Published : 07 Mar 2025 08:19 AM
Last Updated : 07 Mar 2025 08:19 AM

டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் தொடர்: பிரதான சுற்றில் 13 இந்திய போட்டியாளர்கள்

சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் தொடர் நடைபெற உள்ளது. சென்னையில் சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி நடத்தப்படுவது இது முதன்முறையாகும். இந்நிலையில் இந்தத் தொடாருக்கு இந்தியாவில் இருந்து 13 போட்டியாளர்கள் நேரடி தகுதி பெற்றுள்ளனர். தரவரிசையின் அடிப்படையில் இவர்கள் தேர்வாகி உள்ளனர்.

ஏற்கெனவே இரு முறை இந்தியாவில் நடைபெற்ற டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் தொடரில் பங்கேற்ற இந்திய போட்டியாளர்களின் எண்ணிக்கையைவிட இது அதிகமாகும். மார்ச் 25-ம் தேதி தொடங்க உள்ள இந்தத் தொடரில் உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஜப்பானின் டொமோகாசு ஹரிமோடோ, 5-வது இடத்தில் உள்ள ஹினா ஹயாடா தலைமையில் வலுவான வெளிநாட்டு வீரர், வீராங்கனைகளும் களமிறங்குகின்றனர்.

‘டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் சென்னை’ தொடரில் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரதான டிராவில் 48 பேர் இடம் பெறுவார்கள். அதே நேரத்தில் இரட்டையர் பிரதான டிராவில் (ஆடவர், மகளிர் மற்றும் கலப்பு) 16 ஜோடிகள் இடம் பெறும். இந்தப் போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.2.39 கோடியாகும். சாம்பியன்களுக்கு 600 புள்ளிகளும் வழங்கப்படும்.

மகளிர் ஒற்றையர் பிரிவு பிரதான டிராவில் இந்திய நட்சத்திரங்களான மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, அய்ஹிகா முகர்ஜி, யஷஸ்வினி கோர்படே இடம் பெற்றுள்ளனர். அதேவேளையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பிரதான டிராவில் ஜாம்பவான் சரத் கமல் தலைமையில் மானவ் தாக்கர், சத்தியன் ஞானசேகரன், ஹர்மீத் தேசாய் ஆகியோர் நேரடியாக தகுதி பெற்றுள்ளனர். இந்தியாவில் நடைபெறும் ஸ்டார் கன்டென்டர் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4 இந்தியர்கள் நேரடியாக விளையாட தகுதி பெற்றுள்ளது இதுவே முதன்முறையாகும்.

சமீபத்தில் ‘டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் தோஹா 2025’-ல் சாம்பியன் பட்டம் வென்ற ஜப்பானின் ஹரிமோட்டோ, பாரிஸ் ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு முன்னேறிய பிரேசிலின் ஹ்யூகோ கால்டெரானோ (உலகத்தரவரிசை 6) உள்ளிட்டோர் கடும் சவால்களை அளிக்கக்கூடும். பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஜப்பானின் ஹினா ஹயாடா, 6-வது இடத்தில் உள்ள மிவா ஹரிமோட்டோ ஆகியோர் இந்தத் தொடரில் பங்கேற்கும் டாப் 10 வீரராங்கனைகளில் முக்கியமானவர்கள்.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானவ் தாக்கர், மனுஷ் ஷா ஆகியோர் களமிறங்குகின்றனர். தற்போதைய நிலவரப்படி இந்த ஜோடியே போட்டித் தரவரிசையில் டாப்பில் உள்ளது. 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அய்ஹிகா, சுதிர்தா முகர்ஜி ஜோடி பெண்கள் இரட்டையர் பிரிவில் களமிறங்குகின்றனர். அதே நேரத்தில் யஷஸ்வினி கோர்படே, தியா சித்தலேவுடன் ஜோடி சேருகிறார். கலப்பு இரட்டையர் பிரிவில் மனுஷ் ஷா சித்தலே ஜோடி களமிறங்குகிறது. மற்றொரு ஜோடியாக ஹர்மீத் தேசாய், யஷஸ்வினி கோர்படே விளையாட உள்ளது இந்தியாவின் சவாலுக்கு வலு சேர்க்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x