Published : 01 Apr 2025 05:15 PM
Last Updated : 01 Apr 2025 05:15 PM
என்னதான் தமிழ் வர்ணனையில் தோனி புகழ்மாலை, பாமாலை பாடி வந்தாலும் தோனியின் ‘பாடி’ தேய்ந்து போய்க்கொண்டிருக்கிறது, வயதானதற்கான அடையாளங்கள் அவரது உத்வேகமின்மையில் தெட்டெனப் புலப்படுகிறது என்ற விமர்சனங்கள் எழுந்து வருவதைத் தவிர்க்க முடியாது. சிஎஸ்கே இதனை எதிர்கொண்டேயாக வேண்டும்.
தோனியின் ‘மதிப்பு’ப் பற்றி ஏன் இவ்வளவு பிம்ப வலைகள் பின்னப்படுகின்றன என்றால், அவர் சிஎஸ்கேவின் வணிக முத்திரை மட்டுமல்ல, ஐபிஎல் வர்த்தகத்தின் முகமாகவே பார்க்கப்படுகிறார் என்பதே. அதனால்தான் விதிகளை மாற்றி இம்பாக்ட் பிளேயர் என்ற ஒன்றை தோனிக்காகவே கொண்டு வந்தனர்.
தோனி செய்யும் சாதாரண ஸ்டம்பிங்கையும், அவர் எடுக்கும் சிங்கிள், இரண்டுகள் அனைத்தையும் ‘இன்னமும் கூட மனுஷன் பார்றா...’ என்றெல்லாம் போலியாகப் புகழ்வதில் எந்த ஒரு பயனும் இல்லை. ஒளிபரப்பாளர்களின் இத்தகைய புகழ்ச்சி வலியுறுத்தல்களின் காரணம் வெறும் வணிகமே.
சிஎஸ்கேவின் வணிக முகமே தோனிதான். ஆனால், வெற்றுச் சுரைக்காயை வைத்துக் கொண்டு வணிகம் செய்வது எப்படி சாத்தியம்? ஒரு விதத்தில் அவரது ரசிகர்களே அவரை வெறுக்கத் தொடங்கி விடுவார்கள்.
சிஎஸ்கே ரசிகர்கள் அணி வெல்வதைத்தான் விரும்புவார்களே தவிர ‘தோனியின் தரிசனம்’, மைதானத்தில் அவரின் ‘திருவுலா’வினால் எல்லாம் திருப்தி அடைந்து விட மாட்டார்கள். தோனியின் பிரச்சினை என்னவெனில், அவரால் பந்துகளை அடிக்க முடியவில்லை, அப்படியே அடித்தாலும் மேட்ச் முடிந்து தோல்வி உறுதியான பிறகு அடிக்கும் வெற்று அடியாக உள்ளது. அன்று தீக்ஷனாவை ஒரு ஓவர் முழுக்க பவுண்டரியே அடிக்க முயற்சி செய்யாமல் ஆடினார்.
நம் கேள்வியெல்லாம், ஒருவரால் அடிக்க முடியவில்லை என்பது நிதர்சனம். ஆனால் அடிக்கும் முயற்சி, வெற்றியை நோக்கி அடியெடுத்து வைக்கும் முயற்சி கூட இல்லாமல் இருப்பவர் எப்படி பிராண்ட் வேல்யூவாகத் திகழ முடியும்?
எந்தத் துறையிலும் ஸ்டார்களுக்கான ‘நிகழ்த்து உள்ளடக்கம்’ இன்றி அவர்களது பாப்புலாரிட்டி தொடர்ந்து நீடிக்க முடியாது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கிறார் என்றால் வெறும் முகத்தை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்ய முடியாது; படத்தில் உள்ளடக்கம் வேண்டும், அந்த உள்ளடக்கத்தை தனக்கேயுரிய பாணியில் அவரால் நிகழ்த்த முடிய வேண்டும்; அப்போதுதான் பிராண்ட் வேல்யூவைத் தக்க வைக்க முடியும்? தோனியின் உள்ளடக்கம் காலியாகி நீண்ட காலம் ஆகிவிட்டது. அவரை வைத்துக் கொண்டு இனியும் ஒன்றும் செய்ய முடியாது.
அவருடைய உடல் மொழியுமே கூட ‘போதும்டா... ஆளை விடுங்கடா!’ என்பது போல்தான் உள்ளது. தோனிக்கும் சிஎஸ்கே நிர்வாகத்துக்குமான தொடர்பு உரிமைதாரருக்கும் அவரின் பணியாட்களுக்கும் உள்ள தொடர்பு போலவே உள்ளது. அவரை யாரும் அணுக முடிவதில்லை.
இந்த டவுனில் இறங்கு என்று சொல்ல முடியவில்லை. இப்படி ஆடு என்று சொல்ல முடியவில்லை. அவரைப் பற்றிய எந்த முடிவானாலும் தோனியே எடுக்கிறார். இப்படி ஓர் அணியை நடத்த முடியாது. ஆக, மாற்று வழிகளைச் சிந்திப்பதுதான் புத்திசாலித்தனம் என்பதோடு இப்போது சிஎஸ்கேவுக்கு அவசரமாகத் தேவைப்படும் தீர்மானகரமான முடிவும் ஆகும்.
ஆட்டம் முடிய 4-5 ஓவர்கள் இருக்கும் வரை தோனி பேட்டிங்கில் இறங்குவதை ஐபிஎல் 2025-ல் பார்க்க முடியாது என்றே தெரிகிறது. சிஎஸ்கே தேறுவதற்கு ஒரே வழி யாராவது தோனியிடம் பேசி அவரை தொடக்க வீரராக இறங்கச் செய்ய வேண்டும்.
ஏனெனில் ஓப்பனிங்கில் இறங்கினால் பவர் ப்ளே, களத்தில் டீப்பில் பீல்டர்கள் அதிகம் இருக்க மாட்டார்கள், அப்போது தூக்கி அடித்து ஒரு நல்ல ஸ்டார்ட்டை அவர் கொடுக்க முடியும் அதிகம் ஓடவும் தேவையுமில்லை. இதற்கு தோனியை சம்மதிக்க வைக்க முடியவில்லை எனில், அவரது உடல் ஃபிட்னெஸ் போலவே அவரது பிராண்ட் வேல்யூவும் தேய்ந்து போய் கடைசியில் ஒன்றுமில்லாமல் போய் காமெடி பீஸ் ஆகிவிடுவார்.
இதனை சிஎஸ்கே நிர்வாகம் தடுக்க வேண்டும் அல்லது அவரை கவுரவமாக விடுவிக்க வேண்டும். இல்லையெனில், 3 ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த சிறந்த இந்திய கேப்டன் என்ற தகுதியையும், பெயரையும், உண்மையான புகழையும் ‘திரட்டி’ உருவாக்கப்பட்ட இந்த சிஎஸ்கே ரசிகப் பட்டாளப் பிம்பம் நிச்சயம் காலி செய்து விடும். அதனை அனுமதிக்கலாகாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 9 Comments )
அவர் எந்த வரிசையில் இறங்க வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார் என்றால் பயிற்சியாளர்கள் அணி நிர்வாகம் எல்லாம் எதற்கு?. தன்னால் முடியவில்லை எனும் போது இளம் வீரர்களுக்கு வழி விடலாமே.
4
1
Reply
மேல் வரிசை ஆட்டக்காரர்கள் சொதப்பினால் DHONI யால் கூட சரிசெய்ய முடியாது. Stumping reaction time வியக்க வைக்கிறது. DRS கணிப்பு மிக துல்லியம் கெய்க்வாட் அசுவினை POWER PLAY இல் அடிவாங்க வைத்தது, மூன்றாம் தர FIELDING , THRIPATHI முதல் ஆட்டக்காரர் ஆக சொதப்பியது இதையெல்லாம் தோனியாலும் சரி செய்ய முடியாது It has become a fashion to deride Dhoni by all and sundry
3
4
Reply