Published : 13 Apr 2025 08:44 AM
Last Updated : 13 Apr 2025 08:44 AM
ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தங்களது கடைசி ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து இருந்தன. பெங்களூரு அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடமும், ராஜஸ்தான் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடமும் வீழ்ந்திருந்தன.
பெங்களூரு அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. தொடக்க ஆட்டத்தில் 76 ரன்கள் வழங்கி மோசமான சாதனை படைத்திருந்த ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் அதன் பின்னர் அடுத்தடுத்த ஆட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல் திறனை வெளிப்படுத்தி வருகிறார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 25 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி அவர், அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அந்த ஆட்டத்தில் 148.6 கிலோ மீட்டர் வேகத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் ஸ்ரேயஸ் ஐயர் ஸ்டெம்புகள் சிதற ஆட்டமிழந்து இருந்தார். மேலும் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 152.3 கிலோ மீட்டர் வேகத்திலும் பந்து வீசி மிரட்டியிருந்தார். இந்த ஆட்டத்தில் அவர் 147.7 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய இன்ஸ்விங் பந்தில் ஷுப்மன் கில் போல்டாகியிருந்தார்.
இதனால் ஜோப்ரா ஆர்ச்சர் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான பில் சால்ட், விராட் கோலி ஜோடிக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு சீசனில் விராட் கோலி 186 ரன்களும், பில் சால்ட் 143 ரன்களும் சேர்த்துள்ளனர். ஜோப்ரா ஆர்ச்சருக்கு உறுதுணையாக சந்தீப் சர்மா செயல்படக்கூடும். எனினும் இவர்களை தவிர்த்து அணியில் மற்ற பந்து வீச்சாளர்களிடம் இருந்து இதுவரை சிறந்த செயல்திறன் வெளிப்படவில்லை. இதனை பெங்களூரு அணி பயன்படுத்திக் கொள்ளக்கூடும்.
பெங்களூரு அணியின் பேட்டிங்கில் கேப்டன் ரஜத் பட்டிதார், தேவ்தத் படிக்கல் ஆகியோரும் அதிரடியில் பலம் சேர்க்கின்றனர். டிம் டேவிட், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோரும் பின்வரிசையில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். பந்து வீச்சில் ஜோஷ் ஹேசில்வுட் பலம் சேர்க்கக்கூடும்.
ராஜஸ்தான் அணி தனது கடைசி ஆட்டத்தில் குஜராத் அணிக்கு எதிராக 218 ரன்கள் இலக்கை துரத்திய நிலையில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்து இந்தது. தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், நித்திஷ் ராணா ஆகியோரிடம் இருந்து சீரான செயல் திறன் வெளிப்படாதது பலவீனமாக உள்ளது. சாம்சன், ஷிம்ரன் ஹெட்மயர் மட்டுமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல் திறன் வெளிப்படக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment