Published : 21 Mar 2025 08:57 AM
Last Updated : 21 Mar 2025 08:57 AM
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிமுக சீசனான 2008-ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. கடந்த 3 சீசன்களிலும் அந்த அணி தாக்கத்தை ஏற்படுத்தியது. 2022-ல் 2-வது இடம் பிடித்த ராஜஸ்தான் அணி, அடுத்த ஆண்டில் 5-வது இடம் பிடித்தது. கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறியிருந்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. இதனால் இந்த சீசனில் முதல் 3 ஆட்டங்களுக்கு ரியான் பராக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், நித்திஷ் ராணா, துருவ் ஜூரெல், ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோர் தங்களது அதிரடியால் பலம் சேர்க்கக்கூடும்.கடந்த சீசன்களில் டாப் ஆர்டரில் பலம் சேர்த் ஜாஸ் பட்லர் இல்லாதது பின்னடைவை கொடுக்கக்கூடும். எனினும் ரியான் பராக் அதை நிர்வத்தி செய்யக்கூடும். இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, ஷுபம் துபே ஆகியோர் மீது எதிர்பார்ப்பு உள்ளது.
பந்து வீச்சை பொறுத்தவரையில் ஜோப்ரா ஆர்ச்சரின் வருகை பலம் சேர்க்கக்கூடும். அவருடன் அனுபவம் வாய்ந்த சந்தீப் சர்மா, பசல்ஹக் பரூக்கி, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் மத்வால் ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக உள்ளனர். சுழற்பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின், யுவேந்திர சாஹல் இல்லாத குறையை மஹீஷ் தீக்சனா, வனிந்து ஹசரங்கா பூர்த்தி செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் உலக அரங்கில் இவர்கள் இருவரும் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் ஹசரங்கா பேட்டிங்கிலும் கைகொடுக்கக்கூடியவர். இவர்களுடன் குமார் கார்த்திகேயா சிங்கும் வலுசேர்க்கக்கூடும்.
இது ஒருபுறம் இருக்க அணியில் அதிக அளவிலான ஆல்ரவுண்டர்கள் இல்லாதது பலவீனமாக பார்க்கப்படுகிறது. ஹசரங்கா மட்டுமே ஆல்ரவுண்டர் பட்டியலில் உள்ளார். ரியான் பராக், நித்திஷ் ராணா ஆகியோர் பகுதிநேர சுழற்பந்து வீச்சாளர்களாக செயல்படும் திறன் கொண்டவர்கள். ஆனால், நெருக்கடியான ஆட்டங்களில் இவர்களால் 4 ஓவர்களை திறம்பட வீச முடியுமா? என்பது சந்தேகம்தான்.
சரியான சமநிலையைக் கண்டறிந்து, காயம் பின்னடைவுகளைத் தவிர்க்க முடிந்தால், ராஜஸ்தான் அணி 2-வது முறையாக கோப்பையை கைகளில் ஏந்தலாம்.
ராஜஸ்தான் படை: சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், ஷுபம் துபே, ஷிம்ரன் ஹெட்மயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரெல், நித்திஷ் ராணா, குணால் சிங் ரத்தோர், வைபவ் சூர்யவன்ஷி, வனிந்து ஹசரங்கா, ஜோப்ரா ஆர்ச்சர், அசோக் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, பசல்ஹக் பரூக்கி, குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால், க்வெனா மபகா, சந்தீப் சர்மா, யுத்வீர் சிங்.
தங்கியவர்கள்: சஞ்சு சாம்சன் (ரூ.18 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ரூ.18 கோடி), ரியான் பராக் (ரூ.14 கோடி), துருவ் ஜூரெல் (ரூ.14 கோடி), ஷிம்ரன் ஹெட்மயர் (ரூ.11 கோடி), சந்தீப் சர்மா (ரூ.4 கோடி).
வெளியேறிய வீரர்கள்: யுவேந்திர சாஹல், ஜாஸ் பட்லர், அஸ்வின்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment