Published : 27 Mar 2025 10:55 AM
Last Updated : 27 Mar 2025 10:55 AM

‘ஐபிஎல் பந்து வீச்சாளர்களுக்கு உளவியல் நிபுணர்கள் தேவைப்படலாம்’ - அஸ்வின் கருத்து

சென்னை: டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளம் அதிகரிப்பது குறித்தும், பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுக்கு இடையிலான பேலன்ஸ் குறித்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பேசியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் 10 அணிகளும் தலா ஒரு போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் சென்னை - மும்பை, கொல்கத்தா - பெங்களூரு ஆட்டங்களை தவிர மற்ற அனைத்து ஆட்டங்களும் 200+ ரன்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தனது யூடியூப் சேனலில் பவுலர்கள் தரப்பில் அஸ்வின் பேசி உள்ளார்.

“ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் பந்து வீச்சாளர்களை கூடிய விரைவில் தனிப்பட்ட முறையில் உளவியல் நிபுணர்களிடம் அழைத்து செல்ல வேண்டிய நிலை வரும். உண்மையில் சில ஆடுகளங்களில் பவுலர்களால் பந்து வீசவே முடியவில்லை. பந்து வீச்சாளர்கள் ஃபுல் டாஸ் மட்டுமே வீச வேண்டி உள்ளது. சிறு வயதில் ஃபுல் டாஸ் வீசினால் ஆடுவது சுலபம் என நாம் எண்ணியது உண்டு. ஆனால், இங்கு பந்தை பிட்ச் செய்தால் அது பேட்டர்கள் ரன் குவிக்க உதவுகிறது. அதனால் ஃபுல் டாஸ் வீச வேண்டி உள்ளது” என அஸ்வின் கூறியுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு பிறகு நடப்பு சீசனில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் அஸ்வின் விளையாடி வருகிறார். அவரை ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கி இருந்தது சிஎஸ்கே. மும்பை உடனான முதல் போட்டியில் 4 ஓவர்களில் 31 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றி இருந்தார். நாளை (வெள்ளிக்கிழமை) சேப்பாக்கத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உடன் சிஎஸ்கே விளையாட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x