Published : 13 Mar 2025 11:48 PM
Last Updated : 13 Mar 2025 11:48 PM
ஜாஸ் பட்லரின் வெளியேற்றம், தோனி உடனான உறவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் பகிர்ந்துள்ளார்.
ஜியோஹாட்ஸ்டார் தளத்துக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: "ஐபிஎல் ஒரு அணியை வழிநடத்துவதற்கும், மிக உயர்ந்த தரத்தில் விளையாடுவதற்கும் வாய்ப்பு தருகிறது. அதேசமயம், பல நெருங்கிய நட்புகளையும் உருவாக்க உதவுகிறது. ஜாஸ் பட்லர் எனக்கு மிக நெருக்கமான நண்பர்களில் ஒருவர். நாங்கள் ஏழு ஆண்டுகள் சேர்ந்து விளையாடியுள்ளோம். ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக இருந்தோம். அவர் எனக்கு மூத்த சகோதரனைப் போல் இருந்தார். நான் கேப்டன் ஆனபோது, அவர் துணை கேப்டனாக இருந்து எனக்கு பெரிதும் உதவினார். அவரை வெளியே அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது எனக்கு மிகவும் கடினமான அனுபவமாக இருந்தது. இங்கிலாந்து தொடரின் போது கூட, அவரிடம் இதைப் பற்றிப் பேசினேன். இது எனக்கு எளிதாக மறந்துவிட முடியாத ஒன்று.
நான் ஐபிஎல்லில் ஒன்றை மாற்றலாம் என்றால், அது வீரர்களை வெளியேற்ற வேண்டிய விதியை மாற்றுவேன். இது ஒரு அணிக்குத் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் உணர்வுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, பல வருடங்களுக்கு கட்டியமைத்த உறவுகளை இழக்க நேரிடுகிறது. இது எனக்கு மட்டுமல்ல, முழு அணிக்கும், உரிமையாளர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் கடினமான ஒரு முடிவாக இருந்தது. ஜாஸ் எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதியாகவே இருந்தார்.
ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் வீரரும் தோனியின் அருகில் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். சென்னை அணிக்கு எதிராக விளையாடும்போதெல்லாம், அவருடன் உட்கார்ந்து பேச வேண்டும், அவர் எப்படி செயல்படுகிறார் என்று கேட்க வேண்டும் என்ற ஆசை எனக்கிருந்தது. அது என் கனவு போல இருந்தது.
ஷார்ஜாவில் சென்னைக்கு எதிராக நடந்த ஒரு போட்டியில் நான் 70-80 ரன்கள் எடுத்து, மேன் ஆஃப் தி மேட்ச் ஆனேன். அதன் பிறகு, தோனியை சந்தித்தேன். அன்றிலிருந்து நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். அண்மையில் கூட அவரை மீண்டும் சந்தித்தேன். என் கனவு நிஜமாகி விட்டது போல ஒரு உணர்வு. அவருடன் கலந்துரையாடுவது, வேலை செய்ய வேண்டிய சந்தர்ப்பங்களைப் பெறுவது எனக்கு பெரும் சந்தோஷமாக இருக்கிறது" இவ்வாறு சஞ்சு சாம்சன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment