Published : 13 Apr 2025 09:20 AM
Last Updated : 13 Apr 2025 09:20 AM
புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் 4 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நடப்பு சீசனில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக டெல்லி கேப்பிடல்ஸ் வலம் வருகிறது. டெல்லி அணி நடப்பு சீசனில் முதன்முறையாக சொந்த மைதானத்தில் விளையாட உள்ளது. அந்த அணி 4 ஆட்டங்களில் இரண்டை 2-வது சொந்த மைதானமான விசாகப்பட்டினத்தில் விளையாடி இருந்தது.
5 முறை சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் தடுமாறி வருகிறது. அந்த அணி 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 4 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. கடந்த சீசனில் கடைசி இடம் பிடித்திருந்த மும்பை அணி நடப்பு சீசனிலும் மோசமாக செயல்பட்டு வருகிறது. ரோஹித் சர்மாவின் பார்மும் அணியின் பலவீனத்தை அதிகரிப்பதாக உள்ளது. 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர், 38 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.
இன்றைய ஆட்டத்தில் அவருக்கு சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகாம், அக்சர் படேல் ஆகியோர் நெருக்கடி கொடுக்கக்கூடும். ரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப் யாதவ் நடப்பு தொடரில் 8 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். மேலும் அனைத்து ஆட்டங்களிலும் 4 ஓவர்களை முழுமையாக பூர்த்தி செய்துள்ள அவர், ஓவருக்கு சராசரியாக 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். அதேவேளையில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான விப்ராஜ் நிகாம் 5 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அக்சர் படேல் பந்து வீச்சில் முழுமையாக செயல்படாத நிலையில் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.
ரோஹித் சர்மா, இடதுகை சுழற்பந்து வீச்சு மற்றும் ரிஸ்ட் ஸ்பின்னருக்கு எதிராக பெரிய அளவில் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டது இல்லை. இதனால் இவர்களை தொடக்க ஓவர்களை வீசும் திட்டத்தை டெல்லி கேப்பிடல்ஸ் மேற்கொள்ளக்கூடும். திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரது பேட்டிங்கும் சீரானதாக இல்லை. ஒரு சில ஆட்டங்களில் இவர்கள் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு ரன்களை வேட்டையாடிய போதிலும் அது வெற்றிக்கு உதவவில்லை.
காயத்தில் இருந்து மீண்டு திரும்பி உள்ள வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா, கடந்த ஆட்டத்தில் 4 ஓவர்களை வீசி 29 ரன்களை வழங்கிய நிலையில் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. இன்றைய ஆட்டத்தில் அவர், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல் திறனை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும். முக்கியமாக கே.எல்.ராகுலுக்கு அவர், கடும் சவால் அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி அணி கடைசியாக பெற்ற 2 வெற்றிகளிலும் கே.எல்.ராகுல் முக்கிய பங்குவகித்திருந்தார். சிஎஸ்கேவுக்கு எதிராக 77 ரன்கள் விளாசிய அவர், ஆர்சிபிக்கு எதிராக 93 ரன்களை விளாசி மிரட்டியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...