Published : 30 Jan 2025 12:42 PM
Last Updated : 30 Jan 2025 12:42 PM

விராட் கோலியை காண டெல்லி மைதானத்தில் திரண்ட ரசிகர்கள்: நெரிசலில் சிக்கி சிலர் காயம்

புதுடெல்லி: விராட் கோலி 12 ஆண்டுக்குப் பிறகு ரஞ்சி டிராபி தொடரில் விளையாடுகிறார். இந்நிலையில், டெல்லி அணிக்காக விளையாடும் விராட் கோலியைக் காண அருண் ஜேட்லி மைதானத்தில் காலையில் இருந்தே ரசிகர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் குறைந்தது மூவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

ரஞ்சி கோப்பை 2024-25 சீசனின் கடைசி லீக் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இதில், இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி பங்கேற்கும் போட்டி என்பதால் டெல்லி - ரயில்வேஸ் அணிகள் மோதும் போட்டி நேரலையில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று தொடங்கியது.

இந்நிலையில், டெல்லி அணிக்காக விளையாடும் விராட் கோலியைக் காண காலையில் இருந்தே ரசிகர்கள் திரண்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கேட் நம்பர்-16க்கு வெளியே, கூட்டம் கூடியதையடுத்து, ரசிகர்கள் யார் முதலில் உள்ளே செல்வது என்பதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அதில், போலீஸ் பைக் சேதமடைந்துள்ளது, மேலும், குறைந்தது மூவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காயமடைந்த ரசிகர்களுக்கு போலீஸார் சிகிச்சை அளித்தனர். ரசிகர்களில் ஒருவருக்கு காலில் கட்டு போடும் சூழல் ஏற்பட்டதாக தெரிகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது போலீஸ் ஒருவர் காயமடைந்தார். இவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை என கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். ஆரம்பத்தில், கேட் நம்பர் 16 உட்பட மூன்று வாயில்களை மட்டுமே திறக்க திட்டமிடப்பட்டிருந்தன. இருப்பினும், அதிகப்படியான கூட்டம் வந்ததன் காரணமாக, இறுதியில் ஒரு கூடுதல் வாயில் திறக்கப்பட்டது.

டெல்லி கேட் மெட்ரோ நிலையத்துக்கு மிக அருகில் உள்ள கேட் நம்பர் 16 மற்றும் 17க்கு வெளியே, காலை 8 மணிக்கே ரசிகர்கள் வரிசையில் நிற்கத் தொடங்கினர். ரசிகர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த பின்னரே கதவுகள் திறக்கப்பட்டதாக தெரிகிறது. கோலி ஆடும் போட்டியை நேரில் சென்று பார்க்க ஆதார் அட்டை இருந்தால் போதும், நுழைவுச் சீட்டு பெறலாம் என்கிற அறிவிப்பை நிர்வாகிகள் கூறியிருக்கிறார்கள். டெல்லி அணி டாஸ் வென்று பந்து வீசத் தேர்வு செய்ததை அறிந்ததும், விராட் கோலியின் பேடிங்கை பார்ப்பதற்காக காலையில் இருந்து மைதானத்திற்கு வெளியே காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது எனலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x