Published : 09 Apr 2025 09:43 AM
Last Updated : 09 Apr 2025 09:43 AM
கொல்கத்தா: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் போராடி தோல்வி அடைந்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று பிற்பகலில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ் ஜோடி அதிரடியாக விளையாடியது. எய்டன் மார்க்ரம் 28 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் விளாசிய நிலையில் ஹர்ஷித் ராணா பந்தில் போல்டானார். முதல் விக்கெட்டுக்கு எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ் ஜோடி 10.4 ஓவர்களில் 99 ரன்கள் குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய நிகோலஸ் பூரன், மிட்செல் மார்ஷுடன் இணைந்து வாணவேடிக்கை நிகழ்த்தினார். 36 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் தனது 7-வது அரை சதத்தை விளாசினார் மிட்செல் மார்ஷ். நடப்பு சீசனில் இது அவரது 4-வது அரைசதமாக அமைந்தது. தொடர்ந்து வருண் சக்ரவர்த்தி வீசிய 14-வது ஓவரில் மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன் ஆகியோர் தலா ஒரு சிக்ஸர் பறக்கவிட்டனர்.
சுனில் நரேன் வீசிய 15-வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசினார் நிகோலஸ் பூரன். மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த மிட்செல் மார்ஷ் 48 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்த நிலையில் ஆந்த்ரே ரஸ்ஸல் பந்தை டீப் பாயிண்ட் திசையில் விளாசிய போது ரிங் சிங்கிடம் கேட்ச் ஆனது. 2-வது விக்கெட்டுக்கு மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன் ஜோடி 30 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்தது.
இதன் பின்னர் அப்துல் சமத் களமிறங்க ஹர்ஷித் ராணா வீசிய 17-வது ஓவரில் நிகோலஸ் பூரன் 2 இமாலய சிக்ஸர்களை அடித்தார். இதையடுத்து ஆந்த்ரே ரஸ்ஸல் வீசிய 18-வது ஓவரில் நிகோலஸ் பூரன் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 24 ரன்களை வேட்டையாடினார். மட்டையை சுழற்றிய நிகோலஸ் பூரன் 21 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார்.
ஐபிஎல் தொடரில் இது அவரது 12-வது அரை சதமாக அமைந்தது. நிதானமாக விளையாடி அப்துல் சமத் 6 ரன்னில் ஹர்ஷித் ராணா பந்தில் நடையை கட்டினார். நிகோலஸ் பூரன் 36 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். டேவிட் மில்லர் 4 பந்தில் 4 ரன்கள் சேர்த்தார்.
கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 51 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்கள் கைப்பற்றினார். 239 ரன்கள் இலக்குடன் பேட் செய்த கொல்கத்தா அணிக்கு சுனில் நரேன் அதிரடி தொடக்கம் கொடுத்தார். அதேவேளையில் குயிண்டன் டி காக் 9 பந்தில் 15 ரன் எடுத்த நிலையில் ஆகாஷ்தீப் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் அஜிங்க்ய ரஹானே மட்டையை சுழற்றினார்.
இதனால் பவர்பிளேவில் கொல்கத்தா அணி 90 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய சுனில் நரேன் 13 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்த நிலையில் திக்வேஷ் ராத்தி பந்தை சிக்ஸருக்கு விளாச முயன்று ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர், ரஹானேவுடன் இணைந்து அதிரடியாக விளையாட கொல்கத்தா அணி 7.2 ஓவர்களிலேயே 100 ரன்களை எட்டியது. இதனால் கொல்கத்தா அணி இலக்கை சிரமம் இல்லாமல் எட்டிப்பிடிக்கும் என கருதப்பட்டது.
அஜிங்க்ய ரஹானே 26 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார். 40 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை ஷர்துல் தாக்குர் பிரித்தார். ரஹானே 35 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஷர்துல் தாக்குர் பந்தில் ஆட்டமிழந்தார்.
இது திருப்பு முனையை ஏற்படுத்தியது. அப்போது கொல்கத்தா அணி 13 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்திருந்தது. 7 ஓவர்களில் வெற்றிக்கு 77 ரன்கள் தேவையாக இருந்தது. இதன் பின்னர் களமிறங்கிய ரமன்தீப் சிங் (1), அங்க்ரிஷ் ரகுவன்ஷி (5) ரன்களில் நடையை கட்டினர். வெங்கடேஷ் ஐயர் 29 பந்துகளில், 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆகாஷ் தீப் பந்தில் ஆட்டமிழந்தார்.
கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆந்த்ரே ரஸ்ஸல் 7 ரன்களில் ஷர்துல் தாக்குல் பந்தில் நடையை கட்டினார். இதன் பின்னர் ஹர்ஷித் ராணாவுடன் இணைந்து ரிங்கு சிங் போராடினார். ரவி பிஷ்னோய் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவையாக இருந்தன.
முதல் பந்தை ஹர்ஷித் ராணா பவுண்டரிக்கு விரட்ட அடுத்த பந்தை வீணடித்தார். 3-வது பந்தில் ஒரு ரன் சேர்க்கப்பட்டது. இதனால் 3 பந்துகளில் 19 ரன்கள் தேவை என நெருக்கடி அதிகமானது. 3 சிக்ஸர்களை அடித்தால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு செல்லும் என்ற நிலையில் அடுத்தடுத்து பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய ரிங்கு சிங் கடைசி பந்தை சிக்ஸருக்கு விளாசினார்.
ஆனால் அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை. முடிவில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ரிங்கு சிங் 15 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 38 ரன்களும், ஹர்ஷித் ராணா 9 பந்துகளில், 10 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். லக்னோ அணி தரப்பில் ஆகாஷ் தீப், ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக நிகோலஸ் பூரன் தேர்வானார். 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ அணி நடப்பு சீசனில் 3-வது வெற்றியை பதிவு செய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment