Published : 13 Apr 2025 09:49 AM
Last Updated : 13 Apr 2025 09:49 AM
சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சிஎஸ்கே அணி. முதலில் பேட் செய்த சிஎஸ்கே 9 விக்கெட்கள் இழப்புக்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி சேர்த்த குறைந்தபட்ச ஸ்கோராக இது அமைந்தது. மேலும் நடப்பு சீசனில் சிஸ்கேவுக்கு இது 5-வது தொடர்ச்சியான தோல்வியாகவும், சேப்பாக்கத்தில் ஹாட்ரிக் தோல்வியாகவும் அமைந்தது. ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வி கண்டது இதுவே முதன்முறை.
நடப்பு சீசனில் 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள சிஎஸ்கே ஒரு வெற்றி, 5 தோல்விகளுடன் 2 புள்ளிகள் மட்டுமே பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கேவுக்கு இன்னும் 8 ஆட்டங்கள் மீதம் உள்ளன. இதில் குறைந்தபட்சம் 6 முதல் 7 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
சிஎஸ்கேவின் தொடர்ச்சியான தோல்விகளுக்கு முன்வைக்கப்படும் விமர்சனங்களில் முதன்மையாக இருப்பது பேட்டிங்கில் டாப் ஆர்டரிலும், நடுவரிசையிலும் களமிறங்கும் வீரர்கள் தங்களது உச்சகட்ட பார்மை இழந்தவர்களாக உள்ளனர் என்பதுதான். நடுவரிசையில் ராகுல் திரிபாதி, ஷிவம் துபே, விஜய் சங்கர், தீபக் ஹூடா ஆகியோர் நடப்பு சீசனில் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தவில்லை.
கடந்த காலங்களில் தொடக்க வீரராக களமிறங்கும் வீரர்கள் சிறந்த அடித்தளத்தை அமைத்து கொடுப்பார்கள். அதை பின்பற்றி 3-வது மற்றும் 4-வது இடங்களில் களமிறங்கும் வீரர்கள் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு பலம் சேர்த்தனர். ஆனால் இந்த சீசனில் டாப் ஆர்டரிடம் இருந்து எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தும் ஆட்டமும் வெளிப்படவில்லை. ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்புகளை எட்டி உதைத்துள்ளனர் என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது. திரிபாதி 4 ஆட்டங்களில் விளையாடி 46 ரன்களையும், தீபக் ஹூடா 3 ஆட்டங்களில் 7 ரன்களையும், விஜய் சங்கர் 4 ஆட்டங்களில் 109 ரன்களையும், ஷிவம் துபே 6 ஆட்டங்களில் விளையாடி 137 ரன்களையும் எடுத்துள்ளனர்.
மேலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க ஏன் சிஎஸ்கே தயங்குகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் சிஎஸ்கே அணியில் உள்ள இளம் வீரர்களில் ஆந்த்ரே சித்தார்த், வன்ஷ் பேடி, ஷேக் ரசீத் ஆகியோர் மட்டுமே பேட்ஸ்மேன்கள். ஸ்ரேயாஷ் கோபால் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராகவும், அன்ஷுல் கம்போஜ் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராகவும் உள்ளனர். குர்ஜப்னீத் சிங் இடது கை மிதவேகப்பந்து வீச்சாளராக அறியப்படுகிறார்.
கமலேஷ் நாகர்கோட்டி வேகப்பந்து வீச்சாளராக உள்ளார். இதில் ஆந்த்ரே சித்தார்த் டி20 போட்டிகளில் விளையாடியதே இல்லை. வன்ஷ் பேடி ஒரே ஒரு டி20 ஆட்டத்தில் மட்டுமே விளையாடி உள்ளார். ஷேக் ரஷீத், குர்ஜப்னீத் சிங் ஆகியோருக்கும் பெரிய அளவில் அனுபவம் இல்லை. ஸ்ரேயாஷ் கோபால், கமலேஷ் நாகர்கோட்டி ஆகியோர் அதிக அளவிலான உள்ளூர் போட்டிகளில் விளையாடி உள்ள போதிலும் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது இல்லை. இதன் காரணமாகவே சிஎஸ்கே அணி இளம் வீரர்கள் மீது பாராமுகமாக இருக்கிறதோ என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.
இந்நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கூறியதாவது: எங்களிடம் சரியான வீரர்கள் உள்ளனர் என்று நான் இன்னும் நினைக்கிறேன். நாங்கள் அவர்களிடம் நம்பிக்கையையும் நிலைத்தன்மையையும் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும். அதிலிருந்து நாங்கள் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் ஆகியவற்றை வளர்க்கவும், கட்டமைக்கவும் முடியும் என்று நம்புகிறோம். நாங்கள் விளையாடும் ஸ்டைல் குறித்து நிறைய பேசப்படுகிறது. ஆனால் எங்களிடம் உள்ள வீரர்களிடம் அவர்களை முற்றிலும் மாறுபட்ட வழியில் விளையாடுமாறு கேட்க விரும்பவில்லை. அவர்களுடைய இயல்பான ஆட்டத்தை விளையாடுகிறார்கள். ஐபிஎல் தொடரில் இதற்கு முன்னர் அவர்கள் சிறப்பாக விளையாடியதன் காரணமாகவே தற்போது இங்கு வந்துள்ளனர். நான் நிச்சயமாக அவர்களை வேறு வழியில் விளையாட வைக்க முயற்சி செய்பவன் அல்ல.
சிஎஸ்கே அணியில் உள்ள பல வீரர்கள் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சகட்டத்தை கடந்துவிட்டதாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அவர்கள் இதற்கு அப்பாற்பட்டவர்கள். தங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் அந்திம காலத்தில் இருந்த வீரர்கள் சிஎஸ்கேவுக்கு வந்து கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் ஷேன் வாட்சன், அஜிங்க்ய ரஹானே ஆகியோரை நினைவு கூர்கிறேன். அவர்கள், சிஎஸ்கேவுக்காக சிறப்பாக செயல்பட்டனர். எங்களிடம் உள்ள வீரர்கள் இன்னும் சில நல்ல கிரிக்கெட்டை அவர்களுக்கு முன்னால் வைத்திருக்கிறார்கள். எங்களுக்கு அவர்களால் நிறைய வழங்க முடியும் என்றே நினைக்கிறேன்.
இளம் வீரர்களை பொறுத்தவரை, அவர்கள் சிறப்பாகச் செயல்படத் தயாராக இருக்கும்போது அவர்களைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறோம். எங்களிடம் சில சிறந்த வீரர்கள் தங்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அணிகள் தொடரை வெல்ல முடியாத சூழ்நிலை உருவாகும் போதே, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து முயற்சிக்கும் போக்கு இங்கு இருக்கிறது. ஆனால் நாங்கள் முடிந்தவரை போட்டியில் முன்னேற முயற்சிக்கிறோம். இன்னும் நாங்கள் சரணடையவில்லை என்பதே நிதர்சனம்.
பிளே ஆஃப் சுற்றுக்கு நாங்கள் முன்னேற வேண்டுமானால் வெற்றி பெறுவதற்கான வழிகளை கண்டறிய வேண்டும். ஐபிஎல் போன்ற நீண்ட தொடரில் உத்வேகம் மிகவும் முக்கியமானது. நிச்சயமாக அந்த உத்வேகம் எங்களிடம் தற்போது இல்லை. இந்நிலையை மாற்றி, நம்பிக்கையை பெற்று சில வெற்றிகளை குவித்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இது நிகழும் பட்சத்தில் பிளே ஆஃப் நெருங்கும் போது கடைசி அணியாக எங்களால் நுழைய முடியும்.
பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்து துறையிலும் எதிர்பார்ப்புக்கு கீழேயே நாங்கள் இருக்கிறோம். ஆனால் அவற்றில் இருந்து முழுமையாக விலகிவிடவில்லை. முன்னேற்றம் அடைய வேண்டிய பகுதிகளை கண்டறிந்து முடிந்தவரை விரைவாக நாங்கள் மீண்டு வரவேண்டும். அதிக அளவிலான மாற்றங்களை மேற்கொள்வது கடந்த காலங்களில் சிஎஸ்கேவின் பண்பாக இருந்ததில்லை. இதை மேற்கொண்டால் விஷயங்கள் மேம்படுவதற்கு முன்பு மோசமாகிவிடும். நாங்கள் கொஞ்சம் சுயபரிசோதனை செய்ய வேண்டும்.
இவ்வாறு மைக்கேல் ஹஸ்ஸி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment