Published : 04 Mar 2025 08:13 AM
Last Updated : 04 Mar 2025 08:13 AM

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் அரை இறுதியில் இன்று பலப்பரீட்சை | சாம்பியன்ஸ் டிராபி

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இரு அணிகளுமே லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காமல் அரை இறுதி சுற்றில் கால்பதித்துள்ளன. ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நிலையில் கடைசி ஆட்டத்தில் நியூஸிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. அதேவேளையில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியிருந்தது. இதன் பின்னர் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக மோத இருந்த ஆட்டங்கள் மழை காரணமாக ரத்தாகியிருந்தது.

ஐசிசி தொடர்களில் ஆஸ்திரேலிய அணி எப்போதுமே கூடுதல் உத்வேகத்துடன் செயல்படும். இதற்கு இம்முறையும் விதிவிலக்கு இல்லை. முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இல்லாமலேயே அந்த அணி அரை இறுதி சுற்றில் கால்பதித்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 352 ரன்கள் இலக்கை துரத்திய நிலையில் டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரிடம் இருந்து பெரிய அளவிலான பங்களிப்பு வெளிப்படாத போதிலும் வெற்றியை வசப்படுத்தியிருந்தது.

ஐசிசி தொடரின் நாக் அவுட் சுற்றில் கடைசியாக இந்திய அணி கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் கால் இறுதி சுற்றில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது. அதன் பின்னர் 2015-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை அரை இறுதி, 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஆகியவற்றிலும் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்திருந்தது.

ஐசிசி தொடரின் நாக் அவுட் சுற்றில் 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியாத சோகத்திற்கு இம்முறை இந்திய அணி தீர்வு காண முயற்சிக்கக்கூடும். இந்த விஷயத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு பலமாக இருப்பது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. துபாயில் விளையாடுவதற்கு தகுந்தபடி இந்திய அணியில் 5 சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்திருந்தது. ஆனால் இவற்றுக்கு நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் முடிவின் வாயிலாக இந்திய அணி பதிலடி கொடுத்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க ஒரே மைதானத்தில் இந்திய அணி விளையாடுவது சாதகமான விஷயமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் துபாய் ஆடுகளத்தை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சுக்கும் சாதகமாக இல்லை, சுழற்பந்து வீச்சுக்கும் சாதகமாக இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஏனெனில் இந்த ஆடுகளம் 270 முதல் 285 ரன்கள் வரை மட்டுமே எடுக்கக்கூடியது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் நிலைமைக்கு தகுந்தவாறு பொறுமையுடன் செயல்பட்டு விக்கெட்களை வீழ்த்துவதே பலமாக மாறியுள்ளது.

வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்களை கூட்டாக வேட்டையாடினர். அவர்கள் 4 பேரும் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்ததன் காரணமாகவே அதற்கான பலனை பெற முடிந்தது. இவர்கள் கூட்டாக சுமார் 37.3 ஓவர்களை வீசிய நிலையில் 128 பந்துகளில் ரன் ஏதும் விட்டுகொடுக்கவில்லை. சுழற்பந்து வீச்சில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துவதற்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இவர்கள் ஆஸ்திரேலிய அணிக்கும் அழுத்தம் கொடுக்கக்கூடும். ஆஸ்திரேலிய அணியில் பிரதான சுழற்பந்து வீச்சாளராக ஆடம் ஸாம்பா மட்டுமே உள்ளார். எனினும் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர்களான கிளென் மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட் ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும். தொடக்க வீரரான மேத்யூ ஷார்ட் காயம் காரணமாக விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக ஜேக் பிரேசர் மெக்கர்க் அல்லது சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கூப்பர் கானோலி களமிறங்கக்கூடும். இவர்களுக்கு எதிராக இந்திய அணியின் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஸ்ரேயஸ் ஐயர், ஷுப்மன் கில் போன்றவர்கள் சிறப்பாக செயல்படுவதில் முனைப்பு காட்டக்கூடும்.

ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் இந்திய அணிக்கு எதிராக எப்போதுமே சிறப்பாக செயல்பட்டுள்ளார். இதனால் அவரை விரைவிலேய ஆட்டம் இழக்கச் செய்வதில் இந்திய அணி கவனம் செலுத்தும். நிதானமாக செயல்படக்கூடிய ஸ்டீவ் ஸ்மித், மார்னஷ் லபுஷேன், தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ளக்கூடிய ஜோஷ் இங்லிஷ், அலெக்ஸ் கேரி ஆகியோரும் இந்திய பந்து வீச்சுதுறைக்கு நெருக்கடி தரகூக்கூடும். வேகப்பந்து வீச்சில் இடது கை பந்து வீச்சாளர்களான ஸ்பென்சர் ஜான்சன், பென் ட்வார்ஷுய்ஸ், மிதவேகப்பந்து வீச்சாளர் நேதன் எலிஸ் ஆகியோர் அனுபவம் இல்லாதவர்களான உள்ளனர்.

இவர்களை இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் கவனமுடன் எதிர்கொள்ளும் பட்சத்தில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பதிலடி கொடுப்பதற்கு முயற்சி செய்யக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x