Published : 28 Mar 2025 12:44 PM
Last Updated : 28 Mar 2025 12:44 PM
நடப்பு ஐபிஎல் சீசனில் 300 ரன்கள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை சாத்தியமாக்கும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பார்க்கப்படுகிறது. ஏனெனில், அந்த அணியின் தாக்குதல் ஆட்டம் அதற்கு காரணமாக அமைந்துள்ளது. அவர்களது பிராண்ட் ஆஃப் கிரிக்கெட் அப்படி. அதிரடி ரன் குவிப்பில் வரிந்து கட்டும் ஹைதராபாத் பேட்டிங் ஆர்டரில் புதுவரவாக இணைந்துள்ளார் அனிகேத் வர்மா.
அந்த அணியின் டாப் ஆர்டரில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் உள்ளனர். நடுவரிசையில் கிளாஸன், நிதி குமார் ரெட்டி நம்பிக்கை அளிக்கின்றனர். அந்த அணியின் லோயர் மிடில் ஆர்டரில் நம்பிக்கை அளிக்கிறார் அனிகேத் வர்மா.
நடப்பு ஐபிஎல் சீசனின் 7-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடியது. 12 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்திருந்தது ஹைதராபாத். ஆட்டத்தின் அந்த சூழலில் ஹைதராபாத் அணி 170 ரன்களை எட்டுமா என்ற நிலை இருந்தது. அப்போது வந்தார் அனிகேத் வர்மா. அபிஷேக், இஷான் கிஷன், ஹெட், கிளாஸன் ஆகியோர் ஆட்டமிழந்திருந்தனர். பொறுப்புடன் அணிக்காக அனிகேத் ஆடியாக வேண்டிய நிலை.
அதற்காக அவர் நிதானமாக ஆடவில்லை. ஆட்டத்தில் அதிரடி காட்டினார். முதல் பந்தில் சிங்கிள் எடுத்தார். அவர் எதிர்கொண்ட அடுத்த பந்தில் சிக்ஸர் விளாசினார். 13 பந்துகளில் 36 ரன்களை எடுத்தார். 5 சிக்ஸர்களை பறக்கவிட்டார். பவுண்டரி எதுவும் ஸ்கோர் செய்யவில்லை. அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு சிக்ஸர்களை விளாசிய அவர், அதற்கு அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவரது ஸ்ட்ரைக் ரேட் 366. சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ஒன்பது பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்தார். அவர் ஆட்டமிழந்தது லக்னோ அணியின் லக்.
‘குறைந்த பந்துகளை எதிர்கொண்டாலும் அதிரடியாக ஆடுமாறு எங்களது பேட்ஸ்மேன்களிடம் நாங்கள் சொல்கிறோம். அவர்களை 50 பந்துகள் ஆட வேண்டும் என்று நாங்கள் சொல்வதில்லை’ என இந்த ஆட்டத்துக்கு பிறகு ஹைதராபாத் கேப்டன் கம்மின்ஸ் கூறியிருந்தார். அதை அப்படியே பின்பற்றியுள்ளார் அனிகேத்.
யார் இவர்? - 23 வயதான அனிகேத் வர்மா, மத்திய பிரதேச அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். நடப்பு சீசனுக்கான மெகா ஏலத்தில் அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.30 லட்சத்துக்கு வாங்கி இருந்தது. அப்போது அவர் சீனியர் பிரிவில் எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் இருந்தார். அதன் பின்னர்தான் சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் தனது உள்ளூர் அணிக்காக ஒரு ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.
கடந்த ஆண்டு ஜுனில் மத்திய பிரதேசம் ப்ரீமியர் லீக் தொடரில் போபால் லெப்பேர்ட்ஸ் அணிக்காக விளையாடியதன் மூலம் கவனம் ஈர்த்தார். 5 இன்னிங்ஸில் ஆடி 244 ரன்கள் எடுத்தார். ஸ்ட்ரைக் ரேட் 204. மிடில் ஆர்டரில் அதிரடியாக ஆடும் பேட்ஸ்மேனாக அறியப்படுகிறார். அந்த தொடரின் ஒரு இன்னிங்ஸில் 41 பந்துகளில் 123 ரன்கள் எடுத்திருந்தார். மொத்தம் 13 சிக்ஸர்களை விளாசி இருந்தார். அவரது அணி அந்த ஆட்டத்தில் 278 ரன்கள் எடுத்திருந்தது.
கடந்த ஆண்டு டிசம்பரில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட்டில் தொடரில் மத்திய பிரதேச அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி இருந்தார். அதில் கர்நாடக அணிக்கு எதிரான ஆட்டத்தில் 75 பந்துகளில் 101 ரன்கள் எடுத்திருந்தார். பேட்டிங் மட்டுமல்லாது பந்து வீசும் திறனும் கொண்டுள்ளார். அவர் மீடியம் ஃபேஸர். நடப்பு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அறிமுகமானார். லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருந்தாலும் எதிர்வரும் போட்டிகளில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் சன்ரைசர்ஸுக்கு எழுச்சி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment