Published : 28 Feb 2025 05:04 AM
Last Updated : 28 Feb 2025 05:04 AM
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அரை இறுதிக்கு முன்னேறுவதற்கு இந்த ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
இரு முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுடன் மோத இருந்த ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தனது கடைசி லீக் ஆட்த்தில் ஆஸ்திரேலிய அணி இன்று ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது.
3 புள்ளிகளுடன் தனது பிரிவில் 2-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி அரை இறுதிக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணியும் வெற்றி நெருக்கடியுடனே களமிறங்குகிறது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்த நிலையில் 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.
இந்த வெற்றியால் 2 புள்ளிகள் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தினால் 4 புள்ளிகளுடன் அரை இறுதியில் கால்பதிக்கலாம். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பவர்பிளேவில் 37 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் இப்ராகிம் ஸத்ரன் அசாத்தியமான மட்டை வீச்சை வெளிப்படுத்தி 177 ரன்களை விளாசி மிரளச் செய்தார்.
அவருக்கு உறுதுணையாக விளையாடிய அஸ்மதுல்லா ஓமர்ஸாய் பேட்டிங்கிலும் உரிய பங்களிப்பை வழங்கிய நிலையில் பந்து வீச்சுக்கு கைகொடுக்காத ஆடுகளத்தில் அபாரமாக செயல்பட்டு 5 விக்கெட்களை வேட்டையாடி அணியின் வெற்றியில் பிரதான பங்குவகித்தார். இவர்களுடைய உயர்மட்ட செயல் திறனால் இங்கிலாந்து அணி தொடரில் வெளியேற்றப்பட்டது. இதேபோன்று ஒரு செயல் திறனை மீண்டும் பிரதிபலிக்க செய்வதில் ஆப்கானிஸ்தான் அணி தீவிரம் காட்டக்கூடும்.
கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது. அதேபோன்று இம்முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அரை இறுதி சுற்றில் கால்பதிக்க ஆப்கானிஸ்தான் அணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை அந்த அணி பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கக்கூடும்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் (177) விளாசி சாதனை படைத்துள்ள இப்ராகிம் ஸத்ரன், கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி, அஸ்மதுல்லா ஓமர்ஸாய் ஆகியோரிடம் இருந்து மீண்டும் சிறந்த செயல் திறன் வெளிப்படக்கூடும். டாப் ஆர்டரில் ரஹ்மனுமல்லா குர்பாஸ், செதிகுல்லா அடல் ஆகியோரும் நடுவரிசையில் ரஹ்மத் ஷா, முகமது நபி, குல்பாதின் நயீப் ஆகியோரும் பேட்டிங்கில் கூடுதல் நம்பிக்கையுடன் செயல்படும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கலாம்.
ஆஸ்திரேலிய அணி 15 வருடங்களுக்குப் பின்னர் பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது. கடைசியாக அந்த அணி 2006, 2009-ம் ஆண்டில் கோப்பையை வென்றிருந்தது. ஆனால் 2013 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் இறுதி சுற்றுக்கு முன்னேறத் தவறியது. இம்முறை ஆஸ்திரேலிய அணி பிரதானமாக பேட்டிங்கை நம்பியே களமிறங்கியுள்ளது. ஏனெனில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் காயம் காரணமாக விளையாடவில்லை.
இதனால் அனுபவம் இல்லாத வேகப்பந்து வீச்சாளர்களே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி வருகின்றனர். இவர்களை உள்ளடக்கிய பந்து வீச்சுதுறை இங்கிலாந்து அணிக்கு எதிராக 351 ரன்களை தாரை வார்த்திருந்தது. ஆனால் பேட்டிங்கில் ஜோஷ் இங்லிஷின் தாக்குதல் ஆட்டத்தால் 352 ரன்கள் இலக்கை 15 பந்துகள் மீதும் வைத்து வெற்றி கண்டிருந்தது ஆஸ்திரேலிய அணி.
அந்த ஆட்டத்தில் 86 பந்துகளில், 120 ரன்கள் விளாசிய ஜோஷ் இங்லிஷிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். மேத்யூ ஷார்ட், அலெக்ஸ் கேரி, மார்னஷ் லபுஷேன் ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிராக 6 ரன்னில் ஆட்டமிழந்த டிராவிஸ் ஹெட், 5 ரன்னில் வெளியேறிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் பொறுப்புடன் செயல்பட முயற்சிக்கக்கூடும்.
பின்வரிசையில் தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ளக்கூடிய கிளென் மேக்ஸ்வெல், ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும். கடந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா குறைத்து மதிப்பிடாது என்றே கருதப்படுகிறது.
மேக்ஸ்வெல்லுக்கு திட்டமா? - ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அஸ்மதுல்லா ஷாகிதி கூறும்போது,“ நாங்கள் முழு ஆஸ்திரேலிய அணிக்கும் திட்டமிட்டுள்ளோம். கிளென் மேக்ஸ்வெல்லுக்கு மட்டும் திட்டமிடவில்லை. அவர், 2023-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் நன்றாக விளையாடினார் என்பது எனக்குத் தெரியும், ஆனால் அது வரலாற்றின் ஒரு பகுதி.அதன்பிறகு டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினோம். தனிப்பட்ட வீரர்களுக்கு எதிராக திட்டமிட நாங்கள் மைதானத்திற்கு வரவில்லை.
நாங்கள் மேக்ஸ்வெல்லுக்கு எதிராக விளையாடவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடுகிறோம். எங்கள் கவனம் விஷயங்களை எளிமையாக வைத்திருப்பதில் இருக்கும், அரை இறுதி குறித்து அதிகம் கவலைப்படமாட்டோம். நாங்கள் எங்கள் அடிப்படைகளை சிறப்பாக செய்ய முயற்சிப்போம், நல்ல திட்டமிடலுடன் களத்திற்கு வர முயற்சிப்போம்” என்றார்.
2023-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 292 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்த நிலையில் கிளென் மேக்ஸ்வெல் தனி வீரராக 201 ரன்கள் விளாசி அணிக்கு வெற்றி தேடிகொடுத்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment