Published : 04 Mar 2025 10:46 AM
Last Updated : 04 Mar 2025 10:46 AM

ஆஸி உடனான அரை இறுதியில் விளையாடுவாரா வருண் சக்கரவர்த்தி? - சாம்பியன்ஸ் டிராபி

துபாய்: ஆஸ்திரேலிய அணி உடன் இன்று துபாயில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆடும் லெவனில் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த தொடரின் குரூப் சுற்று போட்டியில் நியூஸிலாந்து அணியை இந்தியா வீழ்த்த 33 வயதான வருண் சக்கரவத்தியின் சுழற்பந்து வீச்சு முக்கிய காரணமாக அமைந்தது. அந்தப் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 42 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இந்த தொடரில் அவர் விளையாடும் முதல் போட்டியாக அது அமைந்தது. அதோடு சர்வதேச அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் விளையாடிய இரண்டாவது போட்டியாகவும் அமைந்தது.

தனக்கு அணியில் கிடைத்த வாய்ப்பை சரியாக அவர் பயன்படுத்திக் கொண்டுள்ளார். இதனால் இன்று ஆஸ்திரேலியா உடன் நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் அவர் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கெனவே இந்திய அணியின் ஆடும் லெவனில் குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா என சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் நான்காவது சுழற்பந்து வீச்சாளராக அணியில் வருண் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், கடந்த ஆட்டத்தில் ஹர்ஷித் ராணா விளையாடாத பட்சத்தில் ஆடும் லெவனில் வருணுக்கு வாய்ப்பு கிடைத்தது.

ரவி சாஸ்திரி சொல்வது என்ன? - “ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பெரிதும் உதவும். அதில் சந்தேகம் இல்லை. அரை இறுதி மாதிரியான முக்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்து 240 முதல் 250 ரன்கள் எடுத்தாலே அதை விரட்டும் அணிக்கு சவாலான இலக்காக அமையும்.

ஆடும் லெவனில் தனக்கான இடத்தை தக்க வைக்கும் வகையில் தான் வருண் சக்கரவர்த்தி செயல்பட்டுள்ளார். ஆடுகளத்துக்கு ஏற்ற வகையில் ஆடும் லெவனை திட்டமிட வேண்டும். ஹர்திக் பந்து வீசுகிறார். மிடில் ஓவர்களில் யார் விக்கெட் வீழ்த்துகிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும். வருண் அந்த பணியை சிறப்பாக செய்கிறார். மேலும், அவரை ஆஸ்திரேலிய அணி அதிகம் விளையாடியது கிடையாது. அதனால் அவரை ஆடும் லெவனில் சேர்ப்பது சரியான சாய்ஸாக இருக்கும்” என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

“தனக்கு விளையாட கிடைத்த வாய்ப்பில் தன் திறனை வருண் நிரூபித்துள்ளார். அவரது ஆட்டம் இப்போது மேம்பட்டுள்ளது. துபாய் ஆடுகளம் மெதுவாக பந்து வீசுபவர்களுக்கு உதவுகிறது. அதை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம். ஆடும் லெவனில் யாரை சேர்ப்பது என்ற டெம்ப்ட் எங்களுக்கு உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் ஆர்டரை பொறுத்து அதை நாங்கள் முடிவு செய்வோம்” என இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x