Published : 16 Mar 2025 12:12 PM
Last Updated : 16 Mar 2025 12:12 PM
ஐபிஎல் வரலாற்றில் 17 வருடங்களாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் அணிகளுள் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரும் (ஆர்சிபி) ஒன்று. நட்சத்திர பட்டாளங்கள், அதிரடி பேட்ஸ்மேன்கள் படை என ஒவ்வொரு சீசனிலும் குதூகலமாக அந்த அணி களம் கண்ட போதிலும் சாம்பியன் கோப்பையை வெல்வது என்பது அந்த அணிக்கு கானல் நீராகவே உள்ளது. எனினும் இம்முறை 18-வது சீசனில் புத்தெழுச்சியுடன் களமிறங்குகிறது ஆர்சிபி. புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டுள்ளார்.
நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி அணியும் சீருடையின் எண் 18, இந்த சீசனும் 18. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் போட்டி தொடங்குவதற்கு முன்னரே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘இ சாலா கப் நம்தே’ என்ற வாசகத்தை கடந்த சில சீசன்களில் முன்னிலைப்படுத்திய ஆர்சிபி இம்முறை அதை அடைவதற்காக கூடுதல் உத்வேகத்துடன் செயல்படக்கூடும். ரஜத் பட்டிதார் தலைமையின் கீழ் மெகா ஏலத்தின் போது அணிக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டது.
கடந்த சீசனில் ஆர்சிபி அணி லீக் சுற்றில் முதல் 8 ஆட்டங்களில் 7 தோல்விகளை சந்தித்து கடும் நெருக்கடியில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் வியக்க வைக்கும் வகையில் கடைசி 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்து இருந்தது. இதில் சிஎஸ்கே அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் பெற்ற ‘த்ரில்’ வெற்றியும் அடங்கும்.
இந்த சீசனில் ஆர்சிபி அணியின் உரிமையாளர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சை பலப்படுத்தி உள்ளனர். ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட், அனுபவம் வாய்ந்த புவனேஷ்வர் குமார் ஆகியோரை அணிக்குள் கொண்டு வந்துள்ளது. இவர்கள் இருவருமே இறுதிக்கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்துவீசும் திறன் கொண்டவர்கள்.
மேலும், இடதுகை வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளும் பலம் சேர்க்கக்கூடியவர். பேட்டிங்கில் ஐசிசி டி20 தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் இங்கிலாந்தின் பில் சால்ட் பலம் சேர்க்கக்கூடும். கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங்கில் தொடக்க வரிசையில் பில் சால்ட் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார். அதே செயல் திறனை அவர், மீண்டும் வெளிப்படுத்தக்கூடும். மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மாவும் அணிக்கு பலம் சேர்க்கக்கூடியவராக திகழ்கிறார்.
இது ஒருபுறம் இருக்க இந்த சீசன் விராட் கோலிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக்கூடும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறந்த பார்மில் இருந்த அவர், இம்முறை ஆர்சிபி அணியின் சாம்பியன் பட்டம் வெல்லும் கனவு மெய்ப்பட உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும்.
பெங்களூரு படை: ரஜத் பட்டிதார் (கேப்டன்), விராட் கோலி, டிம் டேவிட், பில் சால்ட், ஸ்வஸ்திக் சிகாரா, தேவ்தத் படிக்கல், ஜிதேஷ் ஷர்மா, ஜேக்கப் பெத்தேல், மனோஜ் பண்டேஜ், லியாம் லிவிங்ஸ்டன், மோஹித் ராதி, கிருனல் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், ரசிக் தார், சுயாஷ் சர்மா, ஸ்வப்னில் சிங், நுவான் துஷாரா, அபிநந்தன் சிங், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார், லுங்கி நிகிடி.
தங்கியவர்கள்: விராட் கோலி (ரூ.21 கோடி), ரஜத் பட்டிதார் (ரூ.11 கோடி), யாஷ் தயாள் (ரூ.5 கோடி).
வெளியேறியவர்கள்: கிளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ், டூ பிளெஸ்ஸிஸ், கேமரூன் கிரீன்.
மோதல் விவரம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment