Published : 23 Mar 2025 08:04 PM
Last Updated : 23 Mar 2025 08:04 PM
ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது லீக் போட்டியில் 44 ரன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இந்த நிலையில் ஆட்டத்துக்கு பிறகு தங்கள் அணி இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம் என ராஜஸ்தான் அணியின் மாற்று கேப்டன் ரியான் பராக் தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விரட்டியது. சஞ்சு சாம்சன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். ஜெய்ஸ்வால் ஒரு ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ரியான் பராக், நிதிஷ் ராணா ஆகியோரும் விரைந்து விக்கெட்டை இழந்தனர்.
பவர்பிளே ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான். 4-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன் மற்றும் துருவ ஜுரல் இணைந்து 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சஞ்சு சாம்சன் 66 ரன்களிலும், ஜுரல் 70 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் வந்த ஹெட்மயர் 23 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷுபம் துபே 11 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். 4 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது ராஜஸ்தாரன்.
“நாங்கள் எதிர்பார்த்தது போலவே இது மிகவும் கடினமானதாக இருந்தது. ஹைதராபாத் அணி நன்றாக விளையாடியது. நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். இன்றைய ஆட்டம் குறித்து நாங்கள் கலந்து பேச வேண்டி உள்ளது. முதலில் பந்து வீசும் முடிவை நாங்கள் கூட்டாக சேர்ந்து எடுத்தோம். அது நல்ல முடிவு தான். அதை சிறப்பாக செயல்படுத்தி இருக்க வேண்டும்.
இது ஆட்டத்தில் இருந்து சில பாசிட்டிவ்களை நாங்கள் பெற்றுள்ளோம். துருவ், சஞ்சு பேட் செய்த விதம் அருமை. இன்னிங்ஸின் இறுதியில் ஹெட்மயர் மற்றும் ஷுபம் சிறப்பாக ஆடி இருந்தனர். துஷார் தேஷ்பாண்டே சிறப்பாக பந்து வீசி இருந்தார்” என ஆட்டத்துக்கு பிறகு ரியான் பராக் தெரிவித்தார்.
முன்னதாக, ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட் செய்தது.
அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இணைந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இன்னிங்ஸை தொடங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டினர். 11 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். தொடர்ந்து இஷான் கிஷன் களத்துக்கு வந்தார். இதுதான் சன்ரைசர்ஸ் அணிக்காக அவர் விளையாடும் முதல் போட்டி.
ஹெட் உடன் இணைந்த அவர், இரண்டாவது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 31 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஹெட் ஆட்டமிழந்தார். 9 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை அவர் விளாசினார். நிதிஷ் ரெட்டி, 15 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். கிளாஸன், 14 பந்துகளில் 34 ரன்கள் விளாசினார். சன்ரைசர்ஸ் அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்களின் ஸ்ட்ரைக் ரேட் 200+ என்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இதோடு ஓவருக்கு சராசரியாக 13+ ரன்கள் என்ற ஹைதராபாத் அணியின் ரன் ரேட்டையும் ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இஷான் கிஷன், 45 பந்துகளில் சதம் கடந்து அசத்தினார். கடைசி ஓவர் வரை ஆட்டமிழக்காமல் அவர் விளையாடினார். 11 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment