Published : 04 Apr 2025 11:17 AM
Last Updated : 04 Apr 2025 11:17 AM
கடந்த ஐபிஎல் சீசனில் இறுதி வரை முன்னேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் வெற்றிக்குக் காரணம் அவர்களது வழக்கத்துக்கு மாறான எதிர்பாரா காட்டடி ஆக்ரோஷம்தான். ஆனால் ஒரு சீசனில் செய்ததை மற்றொரு சீசனில் செய்ய முடியாது. ஏனெனில் எதிரணியினர் விழித்துக் கொள்வார்கள். அதை தடுப்பற்கான உத்திகளை வகுப்பார்கள். இது தெரியாமல் கண்மூடித்தனமான ஆக்ரோஷம் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக வியாழக்கிழமை அன்று நடைபெற்ற ஆட்டம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எதிர்கொண்ட பெரிய தோல்வியாக (ரன்கள் அடிப்படையில்) அமைந்து விட்டது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற ஐபிஎல் 2025-ம் ஆண்டின் 15-வது ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் படுதோல்வி அடைந்தது. தொடர்ச்சியாக கொல்கத்தாவிடம் சன்ரைசர்ஸ் வாங்கும் 5-வது தோல்வி இது. இதோடு மட்டுமல்லாமல் ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மாவின் அல்ட்ரா அக்ரஷன் எடுபடாமல் வெகு சொற்பமாக இருவரும் ஆட்டமிழந்ததும் கொல்கத்தாவுக்கு எதிராகத்தான். அதாவது கொல்கத்தாவுக்கு எதிராக ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மாவின் அதிரடி பாச்சா இதுவரை எடுபடவில்லை என்பதோடு இருவரையும் தட்டிப் போட்டு தூக்குகின்றனர்.
அபிஷேக், ட்ராவிஸ் ஹெட் இணைந்து 3 முறை கொல்கத்தாவுக்கு எதிராக தொடங்கியுள்ளனர். மூன்று முறையும் முதல் 2 ஓவர்களிலேயே வெளியேற்றப்பட்டு விட்டனர். வைபவ் அரொரா வெறும் இன்-ஸ்விங்கர் பவுலர் மட்டுமே. அதனால் இடது கை பேட்டர்களுக்கு அவர் பெரிய அச்சுறுத்தல். ஒவ்வொரு பந்தையுமே விளாச நினைக்கும் ட்ராவிஸ் ஹெட்டை இவர்தான் நிற்க வைத்துத் தூக்கினார்.
ஹர்ஷித் ராணா பந்தை இப்படித்தான் அபிஷேக் சர்மா லெந்தையும், வேகத்தையும் கவனிக்காமல் மட்டையை வீசினார் எட்ஜ் ஆகி கேட்ச் கொடுத்து வெளியேறினார். இஷான் கிஷன், வைபவ் அரோராவின் ஓவர் பிட்ச் பந்தை தரையோடு ஆடுவதற்குப் பதிலாக காற்றில் தூக்கி அடிக்க ரஹானே அற்புதமான ஒரு ஷார்ப் கேட்சைப் பிடிக்க வெளியேறினர். 200 ரன்களை சேஸ் செய்ய ஹெட், அபிஷேக், இஷான் கிஷன் ஆகியோரில் ஒருவராவது நிற்க வேண்டும். ஆனால் ஒருவர் கூட நிற்கவில்லை காரணம், கண்மூடித்தனமான ஆக்ரோஷமே.
ஹர்ஷித் ராணா, அபிஷேக் சர்மாவுக்கு வைடாக பந்தை மிகவும் ஸ்லோவாக வீசி முடக்கினார். ஆகவே சில பவுலர்களை அடிக்க முடியாது என்றால் விட்டு விட வேண்டும். நிற்க வேண்டும். பிறகு மற்ற பவுலர்களை அடிக்கலாம். ஆனால் ஈகோயிஸ்ட் ஆக ராணாவையும் வைபவையும் அடிப்பேன் என்று கங்கணம் கட்டினால் நிச்சயம் எடுபடாமல் போய்விடும்.
சன்ரைசர்ஸ் அணி 280 ரன்களை அடித்த பிறகே பவுலர்கள் எல்லாம் சொத்தைகள் என்று நினைத்து ஆடுகின்றனர். அதுதான் 4 போட்டிகளில் 3-ல் தோல்விக்கு இட்டுச் சென்றுள்ளது. அதுவும் ஹாட்ரிக் தோல்வி. இந்த நிலையில் தங்கள் அணுகுமுறையை மாற்றுவார்களா சன்ரைசர்ஸ் என்பதை அடுத்தப் போட்டியிலிருந்துதான் பார்க்க வேண்டும். கேப்டன் பாட் கமின்ஸ் மாற்றத்திற்கான சூசகக் குறிப்பை கொல்கத்தா உடனான ஆட்டத்துக்கு பிறகு வெளியிட்டதும் கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment