Published : 07 Apr 2025 07:43 AM
Last Updated : 07 Apr 2025 07:43 AM

புத்துயிர் கொடுக்க அணியில் இணைந்தார் பும்ரா: பெங்களூரு அணியை வீழ்த்துமா மும்பை இந்தியன்ஸ்?

மும்பை: ஐபிஎல் கிரிக்​கெட் சீசனில் இன்று நடை​பெறும் லீக் ஆட்​டத்​தில் மும்பை இந்​தி​யன்​ஸ், ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணி​கள் மோதவுள்​ளன.

மும்பை வான்​கடே மைதானத்​தில் இந்த ஆட்​டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடை​பெறவுள்​ளது. மும்பை இந்​தி​யன்ஸ் அணி இது​வரை 4 போட்டிகளில் விளை​யாடி ஒரு வெற்​றி, 3 தோல்வி​களைப் பெற்று மோச​மான நிலை​யில் உள்​ளது.

கொல்​கத்தா அணிக்கு எதி​ரான போட்​டி​யில் மட்​டுமே அந்த அணி வெற்றி பெற்​றது. மற்ற ஆட்​டங்​களி​லும் அந்த அணி தோல்வி கண்​டுள்​ளது. அந்த அணிக்கு இன்​னும் 10 ஆட்​டங்​கள் மீத​முள்​ளன. இதில் குறைந்​தது 7 ஆட்​டங்​களில் வெற்றி பெற்​றால் மட்​டுமே அந்த அணி பிளே ஆப் சுற்​றுக்கு முன்​னேறும்.

அந்த அணி​யின் தொடக்க ஆட்​டக்​காரர் ரியான் ரிக்​கெல்​டன் ஒரு ஆட்​டத்​தில் மட்​டுமே ஜொலித்​தார். மற்ற ஆட்​டங்​களில் குறைந்த ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து அணி நிர்​வாகத்​தின் நம்​பிக்​கை​யைப் பெறத் தவறி​னார். நமன் திர், சூர்​யகு​மார் யாதவ், திலக் வர்​மா, ஹர்​திக் பாண்​டியா ஆகியோர் அதிரடி​யாக விளை​யாடி வரு​கின்​றனர்.

லக்​னோவுக்கு எதி​ராக நடை​பெற்ற ஆட்​டத்​தில் அந்த அணி 12 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்​டது. சூர்​யகு​மார் யாதவ், நமன் திர் ஆகியோர் அதிரடி​யாக விளை​யாடிய​போதும் கடைசி ஓவரில் 22 ரன்​கள் தேவை என்ற நிலை​யில் ஹர்​திக் பாண்​டி​யா, மிட்​செல் சான்ட்​னர் ஆகியோ​ரால் வெற்​றியைப் பெற்​றுத் தர முடிய​வில்​லை.

இன்​றைய ஆட்​டத்​தின்​போது வில் ஜேக்​ஸ், ரியான் ரிக்​கெல்​டன், நமன் திர், சூர்​யகு​மார் யாதவ், திலக் வர்​மா, ஹர்​திக் பாண்​டியா ஆகியோரிட​மிருந்து சிறப்​பான இன்​னிங்ஸ் வெளிப்​பட்​டால்​தான் அந்த அணி வெற்​றியை வசப்​படுத்த முடி​யும். இன்​றைய ஆட்​டத்​தில் காயமடைந்து மீண்​டும் அணி​யில் இணைந்​துள்ள நட்​சத்​திர பந்​து​ வீச்​சாளர் பும்ரா களமிறங்கக்​கூடும் என்று தெரி​கிறது.

இந்நிலையில் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் ஜஸ்பிரீத் பும்ரா களமிறங்குவது உறுதி என்று மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே அறிவித்துள்ளார். இதனால் மும்பை ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

மும்பை அணி பவுலிங்​கில் டிரெண்ட் போல்ட், அஸ்​வனி குமார், விக்​னேஷ் புத்​தூர், ஹர்​திக் பாண்​டி​யா, தீபக் சாஹர் ஆகியோரை நம்​பி​யுள்​ளது. கடந்த ஆட்​டத்​தில் கேப்​டன் ஹர்​திக் பாண்​டி​யா, அபார​மாக பந்​து​வீசி 5 விக்​கெட்​களைக் கைப்​பற்​றி​னார். இந்த ஆட்ட​த்தி​லும் ஆர்​சிபி அணி வீரர்​களுக்கு பாண்​டியா நெருக்​கடி தரக்​கூடும். ஜஸ்​பிரீத் பும்ரா அணி​யினருடன் இணை​யும்​போது அது மும்பை அணிக்கு புதிய தெம்​பை​யும், உற்​சாகத்​தை​யும் அளிக்​கும் என்று நம்​பலாம்.

அதே​நேரத்​தில் பெங்​களூரு அணி 3 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, ஒரு தோல்​வி​யுடன் 4 புள்​ளி​களைப் பெற்று பட்​டியலில் முன்​னேறி​யுள்​ளது. பெங்​களூரு அணிக்கு பிலிப் சால்ட், அதிரடி ஆட்​டக்​காரர் விராட் கோலி ஆகியோர் சிறப்​பான தொடக்​கத்தை அளித்து வரு​கின்​றனர். அதே​போல் தேவ்​தத் படிக்​கல், கேப்​டன் ரஜத் பட்​டி​தார், லியாம் லிவிங்​ஸ்​டன், ஜிதேஷ் சர்​மா, டிம் டேவிட் ஆகியோர் அதிரடி​யாக விளை​யாடும்​ பட்​சத்​தில் அது மும்பை அணிக்கு கடும் சவாலாக இருக்​கக்கூடும். மேலும், பவுலிங்​கில் ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள், கிருணல் பாண்​டி​யா, சுயாஷ் சர்மா ஆகியோ​ரும் எதிரணி வீரர்​களை மிரட்​டு​வதற்​குக் காத்​திருக்​கின்​றனர்.

மும்​பை​யில் இந்த ஆட்​டம் நடை​பெறு​வ​தால் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதி​கம்​ இருக்​கும்​ என்​று ரசிகர்​களால்​ எதிர்​பார்​க்​கப்​படுகிறது.

ரோஹித் களமிறங்குவாரா? - லக்னோ அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் மும்பை அணிக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்திருந்த ரோஹித் சர்மா நீக்கப்பட்டார். அவர் இம்பேக்ட் வீரராக கூட அணியில் சேர்க்கப்படவில்லை. இது மும்பை ரசிகர்களுக்கு மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

எனவே, இன்றைய ஆட்டத்தில் அவர் அணியில் சேர்க்கப்படுவாரா அல்லது நீக்கப்படுவாரா என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக அணி நிர்வாகம் இதுவரை அறிவிக்கவில்லை. கடைசி நேர மாற்றங்கள் மூலம் ரோஹித் சர்மா அணிக்குள் வர வாய்ப்புள்ளதாக ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x