Published : 09 Apr 2025 10:47 AM
Last Updated : 09 Apr 2025 10:47 AM
அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. குஜராத் அணி சீசனை தோல்வியுடன் தொடங்கியிருந்தது.
அந்த அணி தனது தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தது. ஆனால் அதன் பின்னர் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றி கண்டது. மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ள குஜராத் அணி சொந்த மண்ணில் மீண்டும் ஒரு வெற்றியை பெறும் முனைப்புடன் களமிறங்குகிறது.
பேட்டிங்கில் ஷுப்மன் கில் பார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கக்கூடும். ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷுப்மன் கில் 43 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்திருந்தார். இதேபோன்று வாஷிங்டன் சுந்தர் 29 பந்துகளில் 49 ரன்களும், ஷெர்பேன் ரூதர்போர்டு 16 பந்துகளில் 35 ரன்களும் விளாசியிருந்தனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த திறன் வெளிப்படக்கூடும். அதேவேளையில் கடந்த ஆட்டத்தில் விரைவாக ஆட்டமிழந்த சாய் சுதர்சன், ஜாஸ் பட்லர் மீண்டும் மட்டையை சுழற்றுவதில் கவனம் செலுத்தக்கூடும்.
பந்து வீச்சில் கடந்த இரு ஆட்டங்களாக முகமது சிராஜ் அசத்தி வருகிறார். ஆர்சிபிக்கு எதிராக 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றிய அவர், ஹைதராபாத் அணிக்கு எதிராக 17 ரன்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இன்றைய ஆட்டத்திலும் அவர், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதேபோன்று சுழற்பந்து வீச்சில் சாய் கிஷோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நடப்பு சீசனில் 4 ஆட்டங்களில் 8 விக்கெட்களை வீழ்த்தியுள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்து பந்துவீச்சு வெளிப்படக்கூடும்.
அதேவேளையில் ரஷித் கான், இஷாந்த் சர்மா ஆகியோரது பந்துவீச்சு கவலை அளிக்கும் வகையில் உள்ளது. ரஷித் கான் 4 ஆட்டங்களில் ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றியுள்ளார். அதேவேளையில் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் வாரி வழங்கியுள்ளார். இஷாந்த் சர்மா ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஓவர்களை வீசி விக்கெட் ஏதும் கைப்பற்றாமல் 53 ரன்களை தாரை வார்த்திருந்தார். நடப்பு சீசனில் அவர், 8 ஓவர்களை வீசி 107 ரன்களை வழங்கி ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றியுள்ளார். அநேகமாக இன்றைய ஆட்டத்தில் இஷாந்த் சர்மா நீக்கப்படக்கூடும்.
ராஜஸ்தான் அணி தனது கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்குகிறது. இந்த ஆட்டத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 67 ரன்கள் விளாசியிருந்தார். அவர், பார்முக்கு திரும்பியிருப்பது அணியின் பலத்தை அதிகரிக்கச் செய்யக்கூடும். சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல், ரியான் பராக், நித்திஷ் ராணா ஆகியோரும் மட்டையை சுழற்றக்கூடியவர்கள். பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் பார்முக்கு திரும்பி உள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றிய அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல் திறன் வெளிப்படக்கூடும். அவரை தவிர்த்து சந்தீப் சர்மா மட்டுமே நம்பிக்கை அளிக்கக்கூடியவராக உள்ளார். இன்றைய போட்டி நடைபெறும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த 4 ஆட்டங்களில் முறையே 243, 232, 196 மற்றும் 160 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ரன் மழையில் நனையக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment