Published : 17 Mar 2025 10:58 PM
Last Updated : 17 Mar 2025 10:58 PM

“கிரிக்கெட்டில் ஏற்ற இறக்கங்கள் இயல்பானவை” - ஹர்திக் பாண்டியா அனுபவப் பகிர்வு!

கிரிக்கெட்டில் ஏற்ற இறக்கங்கள் இயல்பானவை. சமநிலையை கடைப்பிடிக்க வேண்டும். அமைதியாக, நிதானமாக செயல்பட்டால், ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் சரியாகப் பயன்படுத்தலாம் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜியோஹாட்ஸ்டார் தளத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: "ஐபிஎல் விளையாடத் தொடங்கி 11 ஆண்டுகளாகிறது. ஒவ்வொரு சீசனும் புதிய ஆற்றலையும், நேர்மறை உணர்வையும் தருகிறது. கடந்த சீசன் எங்கள் அணிக்கு சவாலாக இருந்தது, ஆனால் அதிலிருந்து விலைமதிப்பற்ற பாடங்கள் கிடைத்தன. அந்த அனுபவங்களை, 2025 சீசனுக்காக நாங்கள் அணியை உருவாக்கும்போது பயன்படுத்தினோம். இந்த முறை, மிகவும் அனுபவமுள்ள வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளோம். மிகவும் உற்சாகமாக உள்ளது. தற்போது, எங்களது திட்டங்களைச் செயல்படுத்துவதே முக்கியம். அதில் வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் எங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

ஐபிஎல் ஆட வரும் இளம் வீரர்கள் மிகுந்த திறமையுடையவர்கள். அவர்களுக்கு நான் சொல்ல விரும்பும் முக்கியமான விஷயம், உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நீங்கள் இங்கே வந்திருப்பதற்குக் காரணம் உங்கள் திறமையே. ஆனால் இளம் வயதில் அனைவரும் எதிர்கொள்ளும் பெரிய சவால், மனதில் எழும் சந்தேகங்கள். சில சமயம், அவர்கள் தங்களைப் பற்றியே சந்தேகப்படுவார்கள். இந்த மனநிலை அவர்களின் திறமையை பாதிக்கக்கூடும். அதனால், மனதை கட்டுப்படுத்துவதே மிக முக்கியம்.

நான் அவர்களுக்கு பகிர விரும்பும் பாடம் என்னவென்றால், கிரிக்கெட்டில் ஏற்ற இறக்கங்கள் இயல்பானவை. சமநிலையை கடைப்பிடிக்க வேண்டும். அமைதியாக, நிதானமாக செயல்பட்டால், ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் சரியாகப் பயன்படுத்தலாம். பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம்.

என் வாழ்க்கையின் சில கட்டங்களில், வெற்றியை விட முக்கியமானது, அந்த தருணங்களை கடந்து செல்லவேண்டும் என்ற மனப்பான்மை தான். என்னைச் சுற்றி என்ன நடந்தாலும், கிரிக்கெட் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தது. அதுவே எனது முன்னேற்றப் பாதையாக அமைந்தது. நான் தொடர்ந்து போராடினேன், கடுமையாக உழைத்தேன். இறுதியில், அந்த உழைப்புக்கு கிடைத்த வெற்றி, நான் நினைத்ததை விட பெரியதாய் அமைந்தது” இவ்வாறு ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x