Published : 20 Mar 2025 07:52 AM
Last Updated : 20 Mar 2025 07:52 AM
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி இம்முறை வலுவாக களமிறங்குகிறது. முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான எம்.எஸ்.தோனி முழு உடற்தகுதியுடன் இருப்பது அணியின் பலத்தை அதிகரிக்கச் செய்யக்கூடும். கடந்த ஆண்டு காலில் ஏற்பட்ட காயத்துடன் விளையாடிய தோனி கேமியோ ரோல் மட்டுமே செய்தார். இறுதிக்கட்ட ஓவர்களில் களமிறங்கி 8 முதல் 10 பந்துகளை சந்தித்து பெரிய அளவிலான சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தியிருந்தார். ஆனால் இம்முறை அவர், முழு உடற்தகுதியுடன் இருப்பதால் எதிரணியின் பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவால் அளிக்கக்கூடும்.
சிஎஸ்கேவின் கடந்த கால வரலாற்றில் அந்த அணியின் தொடக்க ஜோடிகள் அற்புதமான செயல்திறனை வெளிப்படுத்தியிருந்தன முரளி விஜய்-மேத்யூ ஹைடன், முரளி விஜய்-மைக்கேல் ஹஸ்ஸி, ஷேன் வாட்சன்-டு பிளெஸ்ஸிஸ், ருதுராஜ் கெய்க்வாட்-டேவன் கான்வே ஜோடி என அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த வரிசையில் கடந்த 2024 சீசனில் சிஎஸ்கே அணியின் தொடக்க ஜோடி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த தவறியது. தொடக்க ஜோடியின் சராசரி 21.42 ஆக இருந்தது.
இந்த வகையில் 10 அணிகளிலும் சிஎஸ்கேவின் செயல்திறன் கடைசியாக இருந்தது. சீசன் முழுவதும் தொடக்க ஜோடியின் ரன்விகிதம் 7.79 ஆக மட்டுமே அமைந்திருந்தது. இதற்கு இம்முறை சிஎஸ்கே அணி தீர்வுகாணக்கூடும். டாப் ஆர்டரில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும். நடுவரிசையில் ஷிவம் துபே தாக்குதல் ஆட்டம் தொடுப்பதில் சிறப்பாக செயல்படக்கூடியவர்.
அவருடன் ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், தீபக் ஹூடா ஆகியோரும் பேட்டிங்கில் வலுசேர்க்கக்கூடும். எனினும் 2024 முதல் இவர்கள் 3 பேரின் செயல்திறன் டி20 வடிவில் சிறப்பானதாக இல்லை. ராகுல் திரிபாதி 12 ஆட்டங்களில் விளையாடி 288 ரன்களும், விஜய் சங்கர் 11 ஆட்டங்களில் விளையாடி 166 ரன்களும், தீபக் ஹூடா 15 ஆட்டங்களில் விளையாடி 323 ரன்களும் மட்டுமே எடுத்துள்ளனர். எனினும் சிஎஸ்கேவின் பட்டறையில் இவர்கள் கூர்தீட்டப்பட்டுள்ளனர். இதற்கான பலன் கிடைக்கக்கூடும்.
பந்து வீச்சை பொறுத்தவரையில் சுழலில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, ஸ்ரேயஸ் கோபால் ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும். இதில் ஜடேஜா, அஸ்வின் அல்லது நூர் அகமது பிரதான வீரர்களாக இருக்கக்கூடும். கடந்த சில சீசன்களில் சிஎஸ்கே அணியில் தீக்சனா முக்கிய பங்குவகித்தார். இந்த இடத்தை அஸ்வின் நிறைவு செய்யக்கூடும். வேகப்பந்து வீச்சில் மதீஷா பதிரனா கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக நிலையான செயல் திறனை வெளிப்படுத்தி வருகிறார்.
அவருடன் வெளிநாட்டு வீரர்களில் சேம் கரண், ஜேமி ஓவர்டன், நேதன் எல்லிஸ் ஆகியோரும் வலுசேர்க்கக்கூடும். இந்திய வீரர்களில் கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி, கமலேஷ் நாகர்கோட்டி, அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடும். இதில் அன்ஷுல் கம்போஜ் உள்ளூர் போட்டிகளில் சிறந்த திறனை வெளிப்படுத்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக சுழற்பந்து வீச்சு, வேகப்பந்து வீச்சு என இரண்டிலும் பல்வேறு திறன்கொண்ட வீரர்களை கலவையாக கொண்டுள்ளது சிஎஸ்கே. சேப்பாக்கம் ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருந்தாலும் சரி, வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தாலும் சரி, அதை சமாளிக்க போதிய வீரர்களை கொண்டுள்ளது.
6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை குறிவைக்கும் சிஎஸ்கே தனது முதல் ஆட்டத்தில் சொந்த மைதானத்தில் சமபலம் பொருந்திய 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. முதல் ஆட்டத்திலேயே சிஎஸ்கேவுக்கு கடும். சவால் காத்திருக்கிறது.
சிஎஸ்கே படை. ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேவன் கான்வே, எம்.எஸ்.தோனி, ராகுல் திரிபாதி, ஆந்த்ரே சித்தார்த், வன்ஷ் பேடி, ஷெய்க் ரஷீத், ரச்சின் ரவீந்திரா, ரவீந்திர ஜடேஜா, சேம் கரண், ஷிவம் துபே, தீபக் ஹூடா, விஜய் சங்கர், ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ், ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்ரேயஸ் கோபால், ராமகிருஷ்ண கோஷ், கலீல் அகமது, நேதன் எலிஸ், குர்ஜப்னீத் சிங், முகேஷ் சவுத்ரி, கமலேஷ் நாகர்கோட்டி, நூர் அகமது, மதீஷா பதிரனா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment