Last Updated : 23 Mar, 2025 08:39 AM

 

Published : 23 Mar 2025 08:39 AM
Last Updated : 23 Mar 2025 08:39 AM

சேப்பாக்கத்தில் மும்பை அணியுடன் இன்று மோதல்: வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் சிஎஸ்கே

கோப்புப்படம்

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி வழக்கம் போன்று சேப்பாக்கம் மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப தரமான சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அணிக்கு திரும்பி உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், சீனியர் வீரரான ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் இம்முறை நூர் அகமது, ஸ்ரேயாஷ் கோபால், தீபக் ஹூடாவும் சேர்ந்துள்ளனர்.

பேட்டிங்கை பொறுத்தவரையில் டாப் ஆர்டரில் ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா பலம் சேர்க்கக்கூடும். மிடில் ஆர்டரில் ஷிவம் துபே, ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்கள். பின்வரிசையில் ரவீந்திர ஜடேஜா, தோனி தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ளக்கூடும். வேகப்பந்து வீச்சில் மதீஷா பதிரனா எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும். அவருடன் கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி, சேம் கரண், அன்சுல் கம்போஜ் பலம் சேர்க்கக்கூடும்.

கடந்த சீசனில் ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட விவகாரத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டதால் மும்பை இந்தியன்ஸ் அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்குகிறது. பேட்டிங்கில் ரோஹித் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோருடன் வெளிநாட்டு வீரர்களான வில் ஜேக்ஸ், பெவன் ஜேக்கப்ஸ், ரியான் ரிக்கெல்டன் ஆகியோரும் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர்கள்.

காயம் காரணமாக ஜஸ்பிரீத் பும்ரா இன்னும் அணியில் இணையாத நிலையில் நியூஸிலாந்தின் டிரெண்ட் போல்ட் வேகப்பந்து வீச்சுக்கு பலம் சேர்க்கக்கூடும். சிஎஸ்கே அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் தீபக் சாஹர், இங்கிலாந்தின் ரீஸ் டாப்லே, கார்பின் போஸ் ஆகியோரும் நம்பிக்கைதரக்கூடும். சுழலில் மிட்செல் சாண்ட்னர், கரண் சர்மா, முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் உறுதுணையாக இருக்கக்கூடும். கடந்த சீசனில் கேப்டன் மாற்றத்தால் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துள்ளன. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை வலுவான செயல் திறனை வெளிப்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணிகள் விவரம்: சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேவன் கான்வே, எம்.எஸ்.தோனி, ராகுல் திரிபாதி, ஆந்த்ரே சித்தார்த், வன்ஷ் பேடி, ஷெய்க் ரஷீத், ரச்சின் ரவீந்திரா, ரவீந்திர ஜடேஜா, சேம் கரண், ஷிவம் துபே, தீபக் ஹூடா, விஜய் சங்கர், ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ், ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்ரேயஸ் கோபால், ராமகிருஷ்ண கோஷ், கலீல் அகமது, நேதன் எலிஸ், குர்ஜப்னீத் சிங், முகேஷ் சவுத்ரி, கமலேஷ் நாகர்கோட்டி, நூர் அகமது, மதீஷா பதிரனா.

மும்பை இந்தியன்ஸ்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா, பெவன் ஜேக்கப், ராபின் மின்ஸ், நமன் திர், ரியான் ரிக்கெல்டன், கிஷன் ஸ்ரீஜித், ராஜ் பாவா, கார்பின் போஸ், வில் ஜேக்ஸ், மிட்செல் சாண்ட்னர், திலக் வர்மா, ஜஸ்பிரீத் பும்ரா, டிரெண்ட் போல்ட், அஷ்வனி குமார், தீபக் ஷாகர், முஜீப் உர் ரஹ்மான், விக்னேஷ் பதூர், சத்யநாராயணா ராஜூ, கரண் சர்மா, அர்ஜூன் டெண்டுல்கர்.

நேருக்கு நேர்

  • ஆட்டங்கள் 37
  • சிஎஸ்கே வெற்றி 17
  • மும்பை வென்றி 20

சேப்பாக்கில் எப்படி? - சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை 8 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் 5 ஆட்டங்களிலும், சிஎஸ்கே 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x