Published : 29 Mar 2025 12:19 AM
Last Updated : 29 Mar 2025 12:19 AM
ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் பேட்டிங், பந்துவீச்சுக்கு சம அளவில் கைகொடுக்கும் ஆடுகளங்கள் அமைக்கப்பட வேண்டும் என லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்குர் கூறியுள்ளார்.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது.
லக்னோ அணி சார்பில் ஷர்துல் தாக்குர் 4 ஓவர்களை வீசி 34 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். 191 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணி நிகோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ் ஆகியோரது அதிரடியால் 16.1 ஓவரிலேயே 5 விக்கெட்கள் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஷர்துல் தாக்குர் தேர்வானார்.
போட்டி முடிவடைந்ததும் ஷர்துல் தாக்குர் கூறும்போது,“இந்த வகையான ஆடுகளங்கள் பந்துவீச்சாளர்களுக்கு சிறிது கைகொடுக்கும் என்று நான் நினைக்கிறேன். பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு ஆட்டம் சமநிலையில் இருக்கும் வகையில் ஆடுகளங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என கடந்த ஆட்டத்தின்போதே கூறினேன். இம்பாக்ட் பிளேயர் விதி இருப்பதால் 240 முதல் 250 ரன்கள் குவிக்கப்படுவது பந்து வீச்சாளர்களுக்கு நியாயம் சேர்ப்பதாக இல்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment