Published : 28 Jul 2018 08:29 PM
Last Updated : 28 Jul 2018 08:29 PM
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு இந்திய தொடக்க வீரர்கள் யார் என்ற கேள்வி தற்போது சூடான விவாதப்பொருளாகியுள்ளது.
காரணம் ஷிகர் தவணின் அயல்நாட்டு மோசமான பார்ம் என்பதோடு பயிற்சி ஆட்டத்தில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஸ்கோரரைத் தொந்தரவு செய்யாமல் வெளியேறினார். 2வது இன்னிங்சில் குவின் வீசிய ஸ்விங் பந்துகளில் பீட்டன் ஆகி கடைசியில் பவுல்டும் ஆனார். அவரது கால் நகர்த்தல் உத்திகள் பெரும்பாலும் ஸ்விங் ஆகாத துணைக்கண்ட பிட்ச்களுக்கே பொருத்தமானது என்று நிபுணர்கள் கருத்து கூறிய நிலையில், கங்குலி இந்தியா டிவி-யில் கூறியதாவது:
“விஜய், ராகுல் ஆகியோரைத்தான் நான் டெஸ்ட் தொடரில் தொடக்க வீரராகக் களமிறக்குவேன். ஷிகர் தவண் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த வீரர், ஒருநாள் தொடரில் சுமாரான டச்சில் இருந்தார்.
ஆனால் வெளிநாடுகளில் அவர் டெஸ்ட்டில் தொடக்க வீரராக இறங்கும்போது, அவர் ரன்கள் அடிப்பதில்லை என்றே ரெக்கார்ட் கூறுகிறது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து எதுவாக இருந்தாலும் அவர் சரியாக ஆடியதில்லை” என்று கூறியுள்ளார்.
ஷிகர் தவணின் அயல்நாட்டுப்பிரச்சினைகளை சஞ்சய் மஞ்சுரேக்கர் அலசும் போது, அவர் ஷார்ட் பிட்ச் பந்துகளை அதன் திசையில் சென்று மட்டையை நேராகத் தொங்க விடுகிறார், அல்லது அடிப்பதற்கு போதிய இடம் ஏற்படுத்திக் கொள்ளாமலேயே புல் அல்லது ஹூக் ஆடி டாப் எட்ஜ் ஆகிறார். மாறாக அவர் பேக் அண்ட் அக்ராஸ் முறையில் ஆட வேண்டும்.
அதேபோல் துணைக்கண்ட பிட்சில் ஆடுவது போலவே ஆஃப் ஸ்டம்ப் மற்றும் வெளியே பிட்ச் ஆகும் பந்துகளை எழும்பும்போதே காலை நகர்த்தாமல் ட்ரைவ் ஆடுகிறார், இது இங்கிலாந்தில் செல்லுபடியாகாது, அங்கு பந்து பிட்ச் ஆன பிறகு திசை மாறும் என்பதால் இவர் ஷாட் எட்ஜ் ஆகிறது, என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறுகிறார், அதே போல் முன்னங்காலை குறுக்காகப் போடுவதால் சில வேளைகளில் அயல்நாடுகளில் ஸ்விங் ஆவதால் எல்.பி.யும் ஆகிறார் என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார். இந்நிலையில் கங்குலியும் கூறியுள்ளார்.
ஆனால் விராட் கோலி இந்த விமர்சனங்களையெல்லாம் மதிக்காதவர், தவானைத்தான் அணியில் எடுப்பார் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT