Published : 10 Apr 2025 04:28 AM
Last Updated : 10 Apr 2025 04:28 AM
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி விளையாடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. இந்த இரு அணிகளுமே நடப்பு சீசனில் வெளிமைதானங்களில் அற்புதமான செயல் திறனை வெளிப்படுத்தியுள்ளன.
பெங்களூரு அணியானது கொல்கத்தா, சென்னை, மும்பையில் நடைபெற்ற ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்தது. அதேவேளையில் சொந்த மைதானத்தில் குஜராத் அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. அதேவேளையில் டெல்லி அணி தனது 2-வது சொந்த மைதானமான விசாகப்பட்டிணத்தில் லக்னோ, ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக வெற்றியை குவித்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கேவையும் வென்றிருந்தது.
பெங்களூரு அணி தனது கடைசி ஆட்டத்தில் மும்பை அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 221 ரன்களை வேட்டையாடி இருந்தது. விராட் கோலி 42 பந்துகளில், 67 ரன்களையும், கேப்டன் ரஜத் பட்டிதார் 32 பந்துகளில் 64 ரன்களையும், ஜிதேஷ் சர்மா 19 பந்துகளில் 40 ரன்களையும் விளாசி மிரட்டினர். தேவ்தத் படிக்கலும் 22 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து உரிய பங்களிப்பை வழங்கியிருந்தார். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.
அதேவேளையில் கடந்த இரு ஆட்டங்களிலும் முறையே 4 மற்றும் 14 ரன்களில் வெளியேறி இருந்த பில் சால்ட் பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும். பந்து வீச்சை பொறுத்தவரையில் கடந்த ஆட்டத்தில் கிருணல் பாண்டியா கடைசி ஓவரில் 3 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
வேகப்பந்து வீச்சில் ஜோஷ் ஹேசில்வுட் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதிலும் தேவையான நேரத்தில் விக்கெட் கைப்பற்றி அழுத்தம் கொடுப்பதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள் ஆகியோரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் பந்து வீச்சு பலம் மேலும் அதிகரிக்கக்கூடும்.
தோல்வியை சந்திக்காமல் வலம் வரும் டெல்லி கேப்பிடல்ஸ் தனது கடைசி ஆட்டத்தில் சிஎஸ்கேவை தோற்கடித்து இருந்தது. இந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறங்கி 51 பந்துகளில் 77 ரன்கள் விளாசியிருந்தார். இன்றைய ஆட்டத்திலும் அவர், தொடக்க வீரராக களமிறங்கக்கூடும். ஒருவேளை டு பிளெஸ்ஸிஸ் முழு உடற்தகுதியுடன் களமிறங்கும் பட்சத்தில் ஜேக் பிரேசர் மெக்கர்க் நீக்கப்படக்கூடும்.
அபிஷேக் போரெல், சமீர் ரிஸ்வி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அஷுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகாம் ஆகியோரும் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர்கள். பந்து வீச்சில் 9 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள மிட்செல் ஸ்டார்க், 6 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள குல்தீப் யாதவ் ஆகியோர் பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி செய்யக்கூடும். முக்கியமாக இவர்கள் இருவரும் விராட் கோலிக்கு எதிராக எவ்வாறு செயல்படப் போகிறார்கள் என்பதை காண ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் நிலவக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment