Last Updated : 27 Jul, 2018 05:04 PM

 

Published : 27 Jul 2018 05:04 PM
Last Updated : 27 Jul 2018 05:04 PM

பலாத்கார வழக்கில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரருக்கு 6 போட்டிகளில் விளையாடத் தடை

இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2-வது கிரிக்கெட் டெஸ்ப் போட்டி கடந்த வாரம் நடந்தது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கை வீரர்கள் அனைவரும் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தனர். ஆனால், குணதிலகா(வயது26) மட்டும் தனது நண்பர் செல்லையா என்பவருடன் வெளியே சென்றுவிட்டு அதிகாலையில் ஹோட்டலுக்கு திரும்பினார்.

ஆனால், அடுத்த நாள் நார்வே நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், குணதிலகாவின் நண்பர் செல்லையா(வயது27) மீது பலாத்காரப் புகார் அளித்தார். இந்தப் புகாரையடுத்து, செல்லையாவை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக குணதிலகாவையும் விசாரணைக்காக போலீஸார் அழைத்தனர்.

அணி வீரர்களின் ஒழுக்க விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதால், பலாத்கார வழக்கில் குணதிலகா சிக்கிவிட்டதாக இலங்கை அணி நிர்வாகம் கருதியது. இதையடுத்து, குணதிலகாவை ஒரு நாள் போட்டிக்கு தேர்வு செய்யாமல் அணியில் இருந்து நீக்கியது.

குணதிலகாவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து இலங்கை போலீஸார் தரப்பில் கூறுகையில், “ நார்வே பெண் பலாத்கார குற்றச்சாட்டில் குணதிலகா சேர்க்கப்படவில்லை. அந்தப் பெண்ணும் குணதிலகா மீது புகார் அளிக்கவில்லை. ஆனால், செல்லையாவுடன் குணதிலகாவும் ஹோட்டலுக்கு உடன் சென்றதால் விசாரணை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தனர்.

இலங்கை அணி நிர்வாகத்தின் விதிப்படி, போட்டி நடக்கும் போது, வீரர்கள் அனைவரும் ஹோட்டல் அறையில் இருக்க வேண்டும், ஹோட்டலை விட்டு எங்கும் செல்லக்கூடாது என்பது விதிமுறையாகும். ஆனால், அதையும் மீறி குணதிலகா செயல்பட்டு பிரச்சினையில் சிக்கியுள்ளார்.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “வீரர்களின் ஒழுக்க விதிகளை மீறிச் செயல்பட்டதற்காக இலங்கை வீரர் குணதிலகாவை 6 ஒரு நாள் போட்டிகளுக்கு சஸ்பெண்ட் செய்து முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், அடுத்து நடக்கும் டி20 தொடரிலும் குணதிலகா தேர்வு செய்யப்படமாட்டார்.

அணியின் ஒழுக்க விதிகளை மீறிச் செயல்பட்ட குற்றத்துக்காக ஏற்கனவே ஒரு விசாரணையைத் தனியாக குணதிலகா எதிர்கொண்டு வருகிறார். குணதிலகா மீது ஏற்கனவே நடத்தைத் தொடர்பாக ஒரு குற்றச்சாட்டு நிலுவையில் இருக்கும் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒழுக்கக் குறைவாக அணியில் நடத்தல், பயிற்சிகளில் பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டு இரவு பார்ட்டிக்கு செல்லுதல், எதிரணியுடன் வம்பு செய்தல் போன்ற நடத்தைத் தொடர்பான குற்றத்தில் இந்த 6 போட்டிகளுக்கான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x