Published : 27 Mar 2025 06:00 PM
Last Updated : 27 Mar 2025 06:00 PM

பாகிஸ்தான் வீரர் ரிஸ்வானை கிண்டலடித்த இஷான் கிஷன்!

இஷான் கிஷன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அன்று சரவெடி சதம் ஒன்றை எடுத்து இந்திய அணித்தேர்வுக் குழுவின் கவனத்தை ஈர்த்ததோடு, ‘என்னை அழித் தொழிக்க முடியாது’ என்பதை தன் பேட் மூலம் செய்து காட்டினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 47 பந்துகளில் 106 ரன்களை விளாச சன் ரைசர்ஸ் 283 ரன்களைக் குவித்து உச்சம் தொட்டது, போட்டியையும் வென்றது. இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரியிடம் பேசிய இஷான் கிஷன் அந்தப் பேட்டியின்போது பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானை இடித்துரைத்துக் கேலி செய்தார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. ஒரு விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் முதிர்ச்சி அடைந்து வருவதாக நடுவர் சவுத்ரி வியப்பை வெளியிட அதற்கான பதிலில்தான் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் ரிஸ்வானை கிண்டலடித்துள்ளார் இஷான் கிஷன்.

நடுவர் சவுத்ரி: “நீங்கள், நான் நடுவராகப் பணியாற்றிய பல போட்டிகளில் ஆடியிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் வளர்ந்து விட்டீர்கள். எப்போது தேவையோ அப்போதுதான் அவுட் கேட்டு முறையிடுவீர்கள். முன்பெல்லாம் நீங்கள் எதற்கெடுத்தாலும் அப்பீல் செய்து கொண்டிருப்பீர்கள். இந்த மாற்றம் எப்படி வந்தது?”

இஷான் கிஷன்: “நடுவர்கள் மிகவும் சாமர்த்தியசாலிகளாகி விட்டனர். நான் எல்லாவற்றுக்கும் அவுட் அவுட் என்று அப்பீல் கேட்டுக் கொண்டிருந்தால் என் மீதான நம்பகத்தன்மை குறைந்து உண்மையான அவுட்டைக் கூட கொடுக்க மாட்டார்கள். ஆகவே, அவுட் என்று நமக்கு நன்கு தெரியும் என்ற நம்பிக்கையுடன் தான் அப்பீல் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

நான் முகமது ரிஸ்வான் போல் எதற்கெடுத்தாலும் ‘ஹவ் இஸ் தட்... ஹவ் இஸ் தட்...’ என்று கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தால் நீங்கள் சிங்கிள் அவுட் கூட தர மாட்டீர்கள்.”

இவ்வாறு இஷான் கிஷன் அப்பீல் என்பதில் ரிஸ்வானை எதிர்மறை உதாரணமாகக் காட்டி எதற்கு அவுட் கேட்க வேண்டும் என்ற அறிவும் தெளிவும் விக்கெட் கீப்பர்களுக்கு அவசியம் என்பதை விளக்கியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x