Published : 24 Mar 2025 08:17 AM
Last Updated : 24 Mar 2025 08:17 AM
ஹைதராபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 47 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முன்னதாக தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் 31 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 67 ரன்களும் அபிஷேக் சர்மா 11 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 24 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர். நித்திஷ் குமார் ரெட்டி 15 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 30 ரன்களும் ஹென்ரிச் கிளாசன் 14 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 34 ரன்களும் விளாசினர். ராஜஸ்தான் அணி தரப்பில் பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே 3, மஹீஷ் தீக்சனா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
287 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் விக்கெட்களை விரைவாக இழந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (1), கேப்டன் ரியான் பராக் (4) ஆகியோர் சிமர்ஜீத் சிங் பந்திலும், நித்திஷ் ராணா 11 ரன்களில் முகமது ஷமி பந்திலும் வெளியேறினர். 4-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சனுடன் இணைந்து துருவ் ஜூரெல் அதிரடியாக விளையாடினார். இதனால் ராஜஸ்தான் அணி 8.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. சஞ்சு சாம்சன் 26 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார்.
துருவ் ஜூரெல் 28 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். அபாரமாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் 37 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் விளாசிய நிலையில் ஹர்ஷால் படேல் வேகம் குறைத்து வீசிய பவுன்சரை விளாச முயன்ற போது விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது.
அப்போது ராஜஸ்தான் அணி 14 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு 6 ஓவர்களில் 126 ரன்கள் தேவையாக இருந்தது. ஆடம் ஸாம்பா வீசிய 15-வது ஓவரின் 2-வது பந்தை துருவ் ஜூரெல் சிக்ஸருக்கு விளாச முயன்ற போது எல்லைக்கோட்டுக்கு அருகே இஷான் கிஷனிடம் கேட்ச் ஆனது. துருவ் ஜூரெல் 35 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் விளாசினார்.
கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 118 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் ஷிம்ரன் ஹெட் மயர், ஷுபம் துபே ஜோடி போராடியது. ஷிம்ரன் ஹெட்மயர் 24 பந்துகளில், ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 42 ரன்களும் ஷுபம் துபே 34 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரிகளுடன் 34 ரன்களும் விளாசிய போதிலும் அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை. முடிவில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி முழுமையாக 2 புள்ளிகளை பெற்றது. அந்த அணி சார்பில் சிமர்ஜீத் சிங் 2 விக்கெட்களையும் ஆடம் ஸாம்பா, ஹர்ஷால் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
200: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 14.1 ஓவர்களிலேயே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 200 ரன்களை எட்டியது. இதன் மூலம் விரைவாக 200 ரன்களை எட்டிய அணிகளின் சாதனையை ஆர்சிபியுடன் பகிர்ந்து கொண்டுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. ஆர்சிபி அணி 2016-ம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 14.1 ஓவர்களில் 200 ரன்களை எட்டியிருந்தது.
முதல் சதம்: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான இஷான் கிஷன் தனது முதல் சதத்தை விளாசினார். இதற்கு முன்னர் அவர், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி உள்ள போதிலும் அந்த அணிகளில் சதம் அடித்தது இல்லை.
2-வது அதிகபட்ச ஸ்கோர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 286 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் இது 2-வது அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. கடந்த சீசனில் ஆர்சிபி அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி 287 ரன்கள் குவித்ததே முதலிடத்தில் உள்ளது.
அதிக 250+ ஸ்கோர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 286 ரன்கள் குவித்தது. அந்த அணி 250+ ரன்களுக்கு மேல் குவிப்பது இது 4-வது முறையாகும். இதன் மூலம் உலக அரங்கில் டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 250+ ரன்களுக்கு மேல் குவித்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படைத்துள்ளது. இந்த வகை சாதனையில் சர்ரே (3 முறை), இந்திய அணி (3 முறை) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
கிளாசன் 1000 ரன்கள்: ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் ஆயிரம் ரன்களை எட்டிய வீரர்களின் பட்டியலில் ஹென்ரிச் கிளாசன் (594 பந்துகள்) 2-வது இடத்தை பிடித்துள்ளார். அவர், இந்த மைல்கல் சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது எட்டினார். இந்த வகை சாதனையில் ஆந்த்ரே ரஸ்ஸல் முதலிடத்தில் (545 பந்துகள்) உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...