்க ஒருவரும்  இல்லை ஆனால் பெரிசிச் வாய்ப்பை கோலுக்கு மேலே அடித்துத் தவறவிட்டார்.

86ம் நிமிடத்தில் குரேஷிய வீரர் ஸ்ட்ரினிச் இடது புறத்திலிருந்து தன்னந்தனியாக பந்தை மிக வேகமாக எடுத்துச்  சென்றார் ஷூட் செய்ய வேண்டியதுதான் பாக்கி, ஆனால் வலது புறம் பெரிசிச்சை எதிர்நோக்கினார் இதனால் பாஸ்  சரியாக அமையவில்லை. பெரிசிச் நீட்டிக்கொண்டு அதை அடிக்க முற்பட வேண்டிவந்தது.

91வது நிமிடத்தில் இங்கிலாந்து தவறாக ஆட பந்து ராக்கிடிச்சிடம் வர அவரது முயற்சியை இங்கிலாந்து பாடுபட்டு  தடுத்தது, இல்லையெனில் அப்போதே குரேஷியா இறுதிக்கு முன்னேறியிருக்கும்.

92வது நிமிடத்தில் ட்ரிப்பியர் ஒரு ஷாட்டை கோல் நோக்கி பாஸ் செய்தார், கேன் அதனை தலையால் முட்டி  கோலுக்குள் தள்ள நினைத்தார். ஆனால் பந்து வைடாகச் சென்று கோலாகவில்லை, கேன் தலையில் கையை வைத்துக்  கொண்டார் மொத்தம் கேன் விட்ட வாய்ப்புகள் மட்டும் 3.

கூடுதல் நேர ஆட்டத்தில் இங்கிலாந்தின் அயர்ச்சியில் குரேஷியா 2வது கோல்:

கூடுதல் நேரத்தில் இங்கிலாந்து வீரர் டையர் தூரத்திலிருந்து அடித்த ஷாட் ஒன்று இங்கிலாந்து சார்பாக கார்னர்  வாய்ப்பாக அதனை ட்ரிப்பியர் வலது புறத்திலிருந்து அடிக்க 12 அடியிலிருந்து இங்கிலாந்தின் ஸ்டோன்ஸ் செய்த  ‘தலை’யீடு கோல் போஸ்ட்டைத் தாக்கியது. இன்னொரு வாய்ப்பில் ஸ்டோன்ஸின் மற்றொரு தலை ஷாட்டை  வ்ரசாலிக்கோ கிளியர் செய்தர், இதுவும் கோலுக்கு நெருக்கமானதே.

கூடுதல் நேர ஆட்டத்தில் இங்கிலாந்து நன்றாக ஆடியது, அழுத்தம் கொடுத்தது. ஆனால் 11வது நிமிடத்தில் சாலிகோ  வலது புறம் பிரித்து மேய்ந்து பந்தை எடுத்துச் சென்றார். ரேஷ்போர்ட் சறுக்கிக் கொண்டு வந்து இடைமறிக்க ஃப்ரீ கிக்  கிடைத்தது, அது வேஸ்ட் செய்யப்பட்டது. கூடுதல் நேரத்தின் முதல் பாதி இறுதியில் பெரிசிச் இடது புறத்திலிருந்து ஒரு  ஷாட்டைட் தாழ்வாக மண்ட்சூகிக்கிடம் அடிக்க, 6 அடி பாக்ஸில் இங்கி. கோல் கீப்பர் பிக்போர்ட் முயற்சி மேற்கொள்ள  விடாமல் இடைமறித்தார். இது ஒரு மிகப்பெரிய தடுப்பாகும்.

கூடுதல் நேர 17வது நிமிடத்தில் இந்த ஆட்டத்தின் அபாய நாயகன் பெரிசிச் இடது புறம் பந்தை வேகமாக எடுத்து சென்ரார் இது கார்னரில் முடிந்தது. ஆனால் கார்னர் வாய்ப்பு ஒன்றுமில்லாமல் போனது. 18வது நிமிடத்தில் மீண்டும் புரோஸோவிக் இடது உள்புறம் ஏகப்பட்ட இடம் கிடைக்க பந்தை உள்ளே கொண்டுவந்து அடித்த அடி வைடாகச் சென்றது.  இங்கிலாந்து தப்பியது.

ஆனால் 19வது நிமிடத்தில் தடுக்க முடியவில்லை! இந்நிலையில் உயரமாக இங்கிலாந்து கோல் பகுதிக்குள் வந்த பந்தை இங்கிலாந்து வீரர்கள் வெளியே அனுப்பத் தவறினர்,  உயரமாக வந்த பந்தை ட்ரிப்பியரை விடவும் உயரமாக எழும்பி பெரிசிச் தலையால் அருமையாக முட்டி கோல் நோக்கித் திருப்பி விட அங்கு மண்ட்சூகிக்கின் இடது கால் கிக் வெற்றி கோலாக மாறியது, இங்கிலாந்தின் தடுப்பாட்டம் அந்த நிமிடத்தில் அயர்ச்சியில் விளைந்தது போல் தெரிந்தது, இரண்டுபேர் இருந்தும் மண்ட்சூகிக் உதையைத்தடுக்க முடியவில்லை. குரேஷியா 2-1 முன்னிலை. இந்த கோல் 109வது நிமிடத்தில் வந்தது. கடைசியில் டெலி ஆலி இடது புறம் தாக்குதல் தொடுத்தார் ஆனால் குரேசிய வீரர் படேல்ஜி அவரைத் தடுத்தார், இது ஹேண்ட்லிங் என்பதால் ஃப்ரீ கிக் ஆனது. ராஷ்போர்ட் ப்ரீ கிக்கை அடித்தார், அது சரியாக அமையவில்லை ஆட்ட நாயகன் பெரிசிச் பந்தை எடுத்துக் கொண்டு அப்பகுதியை விட்டு விரைவில் வெளியேறினார். விசில் ஊதப்பட்டது இங்கிலாந்தின் கனவு தகர்ந்தது, கடைசியில் பெரிசிச், மண்ட்ஸூகிக் இங்கிலாந்தை வெளியேற்றினர். இங்கிலாந்து வீரர்கள் தரையில் ஏமாற்றத்துடன் விழுந்தனர். இனி எப்போது, எங்கே உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பு இங்கிலாந்துக்குக் கிட்டும். மிக அருகில் வந்து கைவிட்டனர்.

மாறாக குரேஷியா முதல் உலகக்கோப்பை இறுதிக்கு முன்னேறி பிரான்ஸைச் சந்திக்கிறது. பிரான்ஸுக்கு மிகமிகக் கடினம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x