Published : 06 Apr 2025 03:29 PM
Last Updated : 06 Apr 2025 03:29 PM

அன்று அதிக ரன்களை விட்டுக்கொடுத்த ஆர்ச்சர்: மேட்ச் வின்னிங் ஸ்பெல் வீசியது எப்படி?

சண்டிகர்: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்த ராஜஸ்தான் ராயல்ஸின் ஆர்ச்சர், தனது அணியின் வெற்றிக்காக மேட்ச் வின்னிங் ஸ்பெல் வீசி அசத்தினார். அவரது பவுன்ஸ் பேக் கதையை கொஞ்சம் பார்ப்போம்.

இந்த சீசனின் தொடக்க ஆர்ச்சருக்கு எதிர்பார்த்த வகையில் அமையவில்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 4 ஓவர்களில் 76 ரன்கள் கொடுத்திருந்தார். அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக 2.3 ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்திருந்தார். முதல் இரண்டு ஆட்டங்களில் விக்கெட் வீழ்த்தாத அவர், அடுத்தடுத்த ஆட்டங்களில் அதை மாற்றினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். ஒரு மெய்டன் ஓவரும் அந்த ஆட்டத்தில் வீசி இருந்தார்.

இந்த நிலையில் சனிக்கிழமை (ஏப்.5) பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுவும் இன்னிங்ஸின் முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இருவரும் ஆர்ச்சர் வீச்சில் போல்ட் ஆகினர்.

மேட்ச் வின்னிங் ஸ்பெல் வீசியது எப்படி? - ஆர்ச்சரின் பலமே வேகமாக பந்து வீசுவது தான். அதை பஞ்சாப் உடனான ஆட்டத்தில் சரியாக செய்திருந்தார். அதற்கான பலனை அறுவடை செய்தார். பிரியான்ஷ் ஆர்யா விக்கெட்டை கைப்பற்ற 144.6 கிலோமீட்டர் வேகத்திலும், ஸ்ரேயாஸ் விக்கெட்டை வீழ்த்த 148.6 கிலோமீட்டர் வேகத்திலும் பந்து வீசினார் ஆர்ச்சர். என்ன நடக்கிறது என பேட்ஸ்மேன்கள் அறிவதற்குள் அவர்களது விக்கெட்டை தூக்கி விட்டார். அதன் மூலம் பஞ்சாப் உடனான ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

“இந்த சீசனின் தொடக்கத்தில் அது நடந்தது. (ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை கொடுத்தது குறித்து). ஆனால், அணியின் வெற்றிக்கு என்னால் பங்களிப்பை கொடுக்க முடிந்ததில் மகிழ்ச்சி. எல்லா நாளும் இதே போல சிறப்பான நாளாக அமைவது இல்லை. சில தருணங்களில் தான் அதிர்ஷ்டம் கை கொடுக்கும். ஏனெனில் எல்லோரும் கடுமையாக பயிற்சி செய்கிறார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்” என ஆர்ச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x