Published : 25 Mar 2025 07:43 AM
Last Updated : 25 Mar 2025 07:43 AM

வெற்றியுடன் தொடங்குமா பஞ்சாப் கிங்ஸ்? - குஜராத் டைட்டன்ஸுடன் இன்று மோதல்

அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் கிங்ஸ் அணி ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில் களமிறங்குகிறது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக செயல்பட்டிருந்தார். மேலும் 2020-ம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போதும் அந்த அணியின் கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் பணியாற்றியிருந்தார். இதனால் 18 வருடங்களாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் பஞ்சாப் கிங்ஸ் அணியையும் அவர், முன்னற்றம் அடையச் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் அணி 2008-ம் ஆண்டு அரை இறுதிப் போட்டிக்கும், 2014-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கும் முன்னேறியிருந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் கேப்டன் உட்பட பல்வேறு மாற்றங்களை அணியில் செய்து பார்த்த போதிலும் அதற்கான பலன் கிடைக்கவில்லை. அணியின் பெயரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்பதில் இருந்து பஞ்சாப் கிங்ஸ் என மாற்றிய போதிலும் வெற்றிகளை குவிக்க முடியவில்லை. கடைசி 4 சீசன்களிலும் டாப் 5 இடத்தை கூட பஞ்சாப் கிங்ஸ் அணியால் பிடிக்க முடியவில்லை.

இருப்பினும் இம்முறை அணி நிர்வாகம் ஸ்யேரஸ் ஐயரின் கேப்டன்ஷி மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளது. அவருடன் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும், புதிய தொடக்கத்தை உருவாக்க சிறந்த தளத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் அணியின் பேட்டிங்கில் ஸ்ரேயஸ் ஐயருடன், ஜோஷ் இங்லிஷ், பிரப் சிம்ரன் சிங், மார்கஸ் ஸ்டாயினிஸ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக்கூடும்.

ஆல்ரவுண்டர்களாக அஸ்மதுல்லா ஒமர்ஸாய், மார்கோ யான்சன், ஷசாங் சிங், முஷீர் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், லாக்கி பெர்குசன், குல்தீப் சென், யாஷ் தாக்குர் சவால்தரக்கூடும். சுழற்பந்து வீச்சில் யுவேந்திர சாஹல், ஹர்பிரீத் பிரார் நம்பிக்கை அளிக்கக்கூடும்.

மறுபுறம் குஜராத் டைட்டன்ஸ் அணி ஷுப்மன் கில் தலைமையில் களமிறங்குகிறது. அறிமுகமான 2022-ம் ஆண்டு சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணி அடுத்த ஆண்டில் 2-வது இடம் பிடித்தது. ஆனால் கடந்த சீசனில் 8-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தது. இம்முறை ஜாஸ் பட்லர் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். டாப் ஆர்டரில் அவர், ஷுப்மன் கில்லுடன் இணைந்து அதிரடி தொடக்கம் அமைத்து கொடுக்கக்கூடும்.

நடுவரிசையில் சாய் சுதர்சன், ஷெர்ஃபேன் ரூதர்போர்டு, ஷாருக்கான் பலம் சேர்க்கக்கூடும். பின் வரிசையில் ராகுல் டெவாட்டியா, கிளென் பிலிப்ஸ், ரஷித் கான் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழக்கூடும். சுழற்பந்துவீச்சில் ரஷித் கானுடன் வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ் வலுசேர்க்கக்கூடும். வேகப்பந்து வீச்சில் காகிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஜெரால்டு கோட்டிஸி, இஷாந்த் சர்மா கூட்டணி அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

அணிகள் விவரம்: குஜராத் டைட்டன்ஸ் - ஷுப்மன் கில் (கேப்டன்), அனுஜ் ராவத், ஜாஸ் பட்லர், குமார் குஷாக்ரா, ஷெர்பேன் ரூதர்போர்டு, சாய் சுதர்ஷன், ஷாருக் கான், கரீம் ஜனத், மஹிபால் லோம்ரோர், கிளென் பிலிப்ஸ், ரஷீத் கான், நிஷாந்த் சிந்து, மானவ் சுதார், ராகுல் டெவாட்டியா, வாஷிங்டன் சுந்தர், காகிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஜெரால்ட் கோட்ஸி, முகமது அர்ஷத் கான், குர்நூர் சிங் பிரார், ஆர்.சாய் கிஷோர், இஷாந்த் சர்மா, ஜெயந்த் யாதவ், குல்வந்த் கெஜ்ரோலியா.

பஞ்சாப் கிங்ஸ்: ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), பிரியான்ஷ் ஆர்யா, பைலா அவினாஷ், ஹர்னூர் சிங், ஜோஷ் இங்லிஸ், பிரப்சிம்ரன் சிங், விஷ்ணு வினோத், நேஹல் வதேரா, அஸ்மதுல்லா உமர்சாய், ஆரோன் ஹார்டி, மார்கோ யான்சன், கிளென் மேக்ஸ்வெல், முஷீர் கான், ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டாய்னிஸ், சூர்யான்ஷ் ஷெட்ஜ், அர்ஷ்தீப் சிங், சேவியர் பார்ட்லெட், யுஸ்வேந்திர சாஹல், பிரவீன் துபே, லாக்கி பெர்குசன், ஹர்பிரீத் பிரார், குல்தீப் சென், விஜயகுமார் வைஷாக், யாஷ் தாக்கூர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x