Last Updated : 17 Mar, 2025 08:22 AM

 

Published : 17 Mar 2025 08:22 AM
Last Updated : 17 Mar 2025 08:22 AM

பஞ்சாப் அணிக்கு புத்தெழுச்சி கொடுப்பாரா ஸ்ரேயஸ் ஐயர்? - ஐபிஎல் 2025 அணி அலசல்

பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இல்லை. இம்முறை ஸ்ரேயஸ் ஐயர், ரிக்கி பாண்டிங் கூட்டணியில் அந்த அணி கடந்த கால சோதனைகளுக்கு தீர்வு காண வழியை கண்டறியக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி ஃபார்முலாவை பல ஆண்டுகளாக தேடி வருகிறது. ஒவ்வொரு சீசனிலும் அணியில் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்தாலும் வெற்றிகளை குவிப்பதற்கான வழியை கண்டறிய முடியாமல் திணறுகிறது. இந்த சீசனில் புதிய கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயரும், பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கும் அணியை வழிநடத்த உள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கெனவே டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்து செயல்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரின் வாயிலாக உறுதியான ஸ்திரத்தன்மையுடன் சரியான திசையில் பயணிக்க முடியும் என பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். பஞ்சாப் அணி கடைசியாக 2014-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறி 2-வது இடத்தை பிடித்திருந்தது. இம்முறை கேப்டன்ஷிப்பில் நிதானமாக செயல்படும் ஸ்ரேயஸ் ஐயர், பயிற்சி முறைகளில் ஆக்ரோஷம் காட்டக்கூடிய பாண்டிங் ஆகியோரது உதவியுடன் நீண்ட வருடங்களுக்குப் பிறகு பிளே ஆஃப் சுற்றில் நுழைவதை பஞ்சாப் அணி சாத்தியமாக்குவதில் முனைப்பு காட்டக்கூடும்.

நடுவரிசையில் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள் அதிகம் உள்ளது பஞ்சாப் அணியின் பலமாக பார்க்கப்படுகிறது. கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஷ், மார்கஸ் ஸ்டாயினிஸ் ஆகியோர் நடுவரிசையில் தங்களது தாக்குதல் ஆட்டத்தால் ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்தில் மாற்றும் திறன் கொண்டவர்கள். பேட்டிங்கில் வரிசையில் ஸ்ரேயஸ் ஐயர் 3-வது இடத்தில் களமிறங்குவது ஸ்திரத்தன்மையை அதிகரிக்கக்கூடும்.

வேகப் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் இறுதிக்கட்ட ஓவர்களில் பலம் சேர்க்கக்கூடியவர். அவருக்கு உறுதுயைக ஆல்ரவுண்டர் மார்கோ யான்சன், இளம் வீரர்களான யாஷ் தாக்குர், வைஷாக் விஜயகுமார், குல்தீப் சென் ஆகியோர் செயல்படக்கூடும். சுழலில் யுவேந்திர சாஹல் பலம் சேர்க்கக்கூடும்.

சர்வதேச போட்டிகளில் விளையாடிய நட்சத்திர வீரர்கள் பஞ்சாப் அணிக்கு வலுவானவர்களாக திகழ்ந்தாலும் இந்திய வீரர்களில் மட்டைவீச்சில் ஸ்ரேயஸ் ஐயரை தவிர மற்ற மேட்ச் வின்னர்கள் பெரிய அளவில் இல்லை. இந்த வகையில் பிரப்சிம்ரன் சிங், ஷாசங் சிங், நேஹல் வதேரா

முஷீர் கான் ஆகியோரை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும்.

கொல்கத்தா அணிக்கு கடந்த சீசனில் கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் கோப்பையை வென்று கொடுத்திருந்தார். அந்த அணி அனைத்து துறையிலும் வலுவாக இருந்தது பெரிய பலமாக இருந்தது. டாப் ஆர்டர், நடுவரிசை, பின்வரிசை என அனைத்திலும் தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் பேட்ஸ்மேன்கள் இருந்தனர். ஆனால் பஞ்சாப் அணியின் கட்டமைப்பு என்பது முற்றிலும் மாறுபட்டது. இதை கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் எவ்வாறு மாற்றியமைத்து வெற்றிப் பாதையில் பயணிக்கப் போகிறார் என்பது தொடரின் முதற்கட்ட ஆட்டங்களிலேயே தெரிந்துவிடும்.

பஞ்சாப் படை: ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்). பிரப்சிம்ரன் சிங், ஷஷாங்க் சிங், நேஹல் வதேரா, முஷீர் கான், விஷ்ணு வினோத், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மார்கோ ஜான்சன், அஸ்மதுல்லா ஒமர்ஸாய், ஹர்பிரீத் பிரார், யுவேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், விஜயகுமார் வைஷாக், யாஷ் தாக்குர், குல்தீப் சென், லாக்கி பெர்குசன்

தங்கியவர்கள்: ஷஷாங் சிங் (ரூ.5.5 கோடி), பிரப்சிம்ரன் சிங் (ரூ.4 கோடி).

வெளியேறியவர்கள்: ஹர்ஷால் படேல், அர்ஷ்தீப் சிங், சேம் கரண், ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டன், காகிசோ ரபாடா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x