Published : 18 Feb 2025 07:59 PM
Last Updated : 18 Feb 2025 07:59 PM
கராச்சி: உலகின் எந்தவொரு பந்து வீச்சாளருக்கும் சவால் அளிக்கும் திறன் கொண்டவர் இந்தியாவின் விராட் கோலி என பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹரீஸ் ரவூஃப் புகழ்ந்து பேசியுள்ளார்.
நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை பாகிஸ்தான் நாட்டில் தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன. நாளை மறுதினம் இந்திய அணி, வங்கதேசத்துடன் விளையாடுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. மற்ற போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறுகிறது.
இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் 23-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நேருக்கு நேர் விளையாடுகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹரீஸ் ரவூஃப், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை புகழ்ந்து பேசியுள்ளார்.
கடந்த 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மெல்பர்னில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் ஹரீஸ் ரவூஃப் வீசிய ஓவரில் இரண்டு சிக்ஸர்களை விராட் கோலி பறக்க விட்டிருந்தார். அது என்றென்றும் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத தருணமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
“அந்த சிக்ஸர்கள் குறித்து கோலி ஒருபோதும் என்னுடன் பேசியது கிடையாது. ஆனால், சமூக வலைதளங்களில் அது குறித்து வரும் தகவல் அனைத்தும் முரணானது. கோலியின் பேட்டிங்கை அனைவரும் பாராட்டுகிறார்கள். அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். எங்களுக்குள் நல்ல பிணைப்பு உள்ளது.
உலகின் எந்தவொரு பந்து வீச்சாளருக்கும் சவால் கொடுக்கும் பேட்டிங் திறன் படைத்தவர். எனக்கும் அப்படித்தான். துபாயில் வரும் ஞாயிற்றுக்கிழமை நாங்கள் விளையாட உள்ள ஆட்டம் அப்படியானதாக இருக்கும். அவருக்கு பந்து வீசுவதன் மூலம் நிறைய கற்றுக் கொள்ள முடியும்.
தசைப்பிடிப்பு பாதிப்பில் இருந்து மீண்டுள்ளேன். வலைப்பயிற்சியில் மிதமான வேகத்தில் பந்து வீசி வருகிறேன். ஆடும் லெவனில் இடம்பெறுவது குறித்து அணி நிர்வாகம் தான் முடிவு செய்யும்” என ஹரீஸ் ரவூஃப் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment