Published : 01 Jul 2018 11:12 AM
Last Updated : 01 Jul 2018 11:12 AM
ரஷ்யா உலகக்கோப்பை 2018-ல் இறுதி 16 சுற்றில் நேற்று இரண்டு சூப்பர் ஸ்டார் அணிகள் வெளியேறின, பிரான்ஸ், அர்ஜெண்டினா அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் கைலியன் மபாப்பே ஒரு மின்னல் வேக ஆட்டத்தில மெஸ்ஸியின் அர்ஜெண்டினாவை ஊதித்தள்ள, மற்றொரு சூப்பர்ஸ்டார் அணியான போர்ச்சுகலை 2-1 என்ற கோல் கணக்கில் உருகுவே வென்றது.
சோச்சியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 7வது நிமிடத்திலும் பிறகு 62வது நிமிடத்திலும் எடின்சன் கவானி அடித்த இரண்டு திகைக்கவைக்கும் கோல்களினால் போர்ச்சுகல் கனவு முறிய கிறிஸ்டியானோ ரொனால்டோ எனும் அற்புத வீர்ரின் உலகக்கோப்பை கனவும் முடிவுக்கு வர உருகுவே 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
ஆனால் கடைசி நேரத்தில் கவானி காயமடைந்ததால் வரும் வெள்ளியன்று நடைபெறும் பிரான்ஸுக்கு எதிரான காலிறுதியில் விளையாடுவாரா என்பது சந்தேகமாகியுள்ளது.
நேற்றைய 2வது போட்டியில் பெரும்பாலும் ஒரு மந்தமான தடுப்பாட்டத்தையே எதிர்பார்த்தனர், ஆனால் மாறாக ஆட்டம் இருதயத்துடிப்பை எகிறச்செய்யும் ஆட்டமாக அமைய எப்போதும் விமர்சனத்துக்கு ஆளாகும் கவானி 7வது நிமிடத்தில் தலையால் முட்டியும், 62வது நிமிடத்தில் மிகப்பிரமாதமாக, கம்பீரமாக அடித்த ஷாட் வளைந்து கோலுக்குள் சென்றது.
ஆனால் ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் போர்ச்சுகலின் பெபே தலையால் முட்டி சமன் செய்திருந்தார். ஆனால் 62வது நிமிடத்தில் கவானி செண்டர் ஃபார்வர்டில் மிக அற்புதமாக ஆடி வெற்றி கோலை அடித்தார்.
கடைசி நிமிடங்களில் போர்ச்சுகல் தங்கள் ஆற்றல் முழுதையும் திரட்டி ஆடியது, கோல் கீப்பர் ரூடி பேட்ரிசியோ முன்னால் வந்து ஆடப்பணிக்கப்பட்டார். இவர் ஏறக்குறைய தலையால் முட்டி ஒரு கோலையும் அடித்திருப்பார். போர்ச்சுகலின் ஒவ்வொரு இடைமறிப்பையும் பந்து கடைதலையும் ரசிகர்கள் ஆவலுடன் வரவேற்றனர். விஏஆஆர் கேட்டு தங்களைக் காப்பாற்றி கொண்டனர், ஆனாலும் இவர்கள் எதிர்பார்த்த அந்த 2வது கோல் வரவேயில்லை.
குரூப் மட்டத்தில் ஒரு கோல் கூட வாங்காமல் இறுதி16க்கு வந்தது உருகுவே, நேற்று முதல் கோலை வாங்கியது.
ஆட்டம் தொடங்கி 7வது நிமிடத்தில் அந்த அணியின் நட்சத்திர வீரர் லூயி சுவாரேஸ் அடித்த அற்புத கிராஸ் கவானியின் முதல் கோலுக்குக் காரணமானது. இதன் பிறகு போர்ச்சுகல் முட்டியது, மோதியது, ஆனால் உருகுவேயின் தடுப்புக் கோட்டையை தகர்க்க முடியவில்லை. இடைவேளைக்குப் பிறகு கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்திய பெபே தலையால் முட்டி முதல் கோலை அடித்து சமன் செய்தார். ஆனால் இந்த சமன் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை, கவானியின் பக்கவாட்டு பாத உதை போர்ச்சுகலின் கனவுகளை சிதறடித்தது.
போர்ச்சுகல் பந்துகளை அதிகம் தங்கள் வசம் வைத்திருந்தனர், அதில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேறிச் சென்றனர், ஆனால் உருகுவே தடுப்புக் கோட்டை ஊடுருவ முடியாததாக இருந்தது. இருமுறை கோல் அடிக்க நெருக்கமாக வந்தும் முடியவில்லை. கிறிஸ்டியானோ ரொனால்டோவை நம்பியிருந்த அணி அவரை உருகுவே முடக்கியவுடன் திடீரென ஒன்றுமில்லாமல் ஆனது. 4 கோல்களை அடித்த பிறகே ஆ.. ஊ.. என்று பயங்கர பில்ட் அப் எழுந்தது, ஆனால் 6 உலகக்கோப்பைகளில் அவர் நாக் அவுட் சுற்றில் கோலே அடித்ததில்லை என்ற எதிர்மறைச் சாதனை தொடர்ந்தது. அடித்ததோடு மட்டுமல்ல அடுத்தவர் கோல் அடிக்க உதவிகரமாகவும் இருந்ததில்லை என்கின்றன புள்ளி விவரங்கள்.
போர்ச்சுக்களின் பிரசித்தி பெற்ற ஹீரோவான ரொனால்டோ இடது புறம் பந்தை ஒரு பிளிக் செய்து பிறகு நேராக கோலை நோக்கி அடிக்கத் தயாரானார், அடித்த போது நேராக பெர்னாண்டோ மியூஸ்லேராவிடம் சென்றது.
ஆனால் ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் டயக்னலாக வந்த பந்தை சுவாரேசிடம் அடித்தார் கவானி பிறகு அவரே மின்னல் வேகத்தில் பாக்ஸிற்குள் சென்றார். சுவாரெஸ் அடித்த பந்துக்கு எழும்பிய கவானி தலையால் முட்டி கோலுக்குள் தள்ளினார்.
இந்தக் கோலுக்குப் பிறகு போர்ச்சுகல் கொஞ்சம் வேகம் காட்டியது, ரொனால்டோவின் அசுர முட்டு ஒன்று ஜோஸ் கிமினேசினால் இடைமறிக்கப்பட்டது. பிறகு ரோட்ரிகோ பெண்டன்கரின் ஃபவுல் மூலம் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை ரொனால்டோ சுவர் போல் நின்ற வீரர்கள் மேல் அடித்து வீண் செய்தார். உருகுவே தடுப்பரணை டீகோ கோடின் கவனித்து கொண்டார். ஆனால் இடைவேளைக்குப் பிறகு போர்ச்சுகல் கொஞ்சம் முனைப்புடன் வந்தது. ரபேல் குயெய்ரோ ஷார்ட் கார்னர் வாய்ப்பை கிராஸ் செய்ய அங்கு மார்க் செய்யப்படாத பெபே எம்பி தலையால் முட்டி கோலுக்குள் செலுத்தினார், 1-1 என்று சமன் ஆனது.
ஆனால் ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் பெண்டன்கர் பந்தை லேசாக உருட்ட, கவானி அதனை கோலுக்குள் அற்புதமாகச் செலுத்தினார் 2-1 முன்னிலை பெற்றது உருகுவே. ரொனால்டோவுக்கு நெருக்கடி அதிகரிக்க ஏதாவது செய்யும் முனைப்பில் கொஞ்சம் தொலைவிலிருந்து ஒருஷாட்டை முயன்றார், அது சில்வாவினால் விரயம் செய்யப்பட்டது.
இடைவேளைக்குப்பிறகு கடைசி நிமிடங்களில் போர்ச்சுகல் சிலபல நெருக்கடிகளை கொடுத்தது, உருகுவே அணியின் வசம் பந்து 30% தான் இருந்தது. ஆனால் உருகுவே தடுப்பரண் ரொனால்டோவுக்கு விமானத்தைக் காட்டி விட்டது. கடைசியில் உருகுவே இருமுறை பாக்சிற்குள் பந்தைக் கொண்டு சென்றது, இதில் ஒன்று கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மஞ்சள் அட்டையில் முடிந்தது, அடுத்த சுற்றுக்கு போர்ச்சுகல் முன்னேறியிருந்தால் ரொனால்டோ ஆடியிருக்க முடியாது.
ஆட்ட நாயகன் எடின்சன் கவானி, இவர் இந்த உலகக்கோப்பையில் தன் கோல் கணக்கை 3ஆக உயர்த்தியுள்ளார், மொத்தமாக 45 கோல்களை சர்வதேச போட்டிகளில் அடித்துள்ளார் கவானி. உருகுவே முதல் முறையாக உலகக்கோப்பையில் முதல் 4 போட்டிகளை வென்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT