Published : 24 Mar 2025 07:53 AM
Last Updated : 24 Mar 2025 07:53 AM
கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 18-வது சீசனின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்தது. 175 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணி பில் சால்ட் (56), விராட் கோலி (59), ரஜத் பட்டிதார் (34) ஆகியோரது அதிரடி பேட்டிங்கால் 22 பந்துகளை மீதும் வைத்து வெற்றி கண்டது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி கேப்டன் அஜிங்க்ய ரஹானே, சுனில் நரேன் ஆகியோரது அதிரடியால் 10 ஓவர்களில் 107 ரன்களை குவித்து மிரட்டியிருந்தது. இந்த ஜோடி ஓவருக்கு சராசரியாக 10 ரன்கள் வீதம் விளாசி பெங்களூரு பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. ஆனால் ஆட்டத்தின் நடுப்பகுதியில் சுனில் நரேன், ரஷிக் இஸ்லாம் பந்துவீச்சிலும், ரஹானே கிருணல் பாண்டியா பந்திலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து நடுவரிசையில் வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் ஆகியோரை வெளியேற்றி கொல்கத்தா அணியின் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினார் கிருணல் பாண்டியா. ஆந்த்ரே ரஸ்ஸல் 4 ரன்னில் சுயாஷ் சர்மா பந்தில் போல்டானார். கடைசி 10 ஓவர்களில் கொல்கத்தா அணியால் 67 ரன்களே எடுக்க முடிந்தது. கிருணல் பாண்டியா 4 ஓவர்களை விசி 29 ரன்களை மட்டும் வழங்கி 3 விக்கெட்களை வீழ்த்தினார். மேலும் வேகப்பந்து வீச்சில் ஜோஷ் ஹேசில்வுட் அற்புதமாக செயல்பட்டு 22 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களையும் கைப்பற்றி பலம் சேர்த்திருந்தார்.
போட்டிக்கு பின்னர் கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்ய ரஹானே கூறியதாவது: இது இந்த சீசனின் எங்கள் முதல் ஆட்டம். எதிர்கொள்ளும் முதல் பந்தில் இருந்து அடித்து விளையாடக்கூடிய வீரர்கள் எங்களிடம் உள்ளனர். சில விஷயங்களை நான் சுட்டிக்காட்ட விரும்பவில்லை. ஒரு அணியாக, ஒரு சில பகுதிகளில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம் என்று நான் நினைக்கிறேன். அதேவேளையில் ஒரு அணியாகவும், தனிப்பட்ட வீரர்களாகவும் மேம்படுத்தக்கூடிய பகுதிகள் உள்ளன.
மிடில் ஓவர்களில் அவுட் ஆன வீரர்கள், கடந்த காலங்களில் எங்களுக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளனர். எனவே, நான் அவர்களை ஆதரிப்பேன். அவர்கள், தங்கள் விளையாட்டை விளையாட முயன்றனர். அது வேலை செய்யவில்லை, ஆனால் பரவாயில்லை. இதுபோன்ற பல சூழ்நிலைகளை அவர்கள் கையாண்டுள்ளனர். அணியில் உள்ள வீரர்கள் தங்களது ஆட்டத்தை விளையாட முழு சுதந்திரம் வழங்கியுள்ளோம்.
ரிங்கு சிங், கேகேஆர் அணிக்கும், இந்திய அணிக்கும் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். குறிப்பாக டி 20 போட்டியில், அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரை பேட்டிங்கில் முன்கூட்டியே களமிறக்குவது குறித்து ஆலோசித்து கொண்டிருக்கிறோம். ஆனால் சில நேரங்களில் நீங்கள் சில சூழ்நிலைகளுடன் விளையாட வேண்டியிருக்கும். குறிப்பிட்ட சூழ்நிலையில் எந்த வீரர் சிறந்தவராக இருப்பார் என்பதை பார்க்க வேண்டும்.
10 ஓவர்கள் இருந்ததால் அங்ரிஷ் ரகுவன்சியை அனுப்பினோம். அவர், சிறந்த தேர்வாக இருப்பார் என்று நாங்கள் நினைத்தோம். நாங்கள் அச்சப்பட வேண்டிய தேவையில்லை அல்லது இதுகுறித்து நாங்கள் அதிகம் சிந்திக்கத் தேவையில்லை. பந்து வீச்சாளர்களுக்கு இது ஒரு கடினமான விளையாட்டு. அவர்கள், கடுமையாக முயற்சி செய்கிறார்கள், உழைக்கிறார்கள். ஆந்த்ரே ரஸ்ஸல் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். ஒரே போட்டியில் அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தப் போவதில்லை. எங்களிடம் ஐந்து முன்னணி பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அவர்கள் விக்கெட் வீழ்த்துபவர்கள். அதனாலேயே ரஸ்ஸல் பந்து வீச்சில் பயன்படுத்தப்படவில்லை.
பெங்களூரு அணியில் ஜோஷ் ஹேசில்வுட் சூழ்நிலையை சரியாக பயன்படுத்தி சிறப்பாக செயல்பட்டார். இந்த ஆடுகளத்தில் பந்துகள் சுழல்வதை காண விரும்புகிறோம். ஆடுகளத்தை பற்றி எந்த குறைகளும் இல்லை. எங்களிடம் உள்ள இரு சுழற்பந்து வீச்சாளர்களும் தரமானவர்கள். அவர்களால் எந்த ஆடுகளத்திலும் பந்துவீச முடியும்.
இவ்வாறு அஜிங்க்ய ரஹானே கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment