Published : 22 Mar 2025 08:04 PM
Last Updated : 22 Mar 2025 08:04 PM

ஐபிஎல் ஸ்பெஷல்: வேளச்சேரி - கடற்கரை இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

சென்னை: ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ஒட்டி, பயணிகள் வசதிக்காக, வேளச்சேரி - கடற்கரை இடையே பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் மார்ச் 23, 28, ஏப்.11, 25, 30, மே 12 ஆகிய 6 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது. இலவச பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் மார்ச் 23, 28, ஏப்.11, 25, 30, மே 12 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே 3 பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வேளச்சேரியில் இருந்து இரவு 10.55 மணிக்கு சிறப்பு பாசஞ்சர் சிறப்பு ரயில் புறப்பட்டு, சேப்பாக்கத்தை இரவு 11.25 மணிக்கு அடையும். அங்கிருந்து புறப்பட்டு, நள்ளிரவு 11.45 மணிக்கு சென்னை கடற்கரையை அடையும்.

அதேபோல, சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10 மணிக்கு ஒரு பாசஞ்சர் சிறப்புரயில் புறப்பட்டு, சேப்பாக்கத்தை இரவு 10.10 மணிக்கு அடையும். அங்கிருந்து புறப்பட்டு, இரவு 10.45 மணிக்கு வேளச்சேரியை அடையும். மற்றொரு பாசஞ்சர் சிறப்பு ரயில் சேப்பாக்கத்தில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 12.05 மணிக்கு வேளச்சேரியை அடையும்.

சிறப்பு ரயில் பெருங்குடி, தரமணி, திருவான்மியூர், இந்திரா நகர், கஸ்தூரிபாய் நகர், கோட்டூர்புரம், பசுமைவழிச்சாலை, மந்தைவெளி, திருமயிலை, முண்டகண்ணி அம்மன் கோவில், கலங்கரைவிளக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, பார்க்டவுண், சென்னை கோட்டை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்தத்தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச பேருந்து ஏற்பாடு: மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபு சங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்திடம் பயணக் கட்டணம் பெற்றுக் கொண்டதன் அடிப்படையில், கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் பயணிகள், போட்டி நடைபெறும் 3 மணி நேரத்துக்கு முன்பும், பின்பும் பேருந்துகளில் (ஏசி பேருந்து தவிர) கட்டணமின்றி பயணிக்கலாம்.

போட்டிக்கு பின் அண்ணாசதுக்கம், ஓமந்தூரார் மருத்துவமனை, சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து பேருந்துகள் இயக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்ணாசிலை முதல் எம்ஏ சிதம்பரம் மைதானம் வரை சிற்றுந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x