Published : 05 Mar 2025 12:24 PM
Last Updated : 05 Mar 2025 12:24 PM

''ஒரு ஃபுல்டாஸை விட்டு விட்டேன்'' - கைநழுவிய வாய்ப்புகள் குறித்து ஸ்மித் வேதனை!

செவ்வாய்க்கிழமை துபாயில் ஆஸ்திரேலியா எனும் பெரும் தடையை விரட்டல் மன்னன் விராட் கோலி தன் அதி திறமையான ஆட்டத்தினால் இலக்கைக் கடந்து சாம்பியன்ஸ் டிராபி 2025, இறுதிப் போட்டிக்குள் இந்திய அணியை நுழையச் செய்தார்.

மாறாக கோலியின் சமகாலத்தவரும் ரூட், வில்லியம்சன், ஸ்மித், கோலி ஆகிய நான்மணிகளில் ஒரு மணியான ஸ்டீவ் ஸ்மித் நேற்று தவற விட்ட வாய்ப்புகளை நினைத்து வேதனை தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மாவுக்கு இரண்டு வாய்ப்புகள் நழுவ விடப்பட்டது, விராட் கோலி 51 ரன்களில் இருந்த போது ஒரு கேட்ச் வாய்ப்பு நழுவ விடப்பட்டது, ஆஸ்திரேலிய தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

இந்திய பவுலிங்கில் நான்கு தருணங்களை சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். ஒன்று டிராவிஸ் ஹெட்டை தன் புதிர் பந்தினால் வருண் சக்கரவர்த்தி வீழ்த்திய தருணம். இரண்டு, ஜடேஜா மிக மிக முக்கியத் தருணத்தில் அபாய வீரர் ஜாஷ் இங்லிஸை லெந்த்தை சட்டென ஷார்ட் செய்து வீசி வீழ்த்திய தருணம். 3-வது தருணம் ஸ்டீவ் ஸ்மித் மூளை மழுங்கிய ஒரு தருணத்தில் இறங்கி வந்து ஷமியை ஷாட் ஆட நினைத்து பவுல்டு ஆன தருணம். 4-வது 47-வது ஓவரில் அபாய வீரர் அலெக்ஸ் கேரியை ஸ்ரேயாஸ் ஐயர் நேரடி த்ரோவில் ரன் அவுட் செய்தது.

ஸ்மித்தோ, இங்லிஸோ, கேரியோ நின்றிருந்தால் ஸ்கோர் ஒரு கட்டத்தில் 300 செல்லும் என்ற நிலையே இருந்தது, குறைந்தது கேரி 50 ஓவர் நின்றிருந்தால் இன்னும் 20 ரன்களைக் கூடுதலாக ஆஸ்திரேலியா எடுக்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு இறங்கும் போதே நெருக்கடி ஏற்பட்டிருக்கும். ஆகவே இந்த 4 தருணங்கள் மிக முக்கியமானவை.

ஸ்மித்தும் தான் அவுட் ஆனது குறித்தும் ஆஸ்திரேலிய தோல்வி குறித்தும் வேதனையுடன் கூறும்போது, “நான் ஃபுல்டாஸை விட்டு விட்டேன். அது நல்லதல்ல. என்னுடைய திட்டம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுப்பதுதான். ஸ்பின் பவுலிங்கின் போது சிங்கிள் சிங்கிளாக ஆடுவதுதான். ஆனால் என் திட்டத்தைச் சரிவர செய்யவில்லை.

மிக முக்கியமான கட்டத்தில் என் விக்கெட்டை இழந்தேன். நான் மட்டும் கடைசி வரை நின்றிருந்தால் ஸ்கோர் 300 ரன்களை எட்டியிருக்கலாம்.. கேரி இன்னொரு முனையில் நன்றாக ஆடிக்கொண்டிருந்தார். நான் ஆட்டமிழந்தது அகால நேரத்தில், ஆனால் கிரிக்கெட்டில் இவையெல்லாம் எதிர்பார்க்கக் கூடியவைதான்.

300 ரன்களுக்கு மேல் ரன்களை அதிகப்படுத்த வாய்ப்புகள் நிறையவே இருந்தன. இன்னிங்ஸ் முழுதுமே விக்கெட்டை சீரான முறையில் இழந்தது பின்னடைவை சந்திக்க வைத்தது. ஏதாவது ஒரு கூட்டணியை கொஞ்சம் நீட்டித்திருந்தால் 290-300 ரன்களை எடுத்திருக்கலாம்.

இதன் மூலம் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம். கடந்த சில மாதங்களாக அதிக கிரிக்கெட் ஆடிவிட்டோம், அதனால் கொஞ்சம் களைப்படைந்த அணியாகி விட்டோம். 260 ரன்கள்தான் இருக்கிறது எனும்போது வரும் வாய்ப்புகளை விடக்கூடாது, கேட்ச்களை விட்டிருக்கக் கூடாது. யாரும் வேண்டுமென்றே கேட்சை விடமாட்டார்கள். இதுதான் கிரிக்கெட், அப்படித்தான் சில வேளைகளில் நடக்கும். இது ஆட்டத்தின் ஓர் அங்கம். என்ன செய்வது?” இவ்வாறு கூறினார் ஸ்டீவ் ஸ்மித். இதனிடையே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x