Published : 22 Feb 2025 11:14 PM
Last Updated : 22 Feb 2025 11:14 PM
லாகூர்: ஒருநாள் கிரிக்கெட்டில் நடப்பு உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, ஐசிசி நடத்தும் 50 ஓவர்கள் கிரிக்கெட் தொடரில் ரன் சேஸில் வரலாற்று சாதனை படைத்து இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஜாஷ் இங்கிலிஸ் அதிரடி சதம் விளாசினார்.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 4-வது போட்டியில் இன்று (பிப்.23) ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின. பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச முடிவு செய்தது. அந்த அணியில் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் போன்ற வீரர்கள் இந்த தொடரில் விளையாடவில்லை. அணியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்துகிறார்.
இந்தப் போட்டியில் முதலில் பெட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 351 ரன்கள் சேர்த்தது. பென் டக்கெட், 143 பந்துகளில் 165 ரன்கள் சேர்த்து அசத்தினார். ரூட், 68 ரன்கள் எடுத்தார்.
352 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது. டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அடுத்தடுத்த ஓவர்களில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் மேத்யூ ஷார்ட் மற்றும் லபுஷேன் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். லபுஷேன் 47 ரன்கள் மற்றும் ஷார்ட் 63 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அலெக்ஸ் கேரி + ஜாஷ் இங்கிலிஸ்: 5-வது விக்கெட்டுக்கு கூட்டு சேர்ந்த அலெக்ஸ் கேரி மற்றும் ஜாஷ் இங்கிலிஸ் இணைந்து 146 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது அந்த அணியின் வெற்றி கூட்டணியாக அமைந்தது. கேரி, 69 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் வந்த மேக்ஸ்வெல் உடன் இணைந்து 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் இங்கிலிஸ். அதோடு ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அவர் பதிவு செய்தார். 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இது ஐசிசி நடத்தும் 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமாக இலக்கை சேஸ் செய்யப்பட்ட ரன்களாக அமைந்துள்ளது. ஜாஷ் இங்கிலிஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்த தொடரில் நாளை (பிப்.22) நடைபெறும் குரூப் சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டி துபாயில் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment