Published : 27 Mar 2025 08:20 AM
Last Updated : 27 Mar 2025 08:20 AM
அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 42 பந்துகளில், 9 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஷசாங் சிங் 16 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் விளாசி மிரட்டினார். முன்னதாக தொடக்க வீரரான பிரியன்ஸ் ஆர்யா 23 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் விளாசி ஆட்டமிழந்திருந்தார்.
244 ரன்கள் இலக்குடன் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான சாய் சுதர்சன் 41 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் விளாசினார். ஜாஸ் பட்லர் 33 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 54 ரன்களும், ஷெர்பேன் ரூதர்போர்டு 28 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்களும் சேர்த்தனர். கேப்டன் ஷுப்மன் கில் 14 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.
இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஒருவகையில் வெற்றியை கோட்டைவிட்டது என்றே கூற வேண்டும். அந்த அணி 11, 12, 13, 14 ஓவர்களில் முறையே 17, 17, 14, 17 ரன்கள் விளாசியது. ஆனால் அடுத்த 3 ஓவர்களில் பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்கள் சாதுர்யமாக செயல்பட்டு ஆட்டத்தை தங்கள் பக்கம் கொண்டு வந்தனர்.
15, 16, 17-வது ஓவர்களில் முறையே 5, 8, 5 ரன்களை மட்டுமே வழங்கினர். இதில் வைஷாக் விஜயகுமார் 2 ஓவர்களை வீசி 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அர்ஷ்தீப் சிங், கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரது ஆலோசனையின் படி வைஷாக் விஜயகுமார் அதிக அளவிலான வைடு யார்க்களை கையாண்டு ஷெர்பேன் ரூதர்போர்டை முடக்கினார்.
வைடு யார்க்கர்களுக்கு எதிராக ரூதர்போர்டு எந்தவிதமான வித்தியாசமான ஷாட்களை மேற்கொள்ள முயற்சிக்காததும் பஞ்சாப் அணிக்கு சாதகமாக அமைந்தது. மேற்கண்ட இந்த 3 ஓவர்களில்தான் குஜராத் அணி வெற்றியை தொலைத்தது. ஏனெனில் அந்த அணி தோல்வி அடைந்த ரன்களின் வித்தியாசம் 11 மட்டுமே. அதேவேளையில் முக்கியமான கட்டத்தில் சாய் சுதர்சன், ரூதர்போர்டு விக்கெட்களை கைப்பற்றியதுடன் மற்ற பந்து வீச்சாளர்களுக்கு திட்டம் வகுத்து கொடுத்தும் அசத்தினார் அர்ஷ்தீப் சிங்.
குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி 6 ஓவர்களில் 75 ரன்கள் தேவையாக இருந்தது. ஆனால் கைவசம் 8 விக்கெட்கள் இருந்தது. இந்த சூழ்நிலையில் பஞ்சாப் அணியில் இம்பாக்ட் பிளேயர் விதியின் கீழ் களமிறங்கிய வைஷாக் விஜயகுமார் 15 மற்றும் 17-வது ஓவர்களில் வைடு யார்க்கர்களை சாதுர்யமாக வீசி வெறும் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். 16-வது ஓவரை மார்கோ யான்சனும் கச்சிதமாக வீசி 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுக்க குஜராத் அணிக்கு நெருக்கடி அதிகமாக கடைசி 18 பந்துகளில், 57 ரன்கள் தேவை என்ற சூழ்நிலை ஏற்பட்டது.
இது ஒருபுறம் இருக்க பவர்பிளேவின் முதல் 3 ஓவர்களில் குஜராத் அணி 17 ரன்களே சேர்த்தது. ஆக மொத்தம் இந்த 6 ஓவர்களிலும் குஜராத் அணி சேர்த்தது வெறும் 35 ரன்கள்தான். அதேவேளையில் பந்து வீச்சிலும் கடைசி 8 ஓவர்களில் குஜராத் அணி 135 ரன்களை தாரைவார்த்தது. ஸ்ரேயஸ் ஐயர், ஷசாங் கூட்டணி 28 பந்துகளில் 81 ரன்களை விளாசி மிரட்டியது. கடைசி ஓவரை வீசிய முகமது சிராஜ் 23 ரன்களை வாரி வழங்கியிருந்தார்.
போட்டி முடிவடைந்ததும் குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கூறியதாவது: தொடக்கத்தில் 3 ஓவர்களில் 17 ரன்களே எடுத்தோம். அதன் பின்னர் நடுப்பகுதியில் தொடர்ச்சியான 3 ஓவர்களில் 18 ரன்களே எடுக்க முடிந்தது. இந்த 6 ஓவர்களிலும் கூட்டாக நாங்கள் 35 ரன்களையே பெற்றோம். இதுவே நாங்கள் ஆட்டத்தை இழக்க காரணமாக அமைந்தது. பந்து வீச்சில் ஆட்டத்தின் பிற்பகுதியில் நாங்கள் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தோம்.
பீல்டிங்கிலும் சில கேட்சுகள் தவறவிட்டோம். இந்த தவறால், 240-250 ரன்களைத் துரத்தும்போது அது எப்போதும் கடினமாகவே இருக்கும். இம்பாக்ட் பிளேயராக வந்து யார்க்கர்களை வீசுவது எளிதல்ல. கிட்டத்தட்ட 15 ஓவர்கள் பெஞ்சில் இருந்த ஒருவருக்கு இது ஒருபோதும் எளிதானது அல்ல. ஆனால் வைஷாக் விஜயகுமார் யார்க்கர்களை வீசிய விதத்தை பாராட்ட வேண்டும். இவ்வாறு ஷுப்மன் கில் கூறினார்.
‘அர்ஷ்தீப்பின் திட்டம்’: குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது வென்ற ஸ்ரேயஸ் ஐயர் கூறும் போது, “ஷசாங் சிங் 16 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தது அணிக்கு மிகவும் முக்கியமானது. பந்துவீச்சில் வைஷாக் விஜயகுமார் சிறப்பாக செயல்பட்டார். வைடு யார்க்கர் திட்டங்களில் அர்ஷ்தீப் சிங் முக்கிய பங்கு வகித்தார். அவர், சாய் சுதர்சனை ஆட்டமிழக்கச் செய்ததே ஆட்டத்தின் போக்கை எங்கள் பக்கம் திருப்பியது. மற்ற ஆட்டங்களிலும் இந்த உத்வேகத்தை முன்னெடுத்துச் செல்ல நாங்கள் முயற்சி செய்வோம்” என்றார்.
சதம் அடிக்கவிடாதது ஏன்? - ஸ்ரேயஸ் ஐயருக்கு கடைசி 3 ஓவர்களில் 4 பந்துகளை மட்டுமே எதிர்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதற்கு காரணம் ஷசாங் சிங் அதிக பந்துகளை எதிர்கொண்டதுதான். ஸ்ரேயஸ் ஐயர் 97 ரன்களுடன் களத்தில் இருந்த நிலையில் கடைசி ஓவர் முழுவதையும் ஷசாங் விளையாடியதால் ஸ்ரேயஸ் ஐயரால் சதம் அடிக்க முடியாமல் போனது. இது குறித்து ஷசாங் கூறும்போது, “கடைசி ஓவரின் போது ஸ்ரேயஸ் ஐயரிடம் சென்று சிங்கிள் எடுக்க வேண்டுமா என்று கேட்டேன். ஆனால் அவரோ, தனது சதத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறினார். இதைச் சொல்ல பெரிய மனதும், தைரியமும் தேவை, ஏனென்றால் டி20 போட்டிகளில், குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் சதங்கள் எளிதாக வருவதில்லை. ஸ்ரேயஸ் ஐயரின் வார்த்தைகள் எனக்கு அதிக நம்பிக்கையைக் கொடுத்தது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment