Published : 25 Mar 2025 07:30 AM
Last Updated : 25 Mar 2025 07:30 AM
சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணியை 9 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்களுக்குள் மட்டுப்படுத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
ரோஹித் சர்மா 0, ரியான் ரிக்கெல்டன் 13, வில் ஜேக்ஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். 36 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 10 ஓவர்களில் 82 ரன்கள் சேர்த்து வலுவாக மும்பை அணி இருந்த நிலையில் நூர் அகமதுவின் சுழலில் தோனியின் மின்னல்வேக ஸ்டெம்பிங்கால் சூர்யகுமார் யாதவ் (29) ஆட்டமிழந்தார். தொடர்ந்து திலக் வர்மா (31), ராபின் மின்ஸ் (3), நமன் திர் (17) ஆகியோரையும் நூர் அகமது பெவிலியனுக்கு திருப்பியதால் மும்பை அணியால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியாமல் போனது.
நூர் அகமது சரியான நேரத்தில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மாவை வெளியேற்றியதால் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பக்கம் திரும்பியது. ஏனெனில் களத்தில் நிலைபெற்றிருந்த அவர்கள் இருவரும் அதிரடி பாதைக்கு திரும்பும் நேரத்தில் தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர். நூர் அகமது 4 ஓவர்களை வீசி 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை சாய்த்தார். ரிஸ்ட் ஸ்பின்னரான அவர், ஆடுகளத்தின் தன்மையை சரியாக பயன்படுத்தினார்.
இதன் பின்னர் இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அற்புதமான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். ராகுல் திரிபாதி (2) விரைவிலேயே ஆட்டமிழந்த நிலையில் மற்றொரு தொடக்க வீரரான ரச்சின் ரவீந்திரா ரன்கள் சேர்க்க தடுமாறிக்கொண்டிருந்தார். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கியது முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சீராக ரன்கள் சேர்த்தார். 26 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் விளாசிய அவர், வெற்றிக்கான பாதையை எளிதாக அமைத்துக் கொடுத்தார்.
எனினும் ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருந்தால் ரிஸ்ட் ஸ்பின்னரான விக்னேஷ் புதூர் பந்துவீச்சில் சென்னை அணி சிறிது ஆட்டம் கண்டது. ஆனால் ரச்சின் ரவீந்திரா நிதானமாக விளையாடி 45 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் சேர்த்து சிஎஸ்கே அணி வெற்றிக் கோட்டை கடக்க உதவினார். இதன் 13 வருடங்களாக தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற முடியாமல் தவிக்கும் மும்பை அணியின் சோகம் இம்முறையும் தொடர்ந்தது. கடைசியாக அந்த அணி 2012-ம் ஆண்டு ஆர்சிபி அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தது.
போட்டி முடிவடைந்ததும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறும்போது, “பேட்டிங்கில் நாங்கள் 15 முதல் 20 ரன்களை குறைவாக எடுத்துவிட்டோம். ஆனால் வீரர்கள் போராடிய விதம் பாராட்டத்தக்கது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் மும்பை இந்தியன்ஸ் பெயர் பெற்றது. திறமைகளை கண்டறியும் குழுவினர் இதற்காக 10 மாதங்கள் தங்கள் உழைப்பை கொடுக்கிறார்கள். அவர்களால் கண்டறியப்பட்டவர்தான் விக்னேஷ் புதூர்.
ஆட்டம் ஆழமாக செல்லும் என கருதி விக்னேஷுக்கு ஒரு ஓவரை நிறுத்தி வைத்திருந்தேன். 18-வது ஓவரை அவருக்கு வழங்கியது ஒன்றும் மூளையற்ற செயல் இல்லை. ஆடுகளத்தில் பனிப்பொழிவு இல்லை. ஆனால் பந்தில் ஈரத்தன்மை இருந்தது. ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் செய்த விதமே ஆட்டத்தை எங்களிடம் இருந்து பறித்தது. அது வெகுதூரத்துக்கு கொண்டு சென்றுவிட்டது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment