Published : 26 Mar 2025 07:28 AM
Last Updated : 26 Mar 2025 07:28 AM

வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் கொல்கத்தா: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று பலப்பரீட்சை

குவாஹாட்டி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு குவாஹாட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா ரைடர்ஸ் அணி முதல் ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வி கண்டிருந்தது. அதேவேளையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்திருந்தது.

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போனது. சுனில் நரேனை தவிர மற்ற அனைத்து பந்து வீச்சாளர்களும் ரன்களை வாரி வழங்கினர். புதிர் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தியாலும் எந்தவித திருப்புமுனையையும் ஏற்படுத்த முடியாமல் போனது.

எனினும் குவாஹாட்டி மைதானம் சுழலுக்கு கைகொடுக்கக்கூடியது என்பதால் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன் கூட்டணி ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். காயத்தில் இருந்து குணமடைந்து வரும் அன்ரிச் நோர்க்கியா களமிறங்கும் பட்சத்தில் வேகப்பந்து வீச்சும் பலம் பெறக்கூடும். அவர், விளையாடும் பட்சத்தில் ஸ்பென்சர் ஜான்சன் நீக்கப்படக்கூடும்.

கொல்கத்தா அணியின் நடுவரிசை பேட்டிங் கூடுதல் கவனமுடன் செயல்படக்கூடும். ஏனெனில் கடந்த ஆட்டத்தில் ரஹானே, சுனில் நரேன் ஜோடி டாப் ஆர்டரில் அதிரடியாக விளையாடி 10 ஓவர்களில் 107 ரன்கள் குவித்தனர். ஆனால் அவர்கள் ஆட்டமிழந்ததும் நடுவரிசையில் வெங்கடேஷ் ஐயர், ஆந்த்ரே ரஸ்ஸல், ரிங்கு சிங் ஆகியோர் வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்து நடையை கட்டினர். இதனால் கடைசி 10 ஓவர்களில் கொல்கத்தா அணியால் வெறும் 67 ரன்களையே சேர்க்க முடிந்தது. இவர்கள் 3 பேரும் சுதாரித்து விளையாடி இருந்தால் அந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியானது எளிதாக 200 ரன்களுக்கு மேல் குவித்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். மேலும் ரிங்கு சிங்குவை முன்கூட்டியே களமிறக்குவது குறித்தும் கொல்கத்தா அணி நிர்வாகம் ஆலோசிக்கக்கூடும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சும் முதல் ஆட்டத்தில் பலவீனமாக காணப்பட்டது. ஜோப்ரா ஆர்ச்சர் 76 ரன்களை வாரி வழங்கி ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்தார். அதேவேளையில் பசல்ஹக் பரூக்கி 49, தீக்சனா 52, சந்தீப் சர்மா 51, துஷார் தேஷ்பாண்டே 44 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் பந்துவீச்சில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.

பேட்டிங்கில் சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல் ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சாம்சன் 37 பந்துகளில், 66 ரன்களையும் துருவ் ஜூரெல் 35 பந்துகளில் 70 ரன்களையும் விளாசியிருந்தனர். இதேபோன்று இறுதிக்கட்ட ஓவரிகளில் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்ட ஷிம்ரன் ஹெட்மயர், ஷுபம் துபே ஆகியோரிடம் இருந்து மேம்பட்ட செயல் திறன் வெளிப்படக்கூடும். பொறுப்பு கேப்டன் ரியான் பராக் கூடுதல் உத்வேகத்துடன் செயல்படுவதில் கவனம் செலுத்தக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x