Published : 18 Mar 2025 08:24 AM
Last Updated : 18 Mar 2025 08:24 AM
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் கடந்த 4 சீசன்களாக தடுமாறி வருகிறது. கடைசியாக 2020-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி அதன் பின்னர் 2021-ல் 5-வது இடத்தையும், 2022-ல் 10-வது இடத்தையும், 2023-ல் 4-வது இடத்தையும், 2024-ல் கடைசி இடத்தையும் பிடித்து ஏமாற்றம் அளித்தது.
இந்த 4 சீசன்களிலும் அந்த அணி தங்களது தரத்திற்கு ஏற்ப திறனை வெளிப்படுத்தவில்லை. கடந்த ஆண்டு திடீரென ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது அணிக்குள் பல்வேறு குழப்பங்களை விளைவித்தது. இந்த மாற்றத்தை மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. இது களத்திலும் எதிரொலித்தது. சீசன் முழுவதும் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய அனைத்து மைதானங்களிலும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷமிட்டனர்.
எனினும் வரவிருக்கும் சீசனில் தங்கள் கடந்த கால பெருமையை மீட்டெடுக்க மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறந்த வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஏனெனில் கடந்த 12 மாதங்களில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணியின் சர்ச்சைக்குரிய அத்தியாயத்தில் இருந்த இரு சிறந்த வீரர்களும் தங்களது அற்புதமான செயல்திறனால் ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பட்டம் வெல்ல உறுதுணையாக இருந்தனர். டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 15 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் அந்த ஓவரை வெற்றிகரமாக நிறைவு செய்து ஹர்திக் பாண்டியா அசத்தியிருந்தார். இதன் மூலம் 11 ஆண்டுகளுக்குப்பிறகு இந்திய அணி ஐசிசி தொடரில் வாகை சூடியிருந்தது. இதனால் ஹர்திக் பாண்டியா மீதான ரசிகர்களின் பார்வை மாறத் தொடங்கியுள்ளது.
மறுபுறம், ரோஹித் சர்மா தனது கேப்டன்சியில் ஒரு பொற்காலத்தை அனுபவித்து வருகிறார். தொடர்ச்சியாக இரு ஐசிசி கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்துள்ளார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைக் குழு இணக்கமான முறையில் உள்ளது. எனவே இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் அதே வலுவுடன் செயல்பட்டு எதிரணிகளுக்கு சவால் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெகா ஏலத்தில் மும்பை அணி நிர்வாகம் வெளிநாட்டு வீரர்கள், இந்திய வீரர்களை சரியான கலவையில் புத்திசாலித்தனமாக தேர்வு செய்தது. நியூஸிலாந்தின் டிரெண்ட் போல்ட் அணிக்கு திரும்பி இருப்பது வேகப்பந்து வீச்சுக்கு வலுசேர்க்கக்கூடும். தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கார்பின் போஸ், இங்கிலாந்தின் ரீஸ் டாப்லே ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக் கூடியவர்கள். மேலும் சிஎஸ்கே அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் தீபக் சாஹரும் புதிதாக இணைந்துள்ளார். சுழலில் மிட்செல் சாண்ட்னர், கரண் சர்மா, முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் உறுதுணையாக இருக்கக்கூடும். முதுகு வலி காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜஸ்பிரீத் பும்ரா முதற்கட்ட ஆட்டங்களில் விளையாடுவது சந்தேகம் என்றே கருதப்படுகிறது.
மட்டை வீச்சில் ரோஹித் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோருடன் வெளிநாட்டு வீரர்களான வில் ஜேக்ஸ், பெவன் ஜேக்கப்ஸ், ரியான் ரிக்கெல்டன் ஆகியோரும் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர்கள். இளம் வீரர்களான ராபின் மின்ஸ், விக்னேஷ் பதூர், ராஜ் பாவா ஆகியோர் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே உடன் வரும் 23-ம் தேதி சென்னையில் மோதுகிறது.
மும்பை படை: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பெவன் ஜேக்கப், ராபின் மின்ஸ், நமன் திர், ரியான் ரிக்கெல்டன், கிஷன் ஸ்ரீஜித், ராஜ் பாவா, கார்பின் போஸ், வில் ஜேக்ஸ், மிட்செல் சாண்ட்னர், திலக் வர்மா, ஜஸ்பிரீத் பும்ரா, டிரெண்ட் போல்ட், அஷ்வனி குமார், தீபக் சாஹர், முஜீப் உர் ரஹ்மான், விக்னேஷ் பதூர், சத்யநாராயணா ராஜூ, கரண் சர்மா, அர்ஜூன் டெண்டுல்கர், ரீஸ் டாப்லே.
தங்கியவர்கள்: ஜஸ்பிரீத் பும்ரா (ரூ.18 கோடி), சூர்யகுமார் யாதவ் (ரூ.16.35 கோடி), ஹர்திக் பாண்டியா (ரூ.16.35 கோடி), ரோஹித் சர்மா (ரூ.16.30 கோடி), திலக் வர்மா (ரூ.8 கோடி).
வெளியேறிய வீரர்கள்: இஷான் கிஷன், டிம் டேவிட்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment