Published : 26 Feb 2025 02:06 PM
Last Updated : 26 Feb 2025 02:06 PM

“KKR அணியின் கேப்டனாக தயார்!” - விருப்பத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் அய்யர்

ஸ்ரேயஸ் அய்யர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாகச் சென்ற பிறகே ஐபிஎல் 2025-ற்கு இன்னும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் கேப்டன் பொறுப்பிற்கு யார் என்பதை அறிவிக்கவில்லை. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் அய்யர் கேப்டன்சிக்குத் தான் தயார் என்று தெரிவித்துள்ளார்.

மார்ச் 22ம் தேதி ஈடன் கார்டன்ஸில் கொல்கத்தா அணி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைத் தன் முதல் போட்டியில் சந்திக்கின்றது. ரூ.23.75 கோடிக்கு மீண்டும் அய்யரை வாங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ், அய்யர் அல்லது அஜிங்கிய ரஹானே இருவரில் ஒருவரை கேப்டன் பொறுப்பிற்குத் தேர்வு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த ஒரு போட்டியிலும் இதுவரை கேப்டன் பொறுப்பு வகித்து அனுபவம் இல்லாத அய்யர் தன் ஆர்வத்தை வெளிப்படுத்துகையில், “நிச்சயமாக நான் தலைமைப் பொறுப்பிற்குத் தயார். கேப்டன்சி என்பது ஒரு அடையாளச் சீட்டு மட்டுமே, ஆனால் எனக்கு தலைமைத்துவம் எப்போதும் பிடித்தமான ஒன்று. தலைவராக இருப்பது பெரிய பங்கு எடுத்து சிறப்பிப்பதாகும்.

தலைமைத்துவப் பண்புடன் செயல்பட கேப்டன்சி என்ற அடையாளச் சீட்டுத் தேவையில்லை. நாம் உதாரணமாகத் திகழ்ந்தாலே போதும். நல்ல ரோல்-மாடலாக இருந்தாலே போதும். இதைத்தான் இப்போது நான் மத்தியப் பிரதேச அணியில் செய்து வருகிறேன்.

நான் ம.பி. அணியின் கேப்டன் அல்ல, ஆனால் அங்கு என் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு தனி நபரும், அவர் ரூ.20 லட்சம் கொடுத்து வாங்கப்பட்டிருந்தாலும் சரி, ரூ.20 கோடி கொடுத்து வாங்கப்பட்டிருந்தாலும் சரி, அவர் குரல் கேட்கப்பட வேண்டும். நம் கருத்தைச் சொல்ல சுதந்திரம் வேண்டும். அறிவுரைகளை நல்ல முறையில் எடுத்துக் கொள்ளும் சூழல் எனக்கு மிகவும் பிடித்தமானது.

நான் அப்படிப்பட்ட நபராக இருக்கவே ஆசைப்படுவேன், கேப்டன்சி என் கையில் வந்தால் நிச்சயமாக நான் விருப்பத்துடன் ஏற்பேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x