Published : 20 Mar 2025 07:05 AM
Last Updated : 20 Mar 2025 07:05 AM

எதிரணிகளுக்கு அஸ்வின் அச்சுறுத்தலாக இருப்பார்: சொல்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எல்.பாலாஜி

கோப்புப்படம்

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எல்.பாலாஜி கூறியுள்ளார்.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசனையொட்டி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணணையாளரான எல்.பாலாஜி அளித்த சிறப்பு பேட்டி:

இது 18-வது சீசன். இந்த தொடரின் வாயிலாக அதிக அளவிலான இளம் தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இங்கிருந்து இந்திய அணிக்கும் பலர் விளையாடி உள்ளனர். வருண் சக்ரவர்த்தி, சாய் சுதர்சன், ஷாருக்கான், மணிமாறன் சித்தார்த் உள்ளிட்ட பல தமிழக வீரர்கள் பல்வேறு அணிகளில் விளையாடி வருகின்றனர். அந்த வரிசையில் குர்ஜப்னீத் சிங், ஆந்த்ரே சித்தார்த் ஆகியோருக்கு இம்முறை சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

சிஎஸ்கே அணியில் பந்துவீச்சை பொறுத்தவரையில் பதிரனா கடந்த காலங்களில் திறமையை நிரூபித்துள்ளார். இம்முறை இளம் வீரர்களில்

அன்ஷுல் கம்போஜ் சிறப்பாக விளையாடக்கூடும். சமீபகாலமாக சேப்பாக்கம் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு கைகொடுத்துள்ளது. பந்துகள் நன்கு எகிறி வந்துள்ளன. ஸ்விங்கும் இருந்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் இரவில் நடைபெறுவதால்

குர்ஜப்னீத் இந்த சீசனில் தமிழக அணிக்காக விளையாடி உள்ளார். அவரையும் எதிர்பார்த்துள்ளனர். சேம் கரண் இதற்கு முன்னர் சிஎஸ்கேவில் விளையாடி உள்ளார். இதனால் எந்தமாதிரியான விஷயங்கள் இங்கே வேலை செய்யும் என்பதை அவர், அறிவார். பேட்டிங்கிலும் பின்வரிசையில் சேம் கரண் பலம் சேர்க்கக்கூடியவர்.

ரவிச்சந்திரன் அஸ்வின் டிஎன்பிஎல் தொடரில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டுள்ள போதிலும் சிஎஸ்கே அணியில் அவரது பேட்டிங் வரிசை எப்படி அமையும் என்பது கூறுவது கடினம். ஏனெனில் சிஎஸ்கே பேட்டிங் வரிசை வலுவானதாக உள்ளது. விக்கெட் சரிவை சந்தித்தால் ரவிச்சந்திரன் அஸ்வின் நிலைத்து நின்று விளையாடும் திறன் கொண்டவர். ஆனால் டாப் ஆர்டரில் ரச்சின் ரவீந்திரா உள்ளார். அவர், ஐசிசி தொடரில் தொடர் நாயகன் விருது வென்றுள்ளார். டேவன் கான்வே, ஷிவம் துபே, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், தீபக் ஹூடா என பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. ஒருவேளை சிஎஸ்கே விக்கெட் வீழ்ச்சியை சந்தித்தால் அஸ்வினை முன்கூட்டியே அனுப்புவது குறித்து அவர்கள் சிந்திக்கக்கூடும்.

அஸ்வின், ஜடேஜா பிரதான ஸ்பின்னர்களாக இருக்கக்கூடும். சேப்பாக்கம் ஆடுகளம் ரிஸ்ட் ஸ்பின்னருக்கு கடந்த காலங்களில் கைகொடுத்துள்ளது. ஒரு சீசனில் இம்ரான் தாஹிர் அதிக விக்கெட்களை வீழ்த்தி ஊதாநிற தொப்பியை வென்றிருந்தார். அதிலும் நூர் அகமது இடதுகை ரிஸ்ட் ஸ்பின்னர்.

சேப்பாக்கம் ஆடுகளத்தில் இடதுகை ரிஸ்ட் ஸ்பின்னருக்கு எதிராக ஒரு சில திசைகளில் ஷாட்கள் மேற்கொள்வது சிரமம். எனினும் என்னை பொறுத்தவரையில் சிஎஸ்கே அணியின் விளையாடும் லெவனில் முதல் தேர்வு டேவன் கான்வே இருக்கக்கூடும். ஏனெனில் அவர், ஏற்கெனவே தனது திறனை நிரூபித்துள்ளார்.

மேலும் சிஎஸ்கே அணி எப்போதுமே அனுபவத்தை பெரிதாக கருதும். இதன் பின்னர் ரச்சின் ரவீந்திரா, பதிரனா, சேம் கரண் ஆகியோர் இடம்பெறக்கூடும். ஏனெனில் முதலில் பேட்டிங் வலுவாக இருக்க வேண்டும். அதன் பின்னர் அதை மையமாக வைத்து பந்துவீச்சு அமைந்துவிடும். என்னை பொறுத்தவரையில் நூர் அகமது தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும்.

இம்முறை முக்கியமான ஆட்டங்கள் அனைத்திலும் அஸ்வின் விளையாடுவார். அவர், பிரதான சுழற்பந்து வீச்சாளர். காயம் ஏற்பட்டால் மட்டுமே அவர், விளையாடமாட்டார். அஸ்வினால் பவர்பிளேவிலும் பந்து வீச முடியும், இறுதிக்கட்ட ஓவர்களிலும் வீச முடியும். சிஎஸ்கே குழுவில் அவர், முக்கியமானவராக இருப்பார். கடந்த சில சீசன்களில் சிஎஸ்கே அணியில் அதிகளவிலான ஆல்ரவுண்டர்கள் இருந்தனர். இதனால் கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் தேவைப்பட்டதால் 3-வது சுழற்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை. ஆனால் இந்த முறை அப்படி இல்லை. இதனால் அஸ்வின் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அவருடைய செயல் திறன் சிஎஸ்கே அணிக்கு மிகவும் முக்கியம். சேப்பாக்கம் ஆடுகளத்தின் தன்மை அவருக்கு நன்றாகவே தெரியும்.

கடந்த முறை ராஜஸ்தான் அணிக்காக அஸ்வின் விளையாடி போது சேப்பாக்கத்தில் முக்கியமான கட்டத்தில் பேட்டிங்கில் 30 ரன்களும், பந்துவீச்சில் 2 விக்கெட்கள் வீழ்த்தி அணிக்கு பலம் சேர்த்திருந்தார். சேப்பாக்கம் மைதானத்ல் அவர், எப்போது விளையாடினாலும் மேட்ச் வின்னராக இருந்துள்ளார். சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளார். இதனால் எதிரணிகளுக்கு அஸ்வின் அச்சுறுத்தலாக இருப்பார்.

வேகப்பந்து வீச்சாளர் கமலேஷ் நாகர்கோட்டி காயம் காரணமாக கடந்த சீசன்களில் சிறப்பாக செயல்ட முடியாமல் போனது. யு-19 உலகக் கோப்பை அணியில் அவர், உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தியவர். நாகர்கோட்டிக்கு மீண்டும் ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல்தர கிரிக்கெட் போட்டியில் அவர், சிறப்பாக செயல்பட்டுள்ளதால் சிஎஸ்கே நம்பிக்கை வைத்து தேர்வு செய்துள்ளது. அவரிடம் திறமை உள்ளது. 145 முதல் 150 கி.மீ. வேகத்தில் பந்துகளை வீசியுள்ளார். ஆனால் தற்போது எப்படி முன்னேற்றம் காண்கிறார் என்பதை பார்க்க வேண்டும். ஹர்ஷித் ராணா, அர்ஷிதீப் சிங் போன்று வெற்றிகரமான பாதையில் கமலேஷ் நாகர்கோட்டியும் பயணிக்க வேண்டும்.

சிஎஸ்கே அணியின் சுழற்பந்து வீச்சு வலுவானது. அதேவேளையில் கேகேஆர் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன் புதிர் ஸ்பின்னர்கள். சிஎஸ்கே சுழற்பந்து வீச்சாளர்கள் ஏற்கெனவே திறமையை நிரூபித்தவர்கள். என்னை பொறுத்தவரையில் இந்த சீசனில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறக்கூடும்.

இவ்வாறு எல்.பாலாஜி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x