Published : 26 Mar 2025 07:49 AM
Last Updated : 26 Mar 2025 07:49 AM
விசாகப்பட்டினம்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ். முதலில் பேட் செய்த லக்னோ அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. மிட்செல் மார்ஷ் 36 பந்துகளில், 72 ரன்களும் நிக்கோலஸ் பூரன் 30 பந்தகளில் 75 ரன்களும் விளாசி மிரட்ட ஒரு கட்டத்தில் லக்னோ அணி 13 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 161 ரன்கள் குவித்திருந்தது.
இதனால் அந்த அணி எளிதாக 240 முதல் 250 ரன்களை குவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி 7 ஓவர்களில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ் ஆகியோர் அற்புதமாக செயல்பட்டு லக்னோ அணியை 209 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். குல்தீப் யாதவ் 4 ஓவர்களை வீசி 20 ரன்களை வழங்கி 2 விக்கெட்களையும், மிட்செல் ஸ்டார்க் 42 ரன்ளை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
210 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி அணி 7 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்தது. ஜேக் பிரேசர் மெக்கர்க் 1, அபிஷேக் போரெல் 0, சமீர் ரிஸ்வி 4 ரன்களில் நடையை கட்டினர். சற்று தாக்குப்பிடித்து விளையாடிய அக்கசர் படேல் 11 பந்துகளில் 22 ரன்களும், அனுபவம் வாய்ந்த டு பிளெஸ்ஸிஸ் 18 பந்துகளில் 29 ரன்களும் சேர்த்து ஆட்மிழந்தனர். அதிரடியாக விளையாட முயன்ற டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 22 பந்துகளில், 34 ரன்கள் எடுத்த நிலையில் சித்தார்த் பந்தில் போல்டானார்.
13 ஓவர்களில் டெல்லி அணி 116 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 7 ஓவர்களில் 94 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் இம்பாக்ட் பிளேயர் விதியின் கீழ் களமிறங்கிய அஷுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகாமுடன் இணைந்து லக்னோ அணியின் பந்து வீச்சை பதம்பார்த்தார். விப்ராஜ் நிகாம் 15 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து மிட்செல் ஸ்டார்க் 2, குல்தீப் யாதவ் 5 ரன்களில் நடையை கட்டினர்.
18.3 ஓவர்களில் 192 ரன்களுக்கு 9 விக்கெட்களை டெல்லி அணி இழந்தது. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்த நிலையில் அஷு தோஷ் சர்மா பதற்றமின்றி தாக்குல் ஆட்டம் மேற்கொள் டெல்லி கேப்பிடல்ஸ் 19.3 ஓவர்களில் 9 விகெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அஷுதோஷ் சர்மா 31 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல். மறுமுனையில் மோஹித் சர்மா 2 ரன்கள் எடுத்திருந்தார்.
ஆட்ட நாயகன் விருது வெற்ற அஷுதோஷ் சர்மா கூறும்போது, “கடந்த வருட ஆட்டத்தில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன். அந்த சீசனில் ஓரிரு சந்தர்ப்பங்களில் ஆட்டங்களை வெற்றிகரமாக முடித்து வைக்கும் வாய்ப்பை தவறவிட்டேன். ஆண்டு முழுவதும் அதை பற்றி சிந்தித்து, காட்சிப்படுத்திக் கொண்டிருந்தேன்.
கடைசி ஓவர் வரை நான் விளையாடினால் எதுவும் நடக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. விப்ராஜும் சிறப்பாக விளையாடினார். அவரிடம் பந்தை விளாசுமாறு கூறினேன். அழுத்தத்தின் போது அவர் மிகவும் அமைதியாக செயல்பட்டார். இந்த ஆட்ட நாயகன் விருதை இந்த விருதை எனது குருநாதர் ஷிகர் பாஜிக்கு சமர்ப்பணம் செய்கிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment